இசை – ரோஹித் குல்கர்னி
கதை,திரைக்கதை, இயக்கம் – தங்கர் பச்சான்.
தங்கர் பச்சானின் நாவலாய் இருந்து அவராலேயே சினிமாவாக்கப்பட்ட கிராமத்து அம்மாவைப் பற்றிய இப்படத்தின் இசை ரோஹித் குல்கர்னி என்னும் வட இந்தியர்(?). ஆல்பத்தில் நான்கு பாடல்கள். நான்கு இசைக் கோர்வைகள்.
’மும்பையிலிருந்து நாந்தான் கையப்புடிச்சி கூப்பிட்டு வந்தேன்’ என்று தங்கர் பச்சான் புளுகுவது போல் இவர் ஒன்றும் அறிமுகம் அல்ல.
ரோஹித் குல்கர்னி ஏற்கனவே போர்க்களம் என்கிற தமிழ்ப்படத்துக்கு
இசையமைத்தவர்.
மும்பையில் ’சொந்தமாக’ ஹைடெக் ரெக்கார்டிங் ஸ்டுடியோ அமைத்து அதில் தன் பாடல்களை தானே ரெக்கார்டிங் செய்து, ப்ரொட்யூஸ் செய்து வெளியிடுகிறார். தமிழ் நன்றாகப் பேசுகிறார். ஏற்கனவே சில ஹிந்திப் படங்கள், தெலுங்கு மேலும் தமிழ்ப் படங்கள் என்று பிஸியாகிக் கொண்டிருக்கிறார்.
ரெகார்டிங் ஸ்டுடியோ சொந்தமாக இருக்கிறதே ஒழிய,டியூன்கள் பல இடங்களிலிருந்து உருவப்பட்டவைகளே.
இவருடைய இசையமைப்பு கொஞ்சம் ரஹ்மான், கொஞ்சம் ஹாரிஸ், கொஞ்சம் ஜீ.வி.பிரகாஷ், கொஞ்சம் யுவன் (ராஜா இல்லை), கொஞ்சம் ஹிந்தி என்று சமவிகிதத்தில் கலந்து ஒரு ஜாடியில் போட்டு குலுக்கி மியூசிக் போட்டு எடுத்தால் என்ன வருமோ அது. அபஸ்வரம் இல்லை. தெளிவான ரெக்கார்டிங். மெல்லிய கருவிகளின் கோர்வை போன்ற விஷயங்கள் இவரது அட்வாண்டேஜ். ஜீவனைத் தொடுமா என்றால்….ம்..ஹூம்..
1. என்ன செஞ்சி போற – ராஜீவ் சுந்தரேசன்
நா.முத்துக்குமார்
காதல் வயப்பட்ட காதலன் காதலி மேல் பாடுவதாக வரும் பாடல். முத்துக்குமார் எழுதியது. வரிகள் பரவாயில்லை. ஹிந்திப் பட குழுப்பாடல்களின் சாயல். தேறிவிடும்.
2. அம்மாதானே – ஹரிசரண்
ஏகதேசி
ஏகதேசியின் வரிகளில் வித்தியாசம் தெரிகிறது. அம்மாவின் அருமை பெருமைகளையும் அவளின் தற்போதைய அவல நிலையையும் பாடும் பாடல். ஹரிசரண் பாடியிருக்கிறார். அழுத்தம் பத்தவில்லை. கேட்கலாம்.
3.ராஜபாட்டை(போடு தில்லாலே) – புஷ்பவனம் குப்புசாமி, ராகினிஸ்ரீ
நா.முத்துக்குமார்
புஷ்பவனம் குப்புச்சாமி பாடும் தெருக்கூத்து வகைப் பாடல் அழகியில் வரும் குருவி கொடைஞ்ச கொய்யா என்கிற பாடலை ஞாபகப் படுத்துகிறது.
4.நெஞ்சில் ஏனோ இன்று – ஹரிணி
பாடல் – ஏகதேசி
காதலி காதலனின் காதலில் இரவில் தனிமையில் பாடும் பாடலையொத்த ஒரு மெலடி. வழக்கம் போலத்தான்.
