2011-ல் ஒரு தமிழ்ப்படத்துக்குக்கூட இசையமைக்காத ஏ.ஆர்.ரஹ்மானின் கைவசம், இந்த வருடத்தின் துவக்கத்திலேயே, மணிரத்னத்தின் ‘கடல்’, ரஜினியின் ’கோச்சடையான்’ பரத் பாலா, தனுஷ் இணையும் ஒரு படம், ஷங்கர், விக்ரம் இணையும் ஒரு படம் உட்பட 5 படங்கள் உள்ளன.
இதில் மணிரத்னத்தின் ‘கடல்’ பாடல்கள் அனைத்தையும் ரெகார்டிங் முடித்துவிட்ட ரஹ்மான், இப்போது’ கோச்சடையான்’ டைட்டில் மற்றும் தீம் மியூசிக் வேலைகளில் மிக மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.
இதை ஒட்டி, தனது பாலிவுட் மற்றும் ஹாலிவுட் கமிட்மெண்ட்களை கணிசமாகக் குறைத்துள்ள ரஹ்மான், இந்த ஆண்டில் மேலும் ஒரு 5 தமிழ்ப்படங்களுக்காவது இசையமைத்துவிடவேண்டும் என்கிற முனைப்புடன், ’நல்ல கதைகள் இருந்தால் என்னிடம் அனுப்புங்கள்’ என்று தனக்கு நெருக்கமான சினிமா வி.ஐ.பி.களிடம் சொல்லி வருகிறாராம்.
கொஞ்சம் கேப்’ விட்டவுடன், யுவன், ஹாரிஸ் ஜெயராஜ், ஜீ.வி. பிரகாஷ் போன்றவர்கள் தமிழ் இண்ட்ஸ்ட்ரியை வளைத்துப்போட்டு தனது இடத்தை காலி செய்துவிட்டார்கள். நம்ம ஊரில் புகழை இழந்துவிட்டு, அதை வெளிநாடுகளில் சம்பாதிப்பதால் என்ன பிரயோசனம், ‘சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போல வருமா? என்று ராஜா சார் சும்மாவா பாடிவச்சார்’ என்ற எண்ணம் தான் ரஹ்மானை இப்படி ஒரு முடிவை எடுக்கவைத்தது என்கிறார்கள் அவருக்கு நெருக்கமான இசைக் கலைஞர்கள்.