மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரிப்பில் இயக்குநர் இளமாறன் (புளூ சட்டை மாறன்) இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஆன்டி இண்டியன்.

இந்தப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா அக்டோபர் 8 மாலை பிரசாத் லேபில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இயக்குநர் புளூ சட்டை மாறன், தயாரிப்பாளர் ஆதம் பாவா, இணை தயாரிப்பாளர் மகேஷ், ஒளிப்பதிவாளர் கதிரவன், இயக்குநர் வேலு பிரபாகரன், நடிகர்கள் ஆடுகளம் நரேன், பசி சத்யா, விஜயா மாமி, சண்டைப் பயிற்சியாளர் ஹரி தினேஷ், இணை இசையமைப்பாளர் வில்லியம்ஸ் உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் ஒளிப்பதிவாளர் இயக்குநர் வேலு பிரபாகரன் பேசும்போது,

“மாறனைப் பார்க்கும்போது ஒருபக்கம் ரவுடி குணம் கொண்ட குழந்தை மாதிரி தெரிகிறார். இன்னொரு பக்கம் உன்னதமான குணங்களைக் கொண்ட சினிமா தாதா போலத் தெரிகிறார்.இப்படி ஒரு தாதா சினிமாவுக்கு தேவைதான்.

அவர் எடுத்திருக்கும் படம் கூட இன்று உலகையே ஆட்டிப்படைக்கும் மதம் பற்றிய படம் தான். சமூகப்பொறுப்புடன் கூடிய இயக்குநர்கள் இப்படிப்பட்ட படங்களைத்தான் எடுக்க வேண்டும்.

என்னுடைய எத்தனையோ கதைகளை பலபேர் காசு கொடுக்காமலே படமாக எடுத்துள்ளார்கள். பாலிவுட்டில் வெளியான டர்ட்டி பிக்சர் கூட என்னுடைய பேட்டியின் மூலம் சொல்லப்பட்ட கதை தான்.

ஆனால் மாறன் நான் சொன்ன கதைக்கு ஒரு நல்ல தொகை கொடுத்தார். அது இந்த கொரோனா காலகட்டத்தில் எனக்குப் பேருதவியாக இருந்தது.

என்றார்.

ஆடுகளம் நரேன் பேசும்போது,

“மறைந்த வெங்கட் மூலமாகத்தான் இந்தப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு வந்தது. மாறன் படம் இயக்குகிறாரா?, அதிலும் என்னை நடிக்க அழைக்கிறாரா?, இது வில்லங்கமா போயிடுமோ? என நினைத்தேன். காரணம் மாறனை ஒரு யூ டியூப் விமர்சகர் என்கிற அளவில் தான் நான் புரிந்து வைத்திருந்தேன்.

ஆனால் பேசும்போதுதான் அவர் எப்படிப்பட்ட விசய ஞானம், திட்டமிடுதல் கொண்டவர் என்பது தெரிந்தது, படப்பிடிப்பில் அவரைப் பொறுத்தவரை குழந்தை வடிவில் ஒரு கொலைகாரன் என்று கூடச் சொல்லலாம்.

அந்தளவுக்கு அவருக்குத் தேவையான விசயங்களைச் சிரித்த முகத்தோடு விடாப்படியாக நின்று வாங்கி விடுவார்.

இந்தப்படம் ரெடியானதும் என்னைப் பார்க்க அழைத்தார். ஆனால் உங்களை எப்படி கழுவி ஊற்றப் போகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வதற்காக நான் தியேட்டரில் ரசிகர்களோடு தான் படம் பார்க்கப்போகிறேன் என கூறிவிட்டேன்”

என பேசினார்.

தயாரிப்பாளர் ஆதம் பாவா பேசும்போது,

“குறைந்த நாட்களில் படத்தை எடுத்துள்ளோம் எனச் சொன்னதுமே சின்ன பட்ஜெட் என நினைத்து விடாதீர்கள்.. அத்தனை நாட்களிலும் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை வைத்து படப்பிடிப்பை நடத்தியுள்ளோம்.

