பீகாரின் ரஜினிகாந்த் சத்ருகன் சின்ஹா தான் இருக்கும் பி.ஜே.பி கட்சிக்கே ஆப்பு வைத்துவிட்டு ஆம் ஆத்மியுடன் இணைவார் என்பது போலத் தெரிகிறது. கடந்த சில வாரங்களாகவே பி.ஜே.பி.யின் கலை இலக்கியப் பிரிவின் தலைவரான அவர் கட்சி முகம் சுளிக்கும்படியான விஷயங்களை சந்தோஷமாகச் செய்து வருகிறார்.

பீகாரில் மோடியைக் காண்பித்து வெற்றியை ஈட்ட நடத்தப்பட்ட ‘மஹா பரிவர்த்தன் யாத்திரை’ யில் மோடி கலந்துகொண்டு பேசினார். சத்ருகன் சின்ஹா அதில் கலந்துகொள்ளவில்லை. மோடி.யின் உலகமுதலீடு- பெரும்வளர்ச்சி போன்ற கோஷங்களை தூசாக்கிய ஆம்ஆத்மி கட்சியை பி.ஜே.பி தனது இமேஜை வீழ்த்தும் எதிரியாகவே பாவிக்கிறது. அதனால் தான் கேஜ்ரிவால் பதவியேற்றது முதல் அவர் கட்சிக்குள்ளேயே ஆட்களைக் குழப்பி, அவரையும் நிம்மதியாக இருக்கவிடாமல் ஏதாவது பிரச்சனை செய்தபடியே இருக்கிறது பி.ஜே.பி.

இந்நிலையில் சத்ருகன் சின்ஹா சில நாட்களுக்கு முன்பு டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை அவரது இல்லத்தில் சென்று சந்தித்து அவரது ஆட்சியைப் பற்றி புகழ்ந்து பேசினார். இது மரியாதை நிமித்தம் என்று கூறப்பட்டாலும் பீகாரில் வரவிருக்கும் சட்டசபைத் தேர்தல் கூட்டுக்கான ஒரு முன்னோட்டமாகவிருக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

முன்னதாக பி.ஜே.பிக்கு எதிராக போகும் சின்ஹா ஐக்கிய ஜனதா தளம் – ராஷ்ரிய ஜனதா – காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவரது சினிமாப் புகழ் எதிர்க்கூட்டணிக்கு வெற்றியை தேடித்தராவிட்டாலும் பி.ஜே.பியின் ஓட்டுக்களை சிதறடிக்கும் என்பது உறுதி. ஆம் ஆத்மி கட்சி லாலுபிரசாத் போன்ற ஊழல் தலைவர்கள் இருக்கும் ஆர்.ஜே கூட்டணியில் சேராவிட்டாலும் மற்ற தலைவர்களுடன் சேர்ந்து களம் காண வாய்ப்பு இருக்கிறது. அதில் சின்ஹாவும் ஏதாவது பங்காற்றக்கூடும்.

ஜாதிய அடிப்படையில் கயஸ்தா ஜாதியைச் சேர்ந்த சின்ஹாவுக்கு மக்கள் தொகையில் 1.5 % உள்ள கயஸ்தா ஜாதியினரின் ஆதரவு கிடைக்க வாய்ப்புண்டு. அப்படி கிடைக்கும் பட்சத்தில் அது பி.ஜே.பிக்கு ஒரு இழப்பே. அத்தோடு பெருமளவு ரசிகர்களைக் கொண்ட சின்ஹா சிறந்த பேச்சாளரும் கூட. படிப்பறிவும், அரசியல் பார்வையும் குறைவாக உள்ள பீகார் மக்கள் எளிதில் ஜாதிய ஓட்டு பார்முலாவில் சிக்கிக் கொள்வார்கள்.

Related Images: