‘நாய்கள் ஜாக்கிரதை’ [வி] நாமளும் ஜாக்கிரதை

இதே சிபிராஜை வைத்து, ஜேம்ஸ் ஹாட்லி செஸின் ‘’ my laugh comes last’  என்ற நாவலை பக்கம் பக்கமாக சுட்டு ‘நாணயம்’ படத்தை இயக்கிய சக்தி சவுந்தர் ராஜின் அடுத்த, நாணயமற்ற படம், இந்த ‘நாய்கள் ஜாக்கிரதை’.

சொந்தக்கதையை வைத்து படம் இயக்குவதில்லை என்று ஊரிலிருந்து கிளம்பும்போதே குலதெய்வம் கோவிலில் சத்தியம் செய்துவிட்டுக்கிளம்பினாரோ என்னவோ , இந்த முறை ‘நாய்கள் ஜாக்கிரதை’யாக  சுட்டது  1989-ம் ஆண்டு வெளிவந்த ‘கே-9’ என்ற ஹாலிவுட் படத்தை.

இப்போது படத்தின் கதை என்ற ஒன்றை எழுதவேண்டுமே? ஒரிஜினலிலிருந்து ‘சுட்ட கதையை’ எழுதுவதா, அல்லது அதை தமிழில் பாடாய் படுத்தி கார்த்திக்கிடம் நாம் நாய்பாடு பட்ட கதையை எழுதுவதா?

சரி ரெண்டையும் சேர்த்து குழப்பி கும்மி அடிப்போம்.

ஹாலிவுட் பட ஹீரோபோல் நம்ம சிபிராஜும் காவல்துறையில் பணிபுரிகிறார். ஹாலிவுட் மனைவி போலவே சிபிராஜின் மனைவி அருந்ததியும் சிபி போலீஸ் துறையில் வேலைசெய்வது பிடிக்காமல் தனியாக வசிக்கிறார். இந்நிலையில் சிபியிடம் ஜெர்மன் செப்பட் நாய் ஒன்று வந்து சேர்கிறது. ஹாலிவுட் மற்றும் லோக்கல் நாய்கள் இரண்டுமே வந்த புதிதில் எஜமானர்களைப் பாடாய்ப் படுத்துகின்றன.

ஒரு கட்டத்தில்  வில்லன் கதாநாயகியைக் கடத்தி ஒரு காட்டுக்குள் புதைத்து வைத்து ‘முடிஞ்சா காப்பாத்திக்கோ’ என்று சவால் விடுகிறான். சோறு தின்பதோடு நின்றுவிடாமல் எனக்கு வீறுகொண்டு எழவும் தெரியும் என உயிரைக்கொடுத்து நிரூபிக்கிறது நாய்.

தனக்குக் கிடைத்த இரண்டாவது வாய்ப்பையும் திருட்டு வி.சி.டியில் படம் பார்த்து சுட்டதால் இயக்குநருக்கு பாஸிடிவ் பாய்ண்ட்ஸ் எதுவும் இல்லை. இரண்டாவது பாதியில் இவ்வளவு சீரியஸாக பயணிக்கப்போகும் ஒரு கதைக்கு முன்பாதியில் அவ்வளவு காமடி எதற்கு?

சத்யராஜ் போன்ற ஒரு தேர்ந்த நடிகரை வீட்டில் வைத்துக்கொண்டு, நடிப்பில் கொஞ்சம் கூட தேறாமல் இருக்க சிபிராஜால் மட்டுமே முடியும். அதுவும் மனைவியை புதைத்து வைத்திருக்கிறார்கள், அவர் இன்னும் சில நிமிடங்களில் மூச்சுத்திணறி இறக்கப்போகிறார் என்று இருக்கிற காட்சிகளில் அவர் காட்டுகிற எக்ஸ்பிரசன்கள் இருக்கிறதே… அய்யய்ய்யய்யோ…

நாயகி அருந்ததி அநியாயத்துக்குப் பெருத்துப்போய் பெருந்ததியாய் நிற்கிறார். சீக்கிரமே மெலியலைன்னா… அக்கா, அண்ணி கேரக்டருக்கு கூப்பிட்டிருவாய்ங்க அம்மணி.

சிபியின் தங்கையாக வரும் குட்டிப்பொண்ணு, அடுத்த த்ரிஷா என்று உள்மனசு துடித்து அடித்துச்சொல்கிறது.

வில்லன் கார்த்திக் வேணுகோபால் செம ஸ்மார்ட் நடிப்பு.

இரண்டே காட்சிகளில் வந்தாலும் தான் ஒரு காமெடி ஆசாமி என்பதை நிரூபிக்கிறார் மயில்சாமி. இந்த சீன்களும் அந்த ஹாலிவுட் படத்துல இருக்கு சாமி.

படத்தில் நடித்திருக்கும் நாய், இந்த விமரிசனத்தைப் போய் படிக்கப்போவதில்லை என்பதால் அதுகுறித்து எதுவும் சொல்வதாயில்லை.

ஆக, நாய்களும் ஜாக்கிரதை நாமளும் ஜாக்கிரதை, கொஞ்சம் யோசிச்சி முடிவு பண்ணுங்க படம் பாக்குறதை.