2இட்லி-2வடை

ஓடும் நேரம்: எட்டு நிமிடங்கள்.
தயாரிப்பு – வெயிலோன் திரை.
நடிப்பு: முருகன், பாலசரவணன், நட்டு, பாலாஜி,விஜயகுமார், கௌஷிக். எடிட்டிங்: ஷரத் ஜோதி இசை: தயானந்த் பிறைசூடன்.
ஒலிப்பதிவு: K. பிரசாத் உதவி: சிலம்பரசன், மஹபூப் அலி, லின் மேன்சன், சுபாஷ் குமரன், சந்திரசேகர்.
ஒளிப்பதிவு:கோகுல் பெனாய். இணை ஒளிப்பதிவு: சுஜித், சுரேஷ்.
உதவி இயக்குனர்கள்: உலகன், வெங்கடேஷ், ஷிவா.
இணை இயக்குநர்கள்: S.விக்னேஷ்வரன், R. கார்த்திக் ஐயர்.
இயக்கம்: S.U. அருண்குமார்.

மாணவர்களின் கல்லூரி கால வாழ்க்கையின் ஒரு முக்கிய பாகமான ஹாஸ்டல் வாழ்க்கையை கதைக் களமாகக் கொண்ட படம். குறிப்பாக ஹாஸ்டல் மெஸ்.

ஒன்றாகப் படிக்கும் நான்கு மாணவர்களுக்கும் அழகர் என்கிற ஹாஸ்டல் மெஸ்ஸின் சமையல்காரருக்குமிடையேயான நட்புணர்வை, மனிதநேயத்தை யதார்த்தமாய் ஒரு சிறு நிகழ்வின் மூலம் சொல்லியிருக்கும் படம்.

நான்கு மாணவர்களாய் நடித்திருப்பவர்களில் குண்டாய் வருபவரும், அழகரின் டப்பாவில் பணம் இல்லாததை கண்டுபிடிப்பவனாய் வருபவரும் தேறிவிடுகிறார்கள். மெஸ் சமையல்காரர் அழகராய் வரும் சினிமா நகைச்சுவை நடிகர் முருகன் படத்தின் முழு நடிப்புப் பகுதியையும் கச்சிதமாக ஆக்கிரமித்துக் கொள்கிறார். தனது நாட்டுப்புறப் பேச்சாலும் நடிப்பாலும் சமையல்காரர் பாத்திரத்தை அநாயசமாய்ச் செய்துவிடுகிறார். மாணவர்கள் சொதப்பிவிடவில்லை என்றாலும் மாணவர்களிடம் இன்னும் கொஞ்சம் வேலை வாங்கியிருக்கலாம்.

ஷரத் ஜோதியின் எடிட்டிங் கச்சிதம். ஒலிப்பதிவு துல்லியம். தயானந்தின் இசை படத்திற்கு பலம். கோகுலின் ஒளிப்பதிவு அழகு. அழுக்கான ஹாஸ்டல் மெஸ்ஸை இருளாய்க் காட்டி யதார்த்தமாக்குகிறார்.

படத்தின் இயக்குனர் அருண்குமாரின் இயக்கம் பாராட்டப் படவேண்டிய ஒன்று. கதை, திரைக்கதை, வசனம் என்று யார் பெயரும் போடாததால் அதுவும் இவரே என்று கடைசியில் டைட்டில் போடும் போது புரிகிறது. இரண்டு வடை, ‘மக்’கை திருடியவன் என்று ஜாலியாய் எழதியிருக்கிறார். திரைக்கதையும், வசனமும் யதார்த்தமாய் உள்ளன. காட்சிகள் எதையும் தேவையின்றி நீட்டாமல் கச்சிதமாய் முடித்திருக்கிறார். கதையின் போக்கும், முடிவும் எதிர்பார்த்த விஷயங்கள் என்றாலும் மனதைத் தொடுகின்றன.

மாணவர்களின் நடிப்புக் குறைவை பல இடங்களில் ஒளிப்பதிவாளர் வித்தியாசமான ஷாட்களாலும், எடிட்டர் சரியான ‘கட்’டுகளாலும் சமாளிக்கின்றனர். கதையில் முக்கிய திருப்பு முனையான உதவியை அழகர் ஏன் அந்த மாணவர்களுக்குச் செய்ய வேண்டும் என்கிற கேள்விக்கு கதையில் விளக்கமில்லை. அம்மாணவர்களின் ஏழ்மைத் தன்மையும், இக்கட்டான நிலமையும் போன்ற ஏதாவது விஷயங்களை காரணமாகக் காட்டியிருக்க வேண்டும்.

பணம் கட்ட முடியாத அவர்களின் பொருளாதாரச் சூழல் போன்று மேலும் சில விஷயங்களைச் சொல்லி கதையின் முடிச்சை வலுவாக்க இன்னும் சில காட்சிகள் சேர்க்கப் பட்டிருக்கலாம். இது அழுத்தமாக காட்டப்படாததால் அழகர் செய்யும் உதவிக்கான முக்கியத்துவம் குறைகிறது. ஹாஸ்டல் வார்டனிடம் அவர்கள் மயிரிழையில் தப்பிப்பது அழுத்தமாக காட்டப்படவில்லை. மாணவர்கள் குடித்துவிட்டு அலம்பும் காட்சி இன்னும் கொஞ்சம் நீளமாக இருந்திருக்க வேண்டும்.

இவையெல்லாம் இருந்தாலும் மொத்தத்தில் ‘2 இட்லி 2 வடை’ பார்த்து ரசிக்கக்கூடிய நல்ல ஒரு காலேஜ் கலக்கல்.

–ஷாலினி ப்ராபகர்.

யூ ட்யூப்பில் சென்று பார்க்க..

முந்தைய குறும்படங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.