உத்தம வில்லன் – சிரிக்கத் தெரியாதவர்களின் அழுகை !

மூளைக் கட்டியால் சாகப்போகும் மனோரஞ்சன் ஒரு நட்சத்திர நடிகன். கனவுலகத்தை உருவாக்குபவன் மிச்சமிருக்கும் நாட்களில் தனது நனவுலகத்தை அன்பால் தாலாட்ட நினைக்கிறான். குரு வணக்கம், பதிவிரதை விரதம், புத்திர பாசம், புத்திரி நேசம், காதலுக்கு மரியாதை, கள்ளக்காதலிக்கு முத்தம், மாமனாருக்கு மதிப்பு, ரசிகர்களுக்கு சிரிப்பு… எதையும் விட்டுவைக்கவில்லை.

அதன்படி ஆரம்பத்தில் அவனை நட்சத்திரமாக்கிய இயக்குநர் மார்க்கதரிசியுடன் இணைந்து “உத்தம வில்லன்” எனும் ஒரு நகைச்சுவை படத்தை எடுக்கிறான். அதுதான் இறுதிப் படம். படம் வளர வளர கட்டியின் வலியும் அதிகரிக்கிறது. திரைப்படமோ பழைய காலத்து ராஜா, ராணி, வில்லன் கதை. இக்கதையில் மரணத்தை வென்ற கூத்துக் கலைஞனாக நடிக்கும் மனோரஞ்சன், வில்ல ராஜாவை வென்று இளவரசியை பிடிக்கிறான். அதை இரணியன் அல்லது பிரகலாதன் கதை நாட்டியமாக ஆடி முடியும் போது மரணம் வாசலில் வந்து நிற்கிறது.

நிஜக்கதையில் பாசப் போராட்டம், நிழல் கதையில் நகைச்சுவை, நிஜத்தில் விதேசி டூயட், நிழலில் சுதேசி தய்ய ஆட்டம், நிஜக்கதையில் மெல்லிய வண்ணங்கள், நிழல் கதையில் அதிரடி வண்ணக் கலவைகள், நிஜத்தில் பேச்சுத் தமிழ், நிழலில் செந்தமிழ் என்று அகடைக்கு விகடை, பகடைக்கு பாடை என்று செதுக்கியிருக்கிறார்கள்.

எனினும் ஏ சென்டர் ரசிகர்கள் மனோரஞ்சனை ரசித்தாலும், கூத்துக் கலைஞனின் கட்டியங்கார காமடியை சகிக்கவில்லை. பி,சி மக்கள் இரண்டையும் – முன்னதை கொஞ்சம் விலகியும், பின்னதை ஒன்றியும் – ரசிக்க கூடிய சாத்தியமுண்டு. பிறகு ஏ-வில் வாழ நேர்ந்திருக்கும் பி அண்ட் சி மக்கள் கொஞ்சம் குழப்பமாக இரண்டையும் ரசிப்பது நடக்கலாம்.

இந்த ரசிக பேதத்தின் காரணம்?

மனோரஞ்சனது குடும்ப மரத்தில் கனிந்தோ காயாகவோ பூவாகவோ தொங்கும் நபர்களுக்கு, அவன் அள்ளித் தெளிக்கும் கைமாறு கடமை கலந்த அன்பு வெள்ளமும், அந்த வெள்ளத்திற்கு காரணமாக சென்ற காலத்தில் அச்சுறுத்திய வறட்சியும் சேர்ந்து உருவாக்கும் பாசப்பிதுக்கலில் ஏ சென்டர் தாலாட்டப்படுகிறது.

ரசிகர்களின் ரசனை வேறுபடுவதன் காரணம் என்ன?
சமகால உலகில் அன்பு, காதல், கருணை, கோபம், பாசம், தாய்மை, தந்தைமை, சகோதரத்துவம், குழு நேசம்… இவையெல்லாம் மனித குலத்திற்கு பொதுவான உணர்ச்சிகள் என்றே பலரும் நம்புகின்றனர். அப்படி இல்லை என்பது யதார்த்தம் மட்டுமல்ல வர்க்க பேதத்தால் பிரிந்திருக்கும் மனித சமூகத்தின் விதியே அதுதான்.

ஆக்ஸ்போர்டில் படித்துத் திரும்பும் டி.வி.எஸ் ஐய்யங்கார் குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மீனம்பாக்கத்தின் வாடகைக் கார் ஓட்டுநரைக் காதலிப்பாரா? ஐ.ஏ.எஸ், ஐ.ஐ.எம் புகழ் இளைஞர்களது காதல் பட்டியலில் ஒரு நகர சுத்தி வேலை செய்யும் பெண் தொழிலாளி இடம் பிடிக்க முடியுமா? வேளைக்கொரு ஆடம்பரம், வயதுக்கொரு வாகனங்களையும் வாங்கித் தரும் அம்பானிகளின் புத்திர பாசமும், ஒரு பலூன் வாங்குவதற்கே யோசிக்கும் கீரை விற்கும் பெண்களின் நேசமும் வேறுபடுவது எதில்?

மனோரஞ்சனின் மகன் நவீன இளைய தலைமுறையின் நகலாய் ஒட்டாமல் சலிக்கிறான், வெட்டி வெட்டி பேசுகிறான், செல்பேசியோடு விடாது உறாவடுகிறான், அப்பா படம் ஓடும் திரைக்கு பின் காதலியோடு மோகிக்கிறான். பழைமை வாத அம்மா, மொக்கை படங்களில் நடிக்கும் அப்பா எவரோடும் அவனால் ஒட்ட முடியவில்லை.

மற்ற பையன்களுக்கு கிடைத்திராத பல்சுவை வசதிகளோடு வாழும் ஒரு பணக்கார வீட்டுப் பையன் தனது வீட்டு சேவகர்களைப் போல அப்பாவை நடத்த முடியாது. பாக்கெட் மணியும், பாக்கெட் கணினியும் தரும் கருவூலத்தின் கையையும், பூட்டையும் அறிவதற்கேற்ப அப்பாவோடு பெரிய முரண்பாடு வராது.

அப்பா மீது மகன்களுக்கு வரும் விடலைப்பருவ முரண் பொதுவானது என்றாலும் அதே பருவ ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளும் வாய்ப்பை பொருட்களாலும், பணத்தாலும் சாத்தியப்படுத்தும் வாய்ப்பு பொதுவானதல்ல.

அப்பா சாகிறார் என்றதும் அதே அல்ட்ரா மாடர்ன் விடலை பையன் அழுகிறான். அந்நேரம் நம்முடன் சிரிப்பதற்கு திரையரங்கில் எவருமில்லை (காட்டுமிராண்டி கம்யூனிஸ்டுகள்).

இப்படத்திற்கான சாமர்த்தியங்களால் என்ன பயன்?
கல்லூரி படித்து விட்டு என்ன செய்யப் போகிறாய் என்று கமல் கேட்கும் போது இப்படியெல்லாம் இதற்கு முன் கேட்டதில்லையே என்பதாக குத்துகிறான் மகன். ஊரறிந்த ராசாவுக்கு வீட்டுப் பையனின் கல்விக் கனவுகளை கேட்டறிய நேரமில்லை என்று ராசாக்களின் தியாகத்தை உணர்த்தும் போது வாயில்லா வெண்திரை இந்த அட்டூழியத்தை கண்டு அழுகிறது. (அதே காட்டுமிராண்டிகள்)

போகட்டும். மகனோ கொலம்பியாவிலோ, இலண்டனிலோ திரைக்கதை படிக்க விரும்புவதாகவும், அதன் பிறகு அப்பாவுக்கு ஒரு திரைக்கதை எழுதி அவர் யார் என்பதை இந்த அசட்டு கோடம்பாக்கத்திற்கு காட்ட வேண்டும் என்று கூறுகிறான் பாருங்கள், அப்போதும் அனாதையாகவே சிரிக்க வேண்டியிருக்கிறது.

புதுதில்லியின் பண்ணை வீடுகள், மும்பையின் நள்ளிரவு பார்ட்டிகளுக்கு இணையான மகாபலிபுரம் சினிமா விருந்துகளில் வாழ்க்கையை கழிக்கும் அந்த பையன், ஒரு அசட்டு காதலியை உரசிக் கொண்டு வேலை வெட்டி இல்லாமல் “நான் பெரிய அறிவாளியாக்கும்” என்று சிலிர்த்துக் கொள்ளும் போது வயிறு இருப்பவர்கள் அத்தனை பேருக்கும் வாந்தி வரவேண்டும்.

