வழக்கமாக தனது பிறந்த நாளை பொது நிகழ்ச்சிகளில் எங்கும் கலந்து கொண்டு கொண்டாடாத இளைய ராஜா, இந்த முறை தனது பிறந்த நாளன்று, ரசிகர்களுடன் அவர் நேரடியாக தொடர்பு கொள்ளும் படியான இசைக்கான இணைய தளம் ஒன்றை அவரே ஆரம்பிக்க இருப்பதையொட்டி நடந்த விழாவில் எளிமையாகக் கொண்டாடினார்.
இணையதளத் தொடக்கத்தை அறிவிக்கும் விதமாக க்ரீன் பார்க் ஹோட்டலில்
பத்திரிக்கையாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
காலை 11.30 மணி வாக்கில் தனது மகன் கார்த்திக் ராஜா, மகள் பவதாரிணி மருமகள்கள் மற்றும் பேரன் பேத்திகள் சகிதம் உள்ளே நுழைந்தார் இளையராஜா. யுவன் சங்கர் மட்டும் ப்ளைட் லேட்டானதால் ஆள் மிஸ்ஸிங்.
அரிகிரி அசெம்ப்ளி பாஸ்கி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
நிகழ்ச்சி ஆரம்பித்ததும் ரசிகர்கள் மற்றும் ஹோட்டல் ஊழியர்களின் அன்பு வேண்டுகோளுக்கிணங்க அவர்கள் தந்த கேக்கை குடும்பத்தினர் சூழ ராஜா வெட்ட பவதாரிணி ‘ஹேப்பி பெர்த் டே’ என்று பாடினார். ராஜா பேரனுக்கு, மகனுக்கு மகளுக்கு கேக் ஊட்டி விட்டார்.
கடைசி வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்த பிரஸ் வீடியோகிராபர்களை மறைத்தபடி போட்டோகிராபர்கள் கேக் வெட்டுவதை க்ளிக்க மேடையைச் சுற்றி மறைத்துக் கொள்ள வீடியோகிராபர்கள் ஏய்ய்.. உக்காருங்கப்பா.. மறைக்காதீங்க..என்று கூக்குரலிட.. கேக் வெட்டப் போன ராஜா ஒரு கணம் திகைத்து நிமிர்ந்து பார்த்தார்.. பின்பும் அவர்கள் விடாமல் போட்டோகிராபர்களை போகச் சொல்லிவிட்டு ராஜா குடும்பத்தினரை திரும்பவும் மேடைக்கு அழைத்து கேக்கை மறுபடி வெட்டச் சொன்னது ‘டூ’மச்சாக இருந்தது. இளையராஜா அதற்கும் கோபித்துக் கொள்ளாமல் ரீடேக் கொடுத்தது தான் ஆச்சரியம்.
பின்பு அவர் பேசும் போது தனது இளவயது வாழ்க்கை முதலே பிறந்த நாள் கொண்டாடும் பழக்கம் இருந்ததில்லை (‘நாம் ஒரு தடவை தான் பிறக்கிறோம்.. வருஷ வருஷமாவா பிறக்கிறோம்?’) என்றார்.
நிறைய பேர் அவரை வாழ்த்திப் பேசினார்கள். ஆர்.கே.செல்வமணி, கெளதம் வாசுதேவ மேனன், பழ. கருப்பையா, கவிஞர் முத்துலிங்கம், இறையன்பு ஐ.ஏ.எஸ் போன்ற பலர் வாழ்த்திப் பேசினார்கள். திடீர் திடீரென்று பார்வையாளர்கள் மத்தியிலிருந்து யாரையாவது பேச அழைத்துக் கொண்டிருந்த பாஸ்கி கார்த்திக் ராஜாவை அழைத்தார்.
தயங்கியபடி வந்த கார்த்திக் ராஜா (ப்ரியா படக் காலங்களின் இளையராஜா போலவே தோற்றமளித்தார் கார்த்திக்), ஆரம்ப காலத்தில் படங்களுக்கு அவர் பிண்ணணி இசை அமைத்துவிட்டு தந்தையுடன் காட்டும் போது ஒரு முறை தாய்க்கும் மகனுக்குமான பாசக் காட்சிக்காக கார்த்திக் அமைத்திருந்த பிண்ணணி இசையைக் கேட்ட ராஜா சொன்னாராம் “உன்னுடைய பிண்ணணி இசை நல்லாருக்கு.. உனக்கு ஒன்னு தெரியுமா.. நீ போட்ட ட்யூன் காதலைக் குறிக்கும் விதமான ட்யூன்..”. இது போல குடும்ப உறவுகளின் பரிமாணங்களை இசையில் கொண்டு வந்த தனது தந்தையைப் பற்றி பேசுகையில் கார்த்திக் முகத்தில் எவ்வளவு ஆனந்தம்!!
பவதாரிணி பேச அழைத்த போது அப்பாவுடன் அதிகம் சண்டை போடும் ஒரே ஆள் நான் என்று சொல்லி வெட்கப்பட்ட படியே வாழ்த்து சொன்னார்.
பின் கடைசியில் இளையராஜா பேசினார். பார்வையாளர்கள் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
இது நாள் வரை கொடுத்துக் கொண்டிருந்த சினிமா இசையில் உண்மையான இசை என்று தான் நம்பும் சில விஷயங்களை வெளிவரவிருக்கும் கெளதம் மேனனின் படத்தின் இசையில் லேசாய் முயற்சித்திருப்பதாய் சொல்லி நம் எதிர்பார்ப்பைக் கூட்டினார். புதிதாய் ஆரம்பிக்கப் போகும் இணைய தளத்தில் இசையில் தனக்குத் தெரிந்த விஷயங்கள் தன்னோடு முடிந்து விடாமல் எதிர்கால சந்ததியினருக்கும் பயன்படும் வகையில் இந்த இணைய தளத்தில் பகிர்ந்து கொள்ளப் போவதாகக் கூறினார். இசை சம்பந்தமாக தான், தனது மகன்கள் மற்றும் மகள் இவர்கள் அனைவருடனும் தொடர்ந்து உரையாடும் சந்தர்ப்பத்தை இந்த இணைய தளம் மூலம் ஏற்படுத்தப் போவதாகக் கூறினார்.
இணைய தளம் (இணைக்கும் தளம் – என்று பெயரிருந்திருந்தால் பொருத்தமாயிருந்திருக்கும் என்றார்..), இன்னும் பெயர் வைக்கப்படாமல், கட்டணம் வேண்டுமா வேண்டாமா, என்கிற குழப்பங்களுடன் இருந்தாலும் உலகெங்கிலும் இருக்கும் சாதாரண ரசிகன் முதல் சிம்பொனி வாசிக்கும் கலைஞர்கள் வரை லட்சக் கணக்கானோருடன் நம் பண்ணைப்புரத்து ராஜா இணையதளத்தில் இணையப் போவது முக்கியமான விஷயம் இல்லையா..?!
02 ஜூன் 2012.