டெல்லி பஸ்ஸில் கொடூரமாக கற்பழிக்கப்பட்ட மாணவி, சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்ததைத் தொடர்ந்து நாடெங்கிலும் மக்கள் கொந்தளிப்பை அடைந்துள்ளனர். குறிப்பாக ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற இணையயதளங்களில் மக்கள் வெளியிடும் கருத்துக்கள் பெரும்பாலும்
அரசுக்கு எதிரான சாபங்களாகவே வெளிப்படுகின்றன.
‘அந்த மாணவி டெல்லி மருத்துவமனையில் இறந்து மூன்றுநாட்களுக்கும் மேலாகிவிட்டது. சிங்கப்பூருக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்வது போல் நாடகமாடியது, கற்பழித்தவர்களுக்கு இணையான கொடூரச்செயல்’ என்பது போன்ற மரண சாட்டையடிகளுக்கும் பஞ்சமில்லை.
இந்நிலையில், மற்ற துறையினரைவிட அதிக வன்கொடுமைகளுக்கு ஆளாகும் நடிகைகளும், டெல்லி சம்பவத்தை ஒட்டி, தங்களது கருத்தை துணிச்சலாக வெளியிட ஆரம்பித்துள்ளனர்.
இந்தியில் பரபரப்பான நடிகையும், தமிழில் விஷாலுடன் ‘தீராத விளையாட்டுப்பிள்ளை’க்கு அடுத்தபடியாக, அமீர்-ஜெயம்ரவி கூட்டணியின், ‘ஆதிபகவன்’ படத்தில் நடித்தவருமான நீதுசந்திரா, ‘’ ஆண்களின் வன்செயல்களுக்கு எதிராக பெண்கள் போரில் குதிக்கவேண்டிய தருணம் இது’ என்று கொந்தளித்துள்ளார்.
‘ பெண்குழந்தைகளை சிறுவயதிலிருந்தே ஆண்களுக்கு அடிமையாக இருக்கப் பழகி வளர்க்கிறோம். அவர்களிடம் எப்படி பயந்து நடந்துகொள்ளவேண்டும். அவர்களுக்கு முன்னால் எப்படி உடுத்த வேண்டும்’ என்பது போன்று எல்லாவகையிலும் அவர்களுக்கு அடிமையாக இருக்கப் பழக்கப்படுத்தப்படுகிறோம். இந்நிலை அடியோடு மாறவேண்டும். இளம்பிராயத்திலேயே கராத்தே போன்ற தற்காப்புக் கலைகள் பயிற்றுவிக்கப்பட்டு, ஆண்களை சமாளிக்க, தேவைப்பட்டால் அடித்து நொறுக்க பெண்குழந்தைகள் பழக்கப்படுத்தப்படவேண்டும். இது ஒருபுறமிருக்க, ஆண்குழந்தைகளையும் சிறுவயதிலிருந்தே பெண்களை எப்படி மதிக்கவேண்டும் என்று சொல்லி வளர்க்கவேண்டும்’ என்கிறார் இளம் வயதிலேயே கராத்தே, டேக்வாண்டோ கலைகளில் கற்றுத்தேறி ப்ளாக் பெல்ட்களை வாங்கிய நீது சந்திரா.
இந்த பஸ் கற்பழிப்பு சம்பவத்தை வியாபார நோக்கமின்றி திரைப்படமாக எடுப்பதாக இருந்தால், அதில் பணம் வாங்காமல் நடிக்க விரும்புவதாகவும் நீது சந்திரா தெரிவித்தார்.