தமிழ் நாடு மின் துறைப் பொறியாளர்கள் அமைப்பு ‘ஊழல் மின்சாரம்’ என்ற ஆவணப்படத்தை தயாரித்து, அதை சனிக்கிழமை வெளியிடுவதாக இருந்தது. இதுகுறித்து அதிரப்போகும் ரூ.60 ஆயிரம் கோடி ஊழல்- அம்பலப்படுத்தும் ஆவணப்படம் என்ற தலைப்பில் விகடன் டாட் காமில் இதுகுறித்து ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது.

“ஊழல் மின்சாரம்” ஆவணப்படம் வெளியீடு.

2 ஏப்ரல் 2016, சனிக்கிழமை, மாலை 5 மணி ,இக்சா அரங்கம், எழும்பூர்.

மின் உற்பத்தியில் நுழைந்த தனியார், நாட்டின் அனைத்துப் பொதுத்துறை விநியோக நிறுவனங்களையும் மீளாக் கடனில் மூழகடித்துள்ளனர்.
தமிழகத்தில் மட்டும் இந்தக்கடன் 96 ஆயிரம் கோடி ரூபாய். இந்தத் தனியாருடன் கூட்டுச் சேர்ந்த அரசியலாரும்,நிர்வாகிகளும் நடத்திய மின்சார ஊழல் எப்படி ஏழை மக்களின் கழுத்தை நெறிக்கக் காத்திருக்கின்றது என்பதைப் பற்றிய படம் இது.

ஆய்வு , எழுத்து ,வர்ணனை-சா.காந்தி
வடிவம் இயக்கம்-சா.காந்தி, ஆர்.ஆர். சீனிவாசன்
ஒளிப்பதிவு-எம்.ஆர் .சரவணக்குமார்
படத்தொகுப்பு-கா.கார்த்திக்
தயாரிப்பு- தமிழ் நாடு மின் துறைப் பொறியாளர்கள் அமைப்பு

தலைமை: சா.காந்தி,
வெளியிடுபவர்: நல்லகண்ணு
சிறப்பு அழைப்பாளர்கள் : அ.வீரப்பன், பெ.மணியரசன், கொளத்தூர் மணி, கோவை ராமகிருஷ்ணன், பொழிலன், கி.வே.பொன்னையன், அருள்முருகன்

அனைவரும் வருக.

– நிமிர் & தமிழ்நாடு மின்துறை பொறியாளர்கள் அமைப்பு
இப்படி ஒரு அறிவிப்புடன் சினிமாத் துறை கலைஞர்கள் பலரும் கையில் எடுக்கத் தயங்கும் அரசியல்-சமூகப் பிரச்சனையாயுள்ள தமிழ்நாடு மின்சார வாரியம், மின்சாரத்தை தனியார் மயமாக்குதல் பற்றி ஓய்வு பெற்ற மின்சார வாரிய எஞ்சினியர்கள் எடுத்திருந்த ஆவணப்படம் இன்று வெளியாகவிருந்தது. அதை விகடன் அதிமுக வின் மின்சார ஊழல் என்கிற வகையில் எடுத்துச் செய்தியாக வெளியிட்டுவிட உடனே தேர்தல் கமிஷனிடம் சென்று முறையிட்டு படத்தின் திரையிடலை ரத்து செய்ய வைத்துவிட்டார்கள்.

இவ்வாறு ரத்து செய்ய வைக்கப்பட்டது குறித்து இப்படத்தை திரையிட ஏற்பாடு செய்திருந்த மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி தன்னுடைய முகநூலில் கீழ்கண்டவாறு விகடனுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விகடனுக்கு ஒரு வேண்டுகோள்.
’ஊழல் மின்சாரம்’ எனும் ஆவணப்படத்தினைப் பற்றிய செய்தியை விகடன் வெளியிட்டிருக்கிறது. இந்த ஆவணப்படம் அதிமுகவிற்கு மட்டும் எதிராக இருப்பதைப் போன்ற ஒரு தோற்றத்தோடு செய்தியை வெளியிட்டிருக்கிறது.
ஆனால் மின்சார ஊழல் என்பது இந்தியாவின் தனியார் மயக் கொள்கையை முன்வைத்து நடத்தப்பட்டதை கொள்கை சார்ந்து விளக்குகிறது ஆவணப்படம். இதில் ஒரு கட்சி மட்டுமே ஈடுபடவில்லை. எனில் விகடனின் செய்தி, இரண்டு பெரிய கட்சிகளையும் மையப்படுத்தி செய்தியாக்கப்பட்டிருந்தது எனில் செய்தியில் உண்மைத் தன்மை பாதுகாக்கப்பட்டிருக்கும்.

