நாட்டின் பலமூலைகளிலிருந்தும் ஆதரவுக்குரல்கள் பெருகிவரும் நிலையில், சனியன்று நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில், சற்று உணர்ச்சிப் பிரவாகமாகவே காணப்பட்டார் கமல். சன் தவிர மற்ற டி.டிஹெச் நிறுவனத்தினர் அனைவரும் பங்குகொண்ட,பத்திரிகையாளர்கள் சந்திப்பில் டி.டி.ஹெச்தொழில்நுட்பத்தை எதிர்ப்பவர்களை சட்டவிரோதமாகச் செயல்படும் தேசதுரோகிகள் என்று குறீப்பிடும்
அளவுக்கு கமல் சென்றதற்குக் காரணமே ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்தவர்களிடமிருந்து கூட கடைசி நேரத்தில் அவருக்கு கிடைத்த வரவேற்பு.
சில தினங்கள் முன்பு வரை கூட எதிரணியிலிருந்த கே.ஆர், தயாரிப்பாளர் சங்கத்தலைவராயிருந்து மவுனம் காத்து வந்து வந்த விஜயின் தந்தை எஸ்.ஏ.சி, கோவையின் பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம்[ இயக்குனர் இமயம் நம்ம பாரதிராசா உணர்ச்சி வசப்பட்டது பார்க்க தனிச்செய்தி] ஆகியோர் கலந்துகொண்டு கமலுக்கு ஆதரவுக்கரம் நீட்டி கமலின் டி.டி.ஹெச். துணிச்சலுக்கு ஆதரவுக்கரம் நீட்ட, இறுதியில் பேசிய கமல், எதிரிகளை ஏறத்தாழ பொழந்து பொட்டலம் கட்டினார் என்றுதான் சொல்லவேண்டும்.
‘ ஒவ்வொருமுறை புதிய தொழில்நுட்பம் புறப்படும்போதும் இப்படி ஆகாயத்துக்கும் பூமிக்குமாய் குதிப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். எதற்கெடுத்தாலும் தியேட்டர்கள் மூடப்படுவதாக சுட்டிக்காட்டுகிறார்கள். எனக்குத்தெரிந்து இந்த தியேட்டர் மூடும் பூச்சாண்டியை 40 வருடங்களாக சொல்லிக்கொண்டு திரிகிறார்கள். தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப தன்னைப் புதுப்பித்துக்கொள்ளாத தியேட்டர்கள் மூடப்படுவதில் தவறொன்றும் இல்லை. சரியாக பராமரிக்கப்படாத கோயில்களையே மூடவேண்டிய நிலை வரும்போது தியேட்டர்கள் எம்மாத்திரம்? என்னையே எடுத்துக்கொள்ளுங்கள், நான் சரியாக நடிக்காவிட்டாலோ, என் படங்களில் ஒன்ரண்டு தொடர்ந்து ஓடாமல் போனாலோ, என்னை வீட்டுக்கு அனுப்பிவிடமாட்டார்களா? அதுபோல்தான் எல்லாமே.
இந்த டி.டி.ஹெச் வியாபார வாய்ப்பு என்பது என் படத்துக்கு மட்டும் என்று நான் சுயநலமாக ஏற்படுத்திக்கொண்டதல்ல. இனி வரும் அனைவரும் பயன்படுத்த உகந்த ஒரு இனிய தொழில்நுட்பம்தான். ஒரு குளத்தைக் கண்டுபிடித்து நான் ஒரு பிடி தண்ணீர் குடித்திருக்கிறேன். நீங்களும் உங்கள் சக்திக்கு ஏற்றாற்போல் அந்த குளத்தில் தண்ணீர் குடிக்கலாம்.
டி.டி.ஹெச்சில் படத்தை ரிலீஸ் பண்ணும் முயற்சியை இதற்கு முன்பு மும்பையில் எனது சகநடிகர் முயற்சித்து தோற்றுப்போனார். காரணம், படத்தை விநியோகஸ்தர்களுக்கு எம்.ஜி. முறையில் விற்று பாதுகாப்பாகி விட்டு மற்றவர்களை ரிஸ்க் எடுக்கவைக்க முயற்சித்தார்.இப்போது நான் படத்தை முழுக்க முழுக்க என் ரிஸ்கில் தான் ரிலீஸ் செய்கிறேன். லாபம் வந்தால் பங்குபோட்டுக்கொள்ளலாம். நஷ்டம் வந்தால் நான் மட்டும் ஏற்றுக்கொள்கிறேன் என்கிறேன். இதற்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்பதைத்தான் புரிந்துகொள்ளமுடியவில்லை. இதுவே திருட்டு வி.சி.டி.க்காரர்கள் கொள்ளையடித்தால் அமைதியாக ஏற்றுக்கொள்கிறார்கள்’’
கமலின் கேள்விகளுக்கு பதில் சொல்ல யாராவது இருக்கீங்களா, இல்லைன்னா, டி.டி.ஹெச்.ல படத்தை புக் பண்ண கிளம்பிட்டிங்களா?