படத்தின் முன் தயாரிப்புக்கும் நிறையச் செலவு செய்துள்ளோம்.

பின்னர் சென்சார் சான்றிதழ் பெறுவதற்கான போராட்டத்திலும் நிறையச் செலவு செய்துள்ளோம்.

விநியோகஸ்தர்களும் திரையரங்கு உரிமையாளர்களும் அதனை மனதில் வைத்துக்கொண்டு வியாபாரம் பேச வாருங்கள்.

இந்தப் படத்திற்கான சென்சார் சான்றிதழ் பெருகின்ற போராட்டத்தில், பல விசயங்களைப் புரிந்து கொண்டோம். சென்சார் சான்றிதழுக்கு விண்ணப்பிப்பவர்கள் தங்களது படத்திற்கு யு அல்லது யு/ஏ அல்லது ஏ என எந்த சான்றிதழ் பொருந்தும் என நீங்களே தீர்மானித்து அதற்கேற்ற சான்றிதழுக்கு விண்ணப்பியுங்கள்.

எந்தச் சிக்கலும் இன்றி எளிதாகக் கிடைத்து விடும். நாங்கள் எங்கள் படத்திற்கு யு சான்றிதழ் கேட்டதால் தான் இத்தனை சிக்கல்கள் எழுந்தது என்பதைப் பின்னர் தான் தெரிந்துகொண்டோம்.

நிச்சயம் இந்தப்படத்தை தியேட்டர்களில் தான் வெளியிடப் போகிறோம்.

எல்லோருடைய படங்களையும் விமர்சித்த மாறன் படத்தை நீங்கள் விமர்சிக்கப் போவதற்கு முன் இந்தப்படத்தில் ஹீரோ, ஹீரோயின், வில்லன், காமெடியன், ஒரே அடியில் பத்து பேர் பறக்கும் மாஸ் ஃபைட் என எதுவும் கிடையாது. ஒரு புதிய களத்தில் இப்படத்தை இயக்கியுள்ளார் என்பதையும் நினைவில் வைத்துகொண்டு விமர்சியுங்கள்.

சொன்ன தேதிக்கு முன்பாகவே சொன்ன பட்ஜெட்டில் தரமான படம் எடுத்துக் கொடுத்துள்ளார்.

உண்மையிலேயே இவர் தயாரிப்பாளர்களின் இயக்குநர். ரசிகர்களின் இயக்குநர். இருவரையுமே அவர் ஏமாற்ற மாட்டார்.”

எனக் கூறினார்.

இயக்குநர் புளூ சட்டை (இள)மாறன் பேசும்போது,

“இந்தக் கதையைத் தயார் செய்ததும் அதைப் பதிவெல்லாம் செய்யவில்லை. அதில் எனக்கு நம்பிக்கையும் இல்லை.

நடிகர் ஆர்கேவைச் சந்தித்து படம் பண்ணப் போகிறேன் எனக் கூறியபோது உனக்கெதுக்குய்யா இந்த வேண்டாத வேலை..?? நீ எப்படிப் படம் எடுத்தாலும் கழுவி ஊத்தத்தான் போறாங்க என அறிவுறுத்தினார்.

இதனால் படப்பிடிப்பு எண்ணத்தைத் தள்ளிவைத்துவிட்டு எனது கதையை பலரிடம் கூறி அபிப்ராயம் கேட்க ஆரம்பித்தேன். கதையையும் மெருகேற்ற ஆரம்பித்தேன்.

ஒருகட்டத்தில் என்னுடன் கூடவே உறுதுணையாக இருந்த இயக்குநர் சுப்ரமணிய சிவா, குழந்தையைக் குளிப்பாட்டி அழகாக்கலாம்.அதுக்காக குளிப்பாட்டி குளிப்பாட்டி கொன்னுடக்கூடாது.அபிப்ராயம் கேட்டது போதும் படத்தை உடனே ஆரம்பியுங்கள் என அறிவுரை கூறினார்.

அப்படித்தான் இந்தப்படம் துவங்கியது.

படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குநர் வேலு பிரபாகரனை அழைத்தபோது மறுக்காமல் ஒப்புக்கொண்டார்.