ஆனால் அதிமுக மட்டுமே ஊழலில் ஈடுபட்டது போன்ற பிம்பம் அச்செய்தியில் இருப்பதை வைத்து காவல்துரையிலிருந்து, தேர்தல் கமிசன் வரை ஆவணப்பட வெளியீட்டிற்கு அனுமதி பெறவேண்டும், ஆவணப்படத்திற்கு என்.ஓ.சி வாங்கவேண்டுமென தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது. ஆவணப்படத்தினை உருவாக்கிய பொறியாளர் அமைப்பு இது ஒரு கட்சிக்கு மட்டுமே எதிராக எடுக்கப்படவில்லை என்று பதிவு செய்திருக்கிறார்கள்.
ஊழலில் அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக என பல கட்சிகளும், அதிகாரிகளும் சேர்ந்துதான் இயங்கினார்கள். எழுதுவதெனில் அனைவரையும் கேள்விக்குள்ளாக்குவதே சரியானது. அதிமுக செய்த அதே ஊழலை , திமுகவும் செய்தது.

2008இல் இருந்து ஊழல் நடந்திருக்கிறது என்று பதிவு செய்திருக்கிறோம் என பொறியாளர் அமைப்பு சொன்னதை பதிவு செய்த ஊடகம், 2008-2011வரை இருந்த திமுகவினையும் சமரசமற்ற அளவில் கேள்விக்குள்ளாக்கி இருந்தது எனில் செய்தியின் நடுநிலை கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்காது.
தனியார் மின்சார உற்பத்தியாளர்களிடம் வாங்கியதில் மின்சாரதுறை அழிந்தது எனில் , பல தனியார் நிறுவனங்கள் திமுகவின் பினாமிகளுக்கும் சொந்தமாக இருந்தது என்பது உண்மை. இதே குழுக்களிடம் இருந்துதான் அதிமுகவும் மின்சாரம் கொள்முதல் செய்தது. இருவரும் இணைந்தே இதை செய்தார்கள் என்பதை மே17 இயக்கம் பல இடங்களில் பதிவு செய்திருக்கிறது.

இந்நிலையில் இவ்வாறு கொள்ளையடிக்க காரணமான இந்திய அரசின் ‘மின்சார தனியார் மயக்கொள்கை’ எனும் கொள்கையை கேள்விக்குள்ளாக்கும் ஒரு ஆவணப்படத்தினை ஒரே ஒரு கட்சிக்கு எதிரானதாக மட்டுமே பதிவு செய்வது ஆவணப்பட வெளியீட்டிற்கு சிரமத்தினை ஏற்படுத்தியிருக்கிறது.

பத்திரிக்கைகள் அச்சமின்றி செய்திருக்க வேண்டிய ஒரு பணியை ஓய்வு பெற்ற பொறியாளர்கள் செய்திருக்கிறார்கள். அதை ஏதோ ஒரு கட்சிக்கான அரசியலாக்குவதில் எவருக்கும் லாபம் இல்லை.
கடந்த இரண்டு மணி நேரமாக தொடர்ந்து ஏற்பாட்டாளர்கள் அரசு/காவல்துறை/ தேர்தல் ஆணையத்தின் நெருக்கடிக்கு, சிக்கலுக்குள்ளாகி இருப்பதற்கு காரணமான செய்தியை மாற்றுமாறு வேண்டுகோளை வைக்கிறார்கள் பொறியாளர்கள்.

அதிமுக – திமுக இரண்டுமே ஊழல் கட்சிகள். இதில் ஏதோ ஒன்று மட்டும் யோக்கியமானது என்பதை அக்கட்சி உறுப்பினர்களே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதே நிதர்சனம்.
(எதேச்சையாகவோ, அல்லது திட்டமில்லாமலோ) தவறாக புரிந்து கொள்ளப்படும் வகையில் வெளியான செய்தியை திருத்துமாறு விகடன் நண்பர்களிடத்தில் வேண்டுகோள் வைக்கிறோம்”

விகடனில் வெளியான கட்டுரை ஆளும் அதிமுக அரசுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடியதாக இருந்திருக்கலாம். தேர்தல் நேரத்தில் இது போன்ற சர்ச்சைக்குரிய ஆவணப்படங்களை வெளியிடுவது பிரச்சினையாகும் என்கிற அடிப்படையில் தேர்தல் ஆணையம் ‘ஊழல் மின்சாரம்’ ஆவணப்பட வெளியீட்டை தடை செய்துள்ளது.

திருமுருகன் காந்தி தன்னுடைய முகநூல் பக்கத்தில், “ஊழல் மின்சாரம் ‘ ஆவணப்பட திரையிடல் ரத்து செய்யப்பட்டுள்ளது. பிற தோழர்களுக்கு தெரியப்படுத்தவும்” என தெரிவித்திருக்கிறார்.

Related Images: