‘’சினிமாவில் எங்குதிரும்பினாலும் மிருகங்களாகவே தென்படுகிறார்கள். அவர்களால் தொடர்ந்து வேட்டையாடப்பட்டு, விரக்தியின் உச்சத்துக்கு வந்துவிட்டேன். இனி விரைவிலேயே மொட்டை அடித்துக்கொண்டு சந்நியாசினி ஆனால் மட்டுமே வாழமுடியும் என்கிற நிலைமைக்கு வந்துவிட்டேன்’’ என்று அலறுகிறார் ஒரு நடிகை.
அவர் தனுஸ்ரீ தத்தா. விஷால் நடித்த ‘தீராத விளையாட்டுப்பிள்ளை’யில் அவரால் தீராமல் விளையாடப்பட்ட மூன்று நாயகிகளில் ஒருவர். கடந்த சில தினங்களாகவே மீடியா ஆசாமிகளுக்கு தண்ணி காட்டிவிட்டு கோயில் குளம் என்று அலையும்,பிரபல மும்பை மாடலுமான இவர் தனது 15 வது வயதிலிருந்தே இந்தி, தெலுங்கு சினிமாக்களில் தொடர்ந்து நடித்துவருகிறார்.
படுகிளாமராக நடிப்பது, பார்ட்டிகளில் கலந்துகொண்டு நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர்களுக்கு கம்பெனி கொடுப்பது என்று திரிந்து வந்த தனுஸ்ரீக்கு, சமீபத்தில் ‘கெட்ட பின்பு ஞானி’ மாதிரி திடீர் ஞானோதயம் ஏற்பட்டு யோகா மய்யங்களுக்கு செல்ல ஆரம்பித்தார்.
அதிலும் கோவை அருகே உள்ள வெள்ளையங்கிரி மலையில் நடைபெறும் யோகா பயிற்சி மய்யத்துக்கு ரெகுலராக வர ஆரம்பித்துவிட்ட தனுஸ்ரீக்கு, இனி சினிமாப்பக்கம் தலை வைத்துப்படுக்கும் எண்ணம் துளிகூட இல்லையாம்.
‘’இப்போதைக்கு முடியை ஒட்டவெட்டிவிட்டேன். மிகவிரைவிலேயே மொட்டையும் அடித்துக்கொள்ளப்போகிறேன். இதனால் என்னால் பொது இடங்களில் சகஜமாக நடமாடமுடியும்’’ என்கிற தனுஸ்ரீ தன்னைப்போலவே நரகத்தில் உழலும் சில நடிகைகளை மீட்டெடுப்பதற்காக, சில நாட்கள் கழித்து தன்னோடு ’தீராமல் விளையாடிய சில பிள்ளைகள்’ குறித்து, தனது சுயபுராணத்தில் எழுத இருக்கிறாராம்.
ஸோ, தனுஸ்ரீ, சினிமாவுக்கு எதிரான உங்க ‘சமர்’ சீக்கிரமே ஆரம்பமாகட்டும்.