அந்த சமயத்தில் வேலு பிரபாகரன் என்னிடம் ஒரு கதை சொன்னார். அவரிடம் நைஸாகப் பேசி அந்தக் கதையை உடனே விலைகொடுத்து வாங்கிவிட்டேன்..

ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க 65 வயது நடிகை ஒருவர் தேவைப்பட்டார். ஆனால் பல நடிகைகள் பாட்டி கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்து விட்டார்கள். அப்போதுதான் பலவருடங்களாக சினிமாவில் நடனமாடி வந்த விஜயா மாமி பற்றித் தெரியவந்தது. அவர் அந்த ரோலுக்கு சரியாக இருந்தார். அவரை நடிக்க வைத்தோம். அவருக்கு உதவி செய்யும் குப்பத்து கதாபாத்திரத்தில் பசி சத்யா அற்புதமாக நடித்துள்ளார்.

படத்தின் இன்னொரு முக்கிமான கதாபாத்திரத்தில் நடிக்க மான்ஸ்டர் படத்தில் நடித்த அனில்குமாரை அழைத்து நடிக்க வைத்தோம். எங்கள் படத்தில் நடிக்க அவரை அழைத்தபோது, தனது மனைவி பொன்னியின் செல்வன் படத்தின் ஆடிசனில் கலந்துகொள்ள சென்னை வரும்போது, உங்களை வந்து சந்திக்கிறேன் என்றார்.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால் பொன்னியின் செல்வன் படத்திற்கு ஆடிசனில் கலந்துகொண்ட அவர் மனைவி செலக்ட் ஆகவில்லை. கூடவே துணைக்கு வந்த இவர் செலக்ட் ஆகிவிட்டார். அப்படியே எங்கள் படத்திலும் நடிக்க ஒப்புக்கொண்டார்.

அதேபோல வேறு ஒரு படத்திற்காகப் பேசி வைத்திருந்த ஷான் என்பவரை இந்தப்படத்தில் நடிக்க வைத்திருக்கிறேன்.குறுகிய காலத்தில் மிகப்பெரிய நடிகராக அவர் வருவார் பாருங்கள்.

இந்தப்படத்திற்கு முக்கிய தூணாக ஆடுகளம் நரேன் நடித்துள்ளார். இடைவேளைக்குப் பின் பதினான்கு நிமிடங்கள் கொண்ட ஒரே காட்சியை ஒற்றை ஆளாகத் தாங்கிப்பிடித்து நடித்துள்ளார்.

இத்தனைக்கும் 60 பேர் காம்பினேஷன் கொண்ட அந்தக் காட்சியை அவரது அற்புதமான நடிப்பால் ஒரே நாளில் படமாக்க முடிந்தது.

இந்தப்படத்திற்கு நான் இசையமைப்பாளர் என்றாலும் இசைப்பணிகளை எல்லாம் வில்லியம்ஸ் தான் கவனித்துக்கொண்டார். சில பேர் பாங்காங் போனால் தான் இசையமைக்க மூடு வரும் எனச் சொல்வார்கள். ஆனால் நாங்கள் ஆம்னி வேன் சைஸில் உள்ள ரூமில் உட்கார்ந்துகொண்டு இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளோம்.

படம் எடுத்து முடித்த பின்னர்தான் தயாரிப்பாளர் ஆதம் பாவா படம் பார்த்தார்.அவருக்கு ரொம்பவே பிடித்து விட்டதால், படம் நிச்சயம் வெற்றி பெறும்.அந்த வெற்றியை இன்னும் முழுமையாக்க வேண்டும் என்றால் நீங்கள் மீண்டும் ஏதாவது காட்சிகளைப் படமாக்கி இணைக்க விரும்பினால் கூட அதற்கு எத்தனை லட்சங்களையும் செலவு செய்யத் நான் தயார் எனக் கூறினார்.ஆனாலும் தேவையானவற்றை நாங்கள் சரியாக படமாக்கி விட்டதால் அவரிடம் வேண்டாம் எனக் கூறிவிட்டேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

 

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.