நல்லதோர் வீணை – குறும்படம்

நல்லதோர் வீணை செய்தே

ஓடும் நேரம் – 10 நிமிடங்கள். வெளிவந்த ஆண்டு – மார்ச் 2012.

நடிப்பு : மாஸ்டர் ஆகாஷ், சேஷன்.

ஒளிப்பதிவு உதவி: கோபி,முரளி. ஒளிப்பதிவு –ஆனந்த்சாரி.

சிறப்பு ஒலி- சந்திரகாந்த். ஒலிப்பதிவு – பாலாஜி.

படத்தொகுப்பு –கார்த்திகேயன், ராம்நாத். இசை-உதய்.

இணை இயக்கம் – S.R.சேஷன் எழுத்து, இயக்கம் – அனந்து

தயாரிப்பு – மதுரா மூவி மேக்கர்ஸ்.

படத்தின் ஆரம்பத்திலேயே சிகரெட் குடிப்பது உடல் நலத்திற்குத் தீங்கானது என்கிற வரிகள் தோன்றி மறைகின்றன.

படத்தின் தீமும் அது தான். இதற்கு மேல் கதையும் கதைச் சுருக்கம் சொல்லக் கூடிய அளவு பெரிதில்லை.

படத்தின் சிறப்பம்சம் அது நேர்த்தியாக எடுக்கப்பட்டிருப்பது. இரண்டே நடிகர்கள் தான். ஒரு சிறுவனும் ஒரு இளைஞரும் தான் முக்கிய பாத்திரங்கள். இருவருடைய நடிப்பும் மிகச் சரியாக கையாளப்பட்டிருக்கிறது.

எடிட்டிங், ஒளிப்பதிவு, உரையாடல் மற்றும் இயக்குநரின் திறமையில் படம் பளிச்சிடுகிறது. சிறுவன் பொறுமையிழந்து பேசுவதை ஆடும் கால்கள் மூலம் காட்டியது; அப்பாவை புகையாகவே காட்டியது; என்று பல இடங்கள்.

(எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கிறது என்றாலும்) இசை மெல்லியதாய் மனதை வருடுகிறது.

இளசு, பெருசு என்று எல்லோரையும் ஆக்கிரமித்திருக்கும் கிரிக்கெட்டை களமாய் எடுத்திருப்பது நல்ல ஐடியா. துணை நடிகர்கள், எட்டிப் பார்க்கும் கூட்டம் என்று எதுவும் இல்லை. வித்தியாசமான முயற்சி.

அனந்து எடுத்துக்கொண்டிருக்கும் விஷயம் மிகப் பொதுவான விஷயமாயிருந்தாலும் அதை சுவராசியமாக, யதார்த்தமாக காட்டியவகையில் அவருடைய திறமை வெளிப்படுகிறது.

அவார்டு வின்னிங் ஷார்ட் பில்ம் என்று போட்டிருக்கிறார்கள். அவார்டு விவரங்கள் எதுவும் போடவில்லை.

எல்லோரும் பார்த்து ரசிக்கக் கூடிய படம்.

சிகெரட் பிடிப்பவர்கள் கண்டிப்பாக பாருங்கள்.

-ஷாலினி ப்ரபாகர்.