5.தலை முதல் பாதம் வரை – இசைக்கோர்வை
கரகாட்டக்காரனின் ‘மாங்குயிலே பூங்குயிலே’யில் வரும் ஆரம்ப நாதஸ்வர, மேளத்தின் சாயலோடு இந்த இசைக் கோர்வை தொடங்குவது தற்செயலா, காப்பியா அல்லது படத்தில் இயக்குனரின் வேண்டுகோளுக்கிணங்க செய்யப்பட்டதா..?
இதன் தொடர்ச்சியாக வரும் ‘வடநாட்டு சரக்கு’ டாஸ்மார்க்கில் குடித்தும் போதையேறாத தண்ணீர் கலந்த ஓல்ட் மன்க் போன்று ‘சவசவ’ என்று இருக்கிறது.
6.நெஞ்சில் ஏனோ இன்று – ஹரிசரண்
ஏகதேசி
ஹரிசரண் பாடும் சோகப்பாடல். வரிகள் பரவாயில்லை. பாடல் வழக்கமான 21ம் நூற்றாண்டு சோக இசையில் தமிழ்க் காதலன் பாடும் சோகப் பாட்டு. ஏதோ இருக்கிறது.
7,8.அம்மாவின் கை பேசி தீம் – 1 மற்றும் தீம் – 2.
படத்திற்காக இரண்டு வகையில் தீம் மியூசிக் போட்டிருக்கிறார். இதமான முதல் தீம் மியூசிக்கில். ரோஹித் ஜமாய்க்கிறார்.
இரண்டாவது தீம் மியூசிக் சுமார் தான். சோகம் என்று காட்ட வேண்டுமென்றே வயலினைப் போட்டு இழு இழு என்று இழுத்த மாதிரி இருக்கிறது.
“தமிழ் சினிமாவில் பிண்ணனி இசையென்பதே என்னவென்று தெரியாமல் இருக்கிறது. என் படத்தின் கணத்தை பல இசையமைப்பாளர்கள் பிண்ணனி இசையால் நிரப்பியே குறைத்துவிட்டார்கள். ரோஹித் குல்கர்னியுடன் இந்தப் படத்தில் இணைந்து பணியாற்றிய போது தான் சரியான பிண்ணனி இசையை கண்டுகொண்டேன்..” இது போன்ற அர்த்தம் தொனிக்க இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தங்கர் பேசிய அபத்தமான பேச்சுக்கு இந்த ஆல்பம் உண்மையாக இருக்கிறதா ?
பாடல்களைப் பார்த்தால் அந்த அளவுக்கு நம்பிக்கை வரவில்லை. ஸாரி தங்கர். உங்கள் பழைய படங்களின் வெற்றிக்கு அதன் இசையமைப்பாளர்கள் தான் முக்கிய காரணங்களாக இருந்தார்கள் என்பதை நீங்கள் வசதியாக மறந்துவிட்டீர்கள். திடீரென்று எங்கிருந்தோ வந்த ரோஹித் உங்களுக்கு இசை ஞானியாக மாறி விட்டார். (இதற்குக் காரணம்? இசை ஞானியிடம் வழக்கம் போல் நைசாக பணமின்றி இசை அமைத்துத் தர கேட்க முயன்று நீங்கள் நறுக்கென்று மண்டையில் குட்டு வாங்கியதாகச் சொல்கிறார்களே ! உண்மையா ?)
ரோஹித்தின் பாடல் இசை ஓகே ரகம் தான். ஆனால் தங்கர் புல்லரித்துக் கூறுமளவு ஓஹோ என்று இல்லை. ரஹ்மான் கிராமத்திய இசையமைத்துக் கேட்ட போது (உழவன், கிழக்குச் சீமையிலே) உண்டான அதே அந்நியப்படுத்தப்பட்ட உணர்வு தான் அம்மாவின் கை பேசியைக் கேட்கும் போதும் எழுகிறதேயன்றி கிராமத்து இசையின் யதார்த்த நிலையல்ல.
கிராமங்களே அழிந்து நகரங்களின் பின்னால் வெறிபிடித்து அலைந்து கொண்டிருக்கும் போது கிராமமாவது இசையாவது என்கிறீர்களா. அதுவும் சரிதான்.
ரோஹித் குல்கர்ணியின் பிண்ணனி இசை படம் வந்தால் தான் தெரியும். அப்போது ரோஹித்தின் பிண்ணனி இசை பற்றிய தங்கரின் வரிகளை மீண்டும் நாம் கேட்போம்… பார்ப்போம்.
–மருதுபாண்டி.