நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனா பாதிப்பால் நேற்று மாலை 7 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 48 . மார்ச் மாதம் இறுதியில் அவருக்கு கொரோனா பாதிப்பால் தொடர்ந்து உடல் நிலை மோசமடைந்தது . அதனால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சிவாஜி கணேசன் நடித்த ‘நெஞ்சங்கள்’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர், நடிகை மீனா. ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ படத்தில் ரஜினிகாந்துடன் சிறுமியாக நடித்தார். ‘என் ராசாவின் மனசிலே’ படத்தில் கதாநாயகி ஆனார். ‘எஜமான்’, ‘அவ்வை சண்முகி’, ‘முத்து’, ‘ராஜகுமாரன்’, ‘நாட்டாமை’ உள்பட ஏராளமான தமிழ்ப்படங்களிலும், தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களிலும் நடித்து பிரபலம் ஆனார்.
தென்னிந்திய கதாநாயகிகளில் மிக முக்கியமான கதாநாயகியாக மீனா திகழ்ந்தார். இவருக்கும் பெங்களூருவைச் சேர்ந்த கணினிப் பொறியாளர் வித்யாசாகருக்கும் 2009 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு நைனிகா என்ற ஒரே ஒரு மகள் இருக்கிறார். நைனிகாவும் சினிமாவில் நடித்து வருகிறார். விஜய்யுடன் ‘தெறி’, அரவிந்த்சாமியுடன் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார்.
சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு, கொரோனாவிற்கு பிந்தைய பாதிப்புகளாக நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக பல மாதங்களாக அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். நுழையீரல் பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வித்யாசாகர் நேற்று உயிரிழந்தார். மாற்று நுரையீரல் பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டு வந்த நிலையில் வித்யாசாகரின் உடல்நிலை மோசமடைந்து, அவரது உயிர் பிரிந்துள்ளது.
அவருடைய கணவரின் எதிர்பாராத மறைவு திரையுலகினரைக் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்று மதியம் 2 மணிக்கு பெசன்ட் நகர் மயானத்தில் உடல் தகனம் செய்யப்படும்.