நட்சத்திர கிரிக்கெட் போட்டிகளில் செஞ்சுரிகள் அடித்தாலும், தமிழ் சினிமாவில் ஒரு டஜன் மேட்ச்களுக்கும் மேல் ஆடியும், டக் அவுட் ,அல்லது சிங்கிள் டிஜிட் ரன்களிலேயே அவுட் ஆகி, சிக்கி சின்னபின்னமாகிக்கொண்டிருப்பவர் அருண் விஜயக்குமார் .
‘மல மல’ போன்ற படங்களெல்லாம் சில பல காட்சிகள் கூட ஓடாத நிலையில் , இவர் அடுத்து மலைபோல் நம்பிக்கொண்டிருக்கும் படம் , கவுதம் வாசுதேவ மேனனின் உதவியாளர் மகிழ் திருமேனி இயக்கத்தில் , தனது மாமனார் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘தடையறத் தாக்க ‘ படத்தைத்தான்.
இந்த மகிழ திருமேனிதான் செவன்த் சேனல் நாராயணன் தயாரிப்பில் , அனைவரும் பட ரிலீசுக்கு முந்தின தினமே , போஸ்டர் டிசைன்களை மட்டும் பார்த்து ஒதுங்கிக்கொண்ட ‘முன்தினம் பார்த்தேனே’ படத்தை இயக்கியவர்.
சுமார் ஒரு வருடத்துக்கும் மேலாக தயாரிப்பில் இருக்கும் ‘ தடையறத்தாக்க’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. எதோ ஒரு பர்சனல் வேலையாக பஹ்ரைன் சென்றிருந்ததால் , பட நாயகி மம்தா மோகன்தாஸ் விழாவில் கலந்துகொள்ளாத நிலையில் , படத்தில் அருணுடன் ஒரு பாடல் பாடிய எல். ஆர் .ஈஸ்வரி மேடையில் காட்சி அளித்தார்.
அதில் பேசிய இயக்குனர் திருமேனி ,எங்கே ஒரு வருடம் படப்பிடிப்பு நடந்தது தன்னால்தான் என்பதுபோல் செய்திகள் வெளியானால் தனக்கு அடுத்த படம் கிடைப்பதில் சிக்கல் வந்துவிடுமோ என்ற எண்ணத்தில் ,’ நல்லா கேட்டுக்கங்க படம் ஒரு வருஷமா ரிலிஸ் ஆகாம இருந்ததுக்கு நான் காரணமில்ல , வருஷம் ஒன்னு ஆச்சே ஒழிய ஷூட்டிங் நடந்தது வெறும் என்பத்தி நாளே நாள்தான் ‘ என்றார்.
அதைக்கேட்டதும் , ஏற்கனவே படத்தின் பட்ஜெட் எகிறிப்போனதில் பி.பி. உச்சத்தில் இருந்த தயாரிப்பாளர் மோகன் ,’டைரக்டருக்கு ரொம்ப விவரமா பேசுறதா நெனப்பு .எதோ நான் பணம் சரியா குடுத்திருந்தா 84 நாள்ல ஷூட்டிங் முடிச்சி 85 வது நாள்லயே படத்தை ரிலிஸ் பண்ணியிருப்பேங்கிற மாதிரி பேசுறாரு. என்னை மாதிரி மீடியம் பட்ஜெட் படம் எடுக்கிற புரடியூசருங்க வேதனை சொல்லி மாளாது.’ என்று விழா மேடை என்றும் பாராமல் இயக்குனரின் திருமேனிஎங்கும் தடையரத்தாக்கினார்.
இந்த மேடை மோதல் மட்டுமின்றி இவர்களுக்குள் நேற்றுவரை தீராத வேறொரு பஞ்சாயத்தும் நடந்து வருகிறது. ஏற்கனவே 84 நாட்கள் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் மேலும் ஒரு 15 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினால்தான் தான் நினைத்த மாதிரி படம் வரும் என்று அடம் பிடிக்கிறாராம் திருமேனி. ஆனால் அருண் விஜயின் மாமனாரோ , படம் ஓடாட்டாலும் என் மருமகனை வீட்டோட மாப்பிள்ளையா வச்சி கஞ்சி ஊத்துவேன் .எடுத்தவரைக்கும் எடிட் பண்ணி படத்தை முடிச்சிக்குடு ‘ என்று ஒத்தைக்காலில் நின்று அடம் பிடிக்கிறாராம்.