இது கூட பரவாயில்லை. மகனது தலையை கிரிக்கெட் பால் பாதுகாப்புடன் பிடித்துக் கொண்டு எட்டுத்திசையிலும் கமல் வாடி ஆடும் போது, வெளியே சுற்றுச்சுவரில் ரசிகர்கள் கைதட்டுகிறார்கள். “எப்பா இது என் பெர்சனலப்பா, விட்டுடுங்கோ” என்று கெஞ்சுகிறார் அவர். இப்படியெல்லாம் தியாகம் செய்ய வேண்டிய அவசியம் என்ன?

படத்திற்கு பத்திருபது கோடிகளை சன்மானமாக பெறும் சுதந்திரப் போராட்டத்திற்கு இத்தகைய தடியடி, சித்திரவதைகளையெல்லாம் அனுபவிக்க வேண்டியிருக்கிறது போலும். ஆடத்தெரியாத பரதக் கலைஞி, ஆட்டம் மோசம் என்றதும் பார்ப்பவர்களின் கண்களை பறித்தால்தான் அடுத்த முறை ஆடுவேன் என்று சொன்னால் ஒத்துக் கொள்வீர்களா?

திரையரங்கில் ஒத்துக் கொள்கிறார்கள்.

மேட்டுக்குடி என்றாலும் அங்கே தந்தை பாசமோ, புத்திர வாசமோ இருக்காதா, எதையெடுத்தாலும் வர்க்க பேதம் பார்க்கிறீர்களே என்று கொதிப்போர் எவரும் அத்தகைய மேட்டுக்குடியின் மன அமைப்பை கற்பனையிலும் தரிசித்திருக்க முடியாது. அது பணக்கட்டுக்களால் ஆளப்படும் உலகம். அங்கே பங்கு சந்தைதான் பந்த பாசத்தின் வீரியத்தினை அளவிடும்.

அப்பாவுடன் இருக்கும் அழகான ஆண்ட்ரியாவைப் பார்த்ததும் “வேற பொண்ணுக்காக அம்மாவ விட்டு விலக போறீங்களா?” என்று கேட்கிறான் மகன். காரில் கமலுடன் போகும் ஆண்ட்ரியாவுடன் டிரைவர், ஒரு மருத்துவர், இருக்கிறார்கள். மற்றவர்களின் ஆசையை நிறைவேற்றும் கமல் தனது கள்ளக்காதலியின் கடைசி ஆசை என்ன என்று கேட்கிறார்.

இங்கே இருக்கும் மூன்று ஆண்களும் இந்தக் (கள்ளக் காதல்) விவகாரத்தை எங்கேயும் வாய்திறக்க்கூடாது என்கிறார் ஆன்ட்ரியா. படுக்கையில் இருக்கும் ஊர்வசி, மனோரஞ்சனின் அதிகாரப்பூர்வமான மனைவி, கமலைப் பார்த்து கேட்கிறார். இளவயதில் அவர் காதலித்த யாமினியை இன்னும் காதலிக்கிறீர்களா என்று. அருகில் கள்ளக்காதலியாக நடிக்கும் ஆன்ட்ரியா மனோரஞ்சனின் மருத்துவர் இந்தக் கேள்வியால் திகைக்கிறார். கமல் திறமையாக பதிலளிக்கிறார். அதில் மூன்று பெண்களையும் அந்தந்த தருணங்களில் உண்மையாக காதலித்தாற் போல தொனிக்கிறது.

பாலச்சந்தரோ, பாலு மகேந்திரவோ தமது பிற்கால படங்களில் ரெண்டு பெண்டாட்டி கதைகளையும் அதில் கட்டுப்பெட்டி மனைவி மற்றும் நவநாகரீக காதலிகளிடம் சிக்கித் தவிக்கும் ஆண்களின் ‘அவஸ்தைகளை’ மாபெரும் உலக மற்றும் ஆழ்மனப் பிரச்சினை காவியங்களாக காட்டியிருப்பர். இந்த அளவிற்கு தைரியம் இல்லாத சுந்தர ராமசாமி அதை சக்கை வத்தல் சாப்பிடும் சித்தப்பா இன்ன பிற பிரச்சினைகளாக தனது கடைசி நாவலில் நீட்டியிருப்பார். இத்தகைய மேன்மக்களின் அதிக பட்ச ஆய்வுக்களனே இத்தகைய குடும்ப வாழ்க்கைதான். அதிலும் கட்டுப்பெட்டி சமூகமாக இருப்பதால் வரும் பாலியல் பிரச்சினைகள் இவர்களுக்கு பெரிய புதிராக இருக்கும். எனினும் இதே கட்டுப்பெட்டி சமூகத்தின் உண்மையான புதிரைப் பற்றி இவர்களுக்கு அ, ஆ கூடத் தெரியாது. ஒரு வகையில் தனக்கு கிடைக்காத சுகம் குறித்து யோசிக்கும் இப்படைப்பாளிகள் அதிலிருந்து உலகம் குறித்து ஒரு பார்வையையும் விளக்கத்தையும் கண்டறிகிறார்கள். அதுதான் அற்பவாதம்.

நிஜக் கதையின் உணர்ச்சிகளும், வண்ணங்களும், நிழல் கதையில் மாறுபட்டிருக்க வேண்டும் என்பதைத் தாண்டி இரு கதைகளுக்கு என்ன தேவை?
கற்பின் மறு பக்கம் விபச்சாரம் என்பதை யாரும் ஏற்க மாட்டார்கள். ஆனால் கற்பின் மேன்மையை நிறுவும் போர்களுக்கு ஏற்ப க.காதலின் இளைப்பாறுதல் நடக்கவே செய்யும். இத்தகைய ஒழுக்க வாதம் என்பதே சொத்துக்களைக் காப்பாற்றி ரத்த வாரிசு முறையில் கைமாற்றி கொடுக்கும் மறுக்க முடியாத சடங்கினோடு தொடர்புடையது.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்பவர் நினைத்ததை நினைத்தபடி வாழ்ந்தால்தான் சூப்பர் ஸ்டார். அவரது பெருமை, மரியாதை, செல்வாக்கு அனைத்தும் ரசிகர்களிடையே அவருக்கிருக்கும் மதிப்பை வைத்து அளக்கப்படுகிறது. எனவே அவர் கள்ளகாதலாக அல்ல, பகிரங்கமாகவே பெண்களோடு உறவு வைத்துக் கொள்வதைக் கூட அவரது செயலரோ, தயாரிப்பாளரோ, மனைவியோ, கார் ஓட்டுநரோ, ஊடக நண்பர்களோ சட்டை செய்யப் போவதில்லை. இது தெரிந்த மனோரஞ்சன் தனது வாழ்வில் வந்த மூன்று பெண்கள் குறித்து கலங்குவது, தயங்குவது, துடிப்பது, தியாகியாக வெம்புவது…………அய்யோகோ, தாங்க முடியவில்லை சாமிகளா!

இன்றைக்கு போயஸ் தோட்டத்தில் நிரந்தரமாயும், மகாபலிபுரம் பண்ணை வீட்டில் ஓய்வாகவும் வாழும் ரஜினி காந்த் 40, 50 வருடங்களுக்கு முந்தைய நடத்துநர் வாழ்வில் ஒரு ஆசாரப் பார்ப்பனருக்கு ஐந்து காசு சில்லறை கொடுக்க மறந்திட்டேன், ஆசை ஆசையாக பார்த்த துளு மொழி பெண்ணை தவிர்த்திட்டேன் என்று இப்போ ஃபீல் பண்ண முடியுமா? முடியாது என்பதன் வலிமை காலத்திலோ அல்லது மறதியிலோ இல்லை. இன்றைக்கிருக்கும் அவரது பொருளியல், நட்சத்திர சாம்ராஜ்ஜியத்தில் மேற்கண்ட சான்றுகளுக்கு எங்கேயும் இடமில்லை.

மனோரஞ்சனை ஏதோ கொஞ்சம் யதார்த்த படங்களாக செதுக்கி ஆளாக்கிய பாலச்சந்தரிடமிருந்து பறித்தெடுத்து, சகலகலா வல்லவன் எனும் மசலா படமாக ஆரம்பித்து வைத்து மாபெரும் நட்சத்திரமாக ஆக்கி மகளையும் கட்டிக் கொடுத்து, தனது கம்பெனியின் நிரந்த ஸ்டாராக பராமரிக்கும் கே.விஸ்வநாதனை கமல் எப்போதாவது வெறுத்திருக்க முடியுமா? இல்லை சகலகலா வல்லவன் தந்த வாழ்வை அவர் தூக்கி எறியத்தான் முடியுமா?

uthama-villain-5

படத்திற்கு பத்திருபது கோடி பெறுவதற்காக ஒரு நட்சத்திர நாயகன் எப்படியெல்லாம் தியாகம் செய்ய வேண்டியிருக்கிறது?
25 வயதில் அவர் காதலித்த யாமினி எனும் பெண்ணின் உண்மைக்காதலெல்லாம் படத்தில் காட்டப்படுவது போன்று எந்த நட்சத்திர வாழ்விலும் இருக்கவே முடியாது. யாமினிக்கு அவர் எழுதிய கடிதம், அதை மறைத்த மாமனார் – செட்டியார் மேனேஜர், அறிந்த மனைவி, அதை இன்று படிக்க கேட்டு உருகும் மகன் – மகள், இதையெல்லாம் தியாகமாக நினைத்து கலர் மேக்கப்பை கலைத்து கருணையை காட்டும் கமல்…….ஐயகோ நம்மிடம் திரையை என்கவுண்டர் செய்ய ஒரு துப்பாக்கி இல்லையே!

எதற்கு இழுக்க வேண்டும்? “உத்தம வில்லன்” திரைப்படத்தில் அனுதாபத்த்துடன் காட்டப்படும் மனோரஞ்சன் எனும் நட்சத்திர நாயகனது வாழ்வியல் கதைகள், காதல்கள், கருணைகள், கடமைகள் அனைத்தும் அடி வயிற்றை பிய்த்து எரியும் வலிமையுடன் கூடிய ரசனை நிரம்பிய ஆழ் சுவை நகையாக வெடி போல சிரிக்க வைக்கப்பட்டிருக்க வேண்டும். அதை விடுத்து இந்த கேலிச்சித்திரத்தை போர் ஓவியமாக காட்டும் போதுதான் உணர்ச்சிகள் அவமதிக்கப்படுகின்றன.

ஒரு வகையில் “சிட்டி லைட்சில்” சார்லி சாப்ளின் கேலி செய்யும் மேட்டுக்குடியின் உலகம், அமெரிக்க வாழ்க்கையின் போலித்தனத்தை உணர்த்தும் “அமெரிக்கன் பியூட்டி”, மேட்டுக்குடியின் இருண்ட உலகை காட்டும் “பேஜ் த்ரி” போன்றவைகளோடு சேர வேண்டிய கதை இது. இருப்பினும் இங்கே போலித்தனங்களும், கேலி செய்யப்பட வேண்டியவைகளும், இருட்டு வக்கிரங்களும் காவியமாக, தியாகமாக திணிக்கப்படுகின்றன. அடிமைத்தனத்தில் ஊறிய ரசிக மனோபாவம் அதை ஏற்றுக் கொண்டு அழுகிறது.

மூப்பனார் சைக்கிள் ஓட்டினார், ராகுல் காந்தி மண் சுமந்தார், மோடி ரயிலில் உட்கார இடம் கொடுத்தார், ரஜினி தியானம் செய்தார் என்பவையெல்லாம் இந்த உலகில் சாகா வரம் பெற்ற சாதனைகளாகவும், உணர்ச்சிகளாகவும் உணரப்படும் நாட்டில், கமலின் இந்த ‘தியாகங்களா’ ஏற்கப்படாமல் போய்விடும்?

மனோரஞ்சனின் பாசப் போராட்டத்தோடு இழுபடும் ரசிகர்கள், கூத்துக் கதையில் நெளிகிறார்கள். மெயின் ஸ்டோரியின் இணையாகவும், முரணாகவும், தத்துவ விளக்கமாகவும் நினைத்து எடுக்கப்பட்ட இக்கதையில் வரும் நகைச்சுவை பெரும்பாலும் “கிரேசி மோகன், எஸ்.வி.சேகர் மற்றும் கமலின் முந்தைய நகைச்சுவைப் படங்களின் எரிச்சலூட்டும் அறுவையாக” உள்ளது என ஏ சென்டர் எகிறுகிறது.

பிரகலாதன் கதையை மாற்றி யோசித்தால் மட்டும் அது வரலாற்றின் மறுவாசிப்பாக மாறிவிடாது. மனோரஞ்சனின் போலித்தனத்தை, அற்பத்தனத்தை அந்தக் காலத்தில் வாழும் ஒரு யதார்த்தமான மனிதன் அதே போன்றோதொரு சூழலில் எப்படி எதிர் கொள்கிறான் என்று யோசித்திருந்தால் நல்லதொரு முடிச்சும், விரிவும், ஆழமும் கிடைத்திருக்கும். எதுகைக்கு மோனையாக அதில் சீரியஸ் இதில் காமடி என்று மட்டும் இப்படைப்பாளிகள் யோசித்திருக்கிறார்கள். மேலதிகமாக நட்சத்திர கமலின் பாசப் போராட்டத்தை சுதந்திரப் போராட்டமாக உணர்ந்தவர்கள், அதன் முரண்பாடாய் வரும் உள் கதையை மட்டும் எப்படி சரியாக கண்டுபிடிக்க முடியும்?

எனினும் மனோரஞ்சனின் போலித்தனத்தை ஏற்று, கூத்துக் கதையை மறுக்கும் ஏ சென்டரை போன்று பி,சி பார்க்கவில்லை. முன்னதை அவர்கள் ஆண்டானின் சோகமாகவம், பின்னதை அடிமையின் வெற்றியாகவும் – கொஞ்சம் நகைச்சுவையாகவும் – ரசிக்கிறார்கள்.

இறுதியில் இந்த படத்திற்காக என்னவெல்லாமோ மெனக்கெட்டார்கள் என்ற விவரங்களெல்லாம் நட்சத்திர நாயகனின் ‘சுதந்திரப் போராட்டத்தின்’ அற்பத்தனத்தில் அடித்துச் செல்லப்படுகிறது. ஆமென்!

⊕⊕⊕⊕⊕

புதுசு என்ன? இது நுகர்வுக் கலாச்சாரத்தின் புனித முழக்கம் மட்டுமல்ல; எப்படியாவது ரசிகர்களை திரையரங்கிற்கு கொண்டு வர பிரயத்தனம் செய்யும் தமிழ் சினிமாவின் விருப்பமும்தான்.

அலங்காரமே கிரியேட்டிவிட்டி என்று ஆகிவிட்ட கலை சூழலில் கமல ஹாசன் ஒரு முன்னோடி! அபூர்வ சகோதரர்கள், அவ்வை சண்முகி, தசாவாதாரம் அனைத்திலும் நீங்கள் முன்பு பார்த்திராத ஆனால் எளிதில் பார்க்க கூடிய உருவ பேதங்கள்!

கதையால் மெருக்கேற்றப்படத கலையால் வித்தைகளால் எதையும் சாதிக்க முடியாது
பத்து வேடங்களில் நடித்திருக்கும் கமலை ரிலீஸ் செய்ய சென்னை வந்த ஜாக்கி சான், “இங்கே நடிகர்களுக்கு தட்டுப்பாடா?, இவரே பத்து வேடங்களில் நடித்து சிரமப்படுகிறாரே?” என்று கேட்டதாக ஒரு செய்தியுண்டு. தசாவதானி போட்டியில் வென்றால்தான் ஊரை ஆளும் அரசர்களின் கருணையை தமிழ்ப்புலவர்கள் காசாக கையிலேந்த முடியும் என்ற நிலைமை ஜாக்கிக்கு எப்படித் தெரியும்?

அப்படித்தான் இன்றைய தமிழ் சினிமா படைப்பாளிகளும் காக்காயில் ஆரம்பித்து சொக்காயில் முடியும் வெண்பாவை பாடிக் கொண்டே எத்தனை பர்கர்களை உண்டோம் என்று எண்ணிக் கொண்டே, எத்தனை மூச்சு விட்டோம் என ஒரு தருணத்தில் அனைத்து வித்தைகளையும் காட்ட மெனக்கெடுகிறார்கள். இவையெல்லாம் இப்போது ஒரு ஸ்மார்ட் போனிலேயே மலிவாக கிடைக்கும் கொசுறுகள் என்றான பிறகு படைப்பாளிகளின் பாடு திண்டாட்டமாகி விடுகிறது.

உத்தம வில்லனில் கலைஞானி மிகவும் பிரயத்தனத்தோடு அந்த திண்டாட்டத்தை கலையாக்க பாடுபட்டிருக்கிறார். நவரசங்கள், நான்கு அடிப்படை வண்ணங்கள் உருவாக்கும் எண்ணிறந்த வண்ணச் சேர்க்கைகள், நவீன சினிமாவின் ஆஃபர்களான கவர்ச்சி, வேகம், பிரம்மாண்டம், நாட்டுப்புறக் கலையில் நாட்டியம், ஹங்கேரியில் சிம்போனி இசை எதுவும் மிச்சம் வைக்கவில்லை.

இருந்தாலும் ஒரு கதை அதன் சமூகவியல், வாழ்வியல், முரண்பாடுகளோடு மோதி மெருகேற்றப்படாத வரை எந்த கலைஞானியும் காட்சிக் கலையின் விற்பன்னராக முடியாது.

-நன்றி. வினவு இணைய தளம்.   http://www.vinavu.com/2015/05/07/uthama-villain-review/