இந்துத்துவ பரிவாரங்களில் பா.ஜ.கவின் பங்காளியான சிவசேனா மத்தியில் பாஜக தலைமையில் ஆளும் தேசிய ஜனநாயக முன்னணியின் உறுப்பினர்களில் முக்கியமானது. பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் 150 இடங்களில் சிவசேனை போட்டியிடுகிறது.

பீகாரில் தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்த அக்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளரான சஞ்சய் ரவுத், நிதிஷ் குமாரின் கடந்த 10 ஆண்டுகள் கால ஆட்சியில் நற்பணிகள் நடைபெற்றுள்ளதாகப் பாராட்டியுள்ளார்.

பாட்னாவின் செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் ரவுத், “பிஹாரின் தேர்தல் துவங்கியது முதல் நான் அதன் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் செய்து வருகிறேன். அப்போது அப்பகுதிகளில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை என்னால் எளிதாக அடையாளம் காண முடிந்தது. மாநிலம் முழுவதுமாக போதுமான சாலைகள் அமைந்துள்ளன. கிராமங்களிலும் மின்சார வசதிகள் கிடைத்துள்ளன” என்றார்.
பிஹாரில் இத்தனை ஆண்டு காலம் ஆட்சி எனும் பெயரில் காட்டு தர்பார் நடத்தி வந்ததாகக் கருதப்படும் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவுடன் கூட்டணி அமைத்துள்ள நிதிஷ் பிஹாரை வளர்த்த முடியாது எனவும், ஊழல் நிறைந்த ஆட்சி எனவும் பீகார் மேடைகளில் மோடி பேசிச் சென்ற சில நாட்களிலேயே சிவசேனையிடமிருந்து இப்படி ஒரு பாராட்டு நிதீஷ்குமாருக்கு.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் பாஜகவின் பிஹார் மாநில செய்தி தொடர்பாளரான சஞ்சய் மயூக், ‘பல வருடங்களாக பிஹாரில் அடையாளம் இன்றி தவிக்கிறது சிவசேனா. இது இந்த தேர்தலில் இந்தி மாநிலமான இங்கு கால் பதிக்க முயல்கிறது. இதன் தலைவர் நிதிஷை புகழ்ந்ததை பார்க்கும்போது அவர், பிஹாரில் தன் கட்சி மற்றும் முதல்வரை ஒரே நிலையில் வைத்திருப்பதை காட்டுகிறது’ என்றார்.

சில வருடங்களாக பாஜக மற்றும் சிவசேனாவுடனான உறவில் சுமூகமான நிலை காணப்படவில்லை. கடந்த அக்டோபரில் நடைபெற்ற மகராஷ்ட்ரா சட்டப்பேரவை தேர்தலிலும் சிவசேனா, பாஜகவுடன் சேராமல் தனித்தே போட்டியிட்டது. பா.ஜ.கவின் கருத்துக்களை அது பெரிதும் விமர்சித்தே வந்துள்ளது. சிவசேனையின் அதிதீவிர இந்துத்துவாவிற்கும், பா.ஜ.கவின் மித தீவிர இந்துத்துவாவிற்கும் பெரிய வேறுபாடுகள் இல்லையெனறாலும் அவர்களிடேயை தோன்றும் இந்த கருத்து முரண்பாடுகள் பெரிதானால் அது இந்துத்துவ சக்திகளின் ஒற்றுமையை பாதிக்கும்.

Related Images: