எங்கள் திருமணத்துக்கு, உங்களை நேரில் அழைக்கவேண்டி, நானும் எனது வருங்கால கணவர் பிரசன்னாவும் பிரசாத் லேப் தியேட்டரில் காத்திருக்கிறோம்’ முன்னாள் புன்னகை அரசி சிநேகாவிடமிருந்து அழைப்பு.
நேரில் ஆஜரானபோது, வழக்கமான, ஆனால் இனி நமக்கு சொந்தமில்லாத புன்னகையுடன் வரவேற்ற சிநேகாவை, பழைய பற்றுதல் மாறாமல் வளைத்து வளைத்து ‘க்ளிக்’கிக்கொண்டிருந்தார்கள் புகைப்படக்கலைஞர்கள்.
‘’நான் திறைத்துறைக்கு வந்து 12 வருடங்கள் ஆகிவிட்டன. உங்கள் முன் ‘சிநேகா’வாக நிற்பதில் உங்கள் மகத்தான பங்களிப்பு இருந்ததை எப்போதும் மறக்கமாட்டேன்.
திருமணத்துக்கு பிறகு நடிப்பதா இல்லையா என்பது குறித்து இதுவரை எந்தவித முடிவும் எடுக்கவில்லை. பிரசன்னாவும் என் முடிவில் தலையிடாமல், ‘உன் இஷ்டம் போல் முடிவெடு’ என்று முழு சுதந்திரம் வழங்கிவிட்டார்.
திருமணம் முடிந்தவுடனான எனது முதல் ஆசை என்பது, கொஞ்சநாளைக்கு மட்டும் தனிக்குடித்தனம் போய், ஒரு சாதாரண குடும்பப்பெண், தன் கணவனுக்கு என்னென்ன பணிவிடைகள் செய்வாளோ அதையெல்லாம் செய்யவேண்டுமென்பது மட்டுமே. அதற்கு இனிமேல்தான் நான் சமைக்கவே பழகவேண்டும்’’
சிநேகாவின் பேச்சை அதுவரை உற்சாகமாகக் கேட்டுக்கொண்டே வந்த பிரசன்னா ‘இனிமேல் தான் சமைக்க பழக வேண்டும்’ என்று சிநேகா சொன்னதும் சற்றே ஜெர்க் ஆனார்.
பின்னர் காதல்ல இதெல்லாம் சகஜமப்பா’ என்று நினைத்தபடி மைக்கைப்பிடித்தார்.
‘நானும் சிநேகாவும் ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ என்ற படத்தில் இணைந்து நடித்தபோதே நாங்கள் இருவரும் காதலிப்பதாக கிசுகிசு எழுத ஆரம்பித்தார்கள்.அப்போதெல்லாம் எங்களுக்குள் இருந்தது வெறும் அறிமுகம் மட்டுமே.பின்னர் அதுவே ஒரு நல்ல நட்பாக மாறி, பின்னர் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்துகொள்ள ஆரம்பித்த பிறகே காதலிக்கத் துவங்கினோம்.
அந்த சமயத்தில் வந்த கிசுகிசுக்களை மறுத்ததற்கு காரணம், அதுவரை நாங்கள் இருவருமே எங்கள் காதலை பெற்றோர் தரப்பில் சொல்லாமலிருந்தோம். இரு தரப்பிடமிருந்தும் அனுமதி வாங்கியபிறகே எங்கள் காதலை மீடியாவில் சொல்லவேண்டும் என்று முடிவு செய்திருந்தோம். இதோ இப்போது திருமண அழைப்பிதழோடே வந்துவிட்டோம்’
என்றபோது ஒரு நிருபர் எழுந்து, ‘’பிரசன்னா ஒருவேளை உங்க பெற்றோர் சம்மதிக்காமப்போயிருந்தா ? என்றவுடன், வடிவேலு மாதிரியே ‘அவ்வ்வ்வ்’ என்று சற்று அழுத பிரசன்னா ‘’அதுதான் சம்மதிச்சாட்டாங்கள்ல பாஸ். அப்புறம் ஏன் பத்திரிக்கை குடுக்கிற இந்த நேரத்துல டென்சன் பண்றீங்க’’ என்றார்.
அடுத்து, அதிமிகு உற்சாகத்தில், ‘’எங்க ரெண்டுபேரோட ஜாதி வழக்கப்படியும் கல்யாணம் நடக்கப்போகுது. அதனால சிநேகாவுக்கு ரெட்டைத்தாலி கட்டப்போறேன்’ என்றதும் மற்றொரு நிருபர், ‘’ இந்த கம்ப்யூட்டர் காலத்துலயும் ஜாதியை விட மாட்டேங்குறீங்களே. நீங்க அய்யர்ங்கிறதும், சிநேகா நாயுடுங்குறதும், இப்ப நீங்க சொல்றதுக்கு முந்திவரைக்கும் எங்களுக்கே தெரியாது தெரியுமா ? என்று ஒரு உடும்புப்பிடி போட்டதும் வெலவெலத்துப்போன பிரசன்னா,’எல்லாம் மம்மி டாடியை சந்தோஷப்படுத்தத்தான் மத்தபடி எனக்கும் உங்களை மாதிரியே ஜாதி, சடங்குகள்ல நம்பிக்கையில்லை’ என்றபடி மம்மியின் மடிசாருக்குள் போய் ஒளிந்துகொண்டார்.