மிக நீ…ண்ட இடைவேளைக்குப்பிறகு ‘மதுர’ மாதேஷ் தயாரித்து இயக்கும் படம் ‘மிரட்டல்’. விநய் , புதுமுகம் ஷர்மிளா மந்த்ரே , சந்தானம் மற்றும் சத்தானபிரபு நடிதத இந்தப்படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது.
சுமாரான இரண்டு பாடல்களையும், அதையும் விட சுமாரான ஒரு ட்ரைலரையும் ஒளிபரப்பிய பின்னர், ஷங்கருக்கு இணையாக தன்னை நினைத்துக்கொண்டு,’ காமெடி த்ரில்லர் , ஜானர், ஃபியூஷன் போன்ற வார்த்தைகளை அதிகம் உபயோகித்து கேட்பவர்களை அநியாயத்துக்கு கன்ஃபியூசனுக்கு ஆளாக்கினார் மாதேஷ். அதிலும் அவரது மொத்தப்பேச்சில் ‘ஜானர்’ என்ற வார்த்தையை 164 முறையும், ‘ஃபியூஷன்’ என்ற வார்த்தையை 192 முறையும் பயன்படுத்தியதாக, மாதேஷின் நெருங்கிய நண்பர் ‘தினகரன்’ தேவராஜ் தலையை சொறிந்தபடியே வேதனையுடன் சொன்னார்.
அடுத்து, நடுவில் வேறு படங்களுக்கு போகாமல் தனது படத்துக்காக இரண்டு வருடங்களாக பொறுமை காத்த நாயகி ஷர்மிளா மந்த்ரே வை புகழ்ந்து தள்ளிய மாதேஷ், சாதாரண ஹீரோவாக இருக்கும் விநய்யை இந்தப்படம் ஒரு பெரிய ஆக்ஷன் ஹீரோவாக மாற்றும் என்று ’அடித்து’ சொன்னார்.
விழாவின் நாயகன் பட்த்தின் இசையமைப்பாளர் பிரவீண் மணியாச்சே. அவரைப்பற்றி ஏதாவது சிறப்பாக சொல்லவேண்டுமே என்று நினைத்த மாதேஷ்,’’ முதல்வன்’ பட்த்துக்கு ‘ஷக்கலக்க பேபி’ பாடலை இசையமைக்க வேண்டிய நேரத்தில் ஏ.ஆர். ரகுமான் மும்பையில் ஒரு ரெகார்டிங்கில் பிஸியாக இருந்தார். எங்களுக்கோ பாட்டு அவசரமாக வேண்டியிருந்தது. உடனே ரகுமான் அந்தப்பாட்டை பிரவீணிடமே வாங்கிக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார். அப்படி கிடைத்த பாடல்தான் ’ஷக்கலக்க பேபி’ என்று ரகுமானுக்கு எதிராக ஒரு சிறு நாட்டு வெடிகுண்டை கொளுத்திப்போட்டார்.
ஒருவேளை மேற்படி தகவலை சொல்லி மிரட்டிதான் மிரட்டல்’ ஆடியோவையே வித்தாரோ? இருக்கலாம். அதனாலதான் படத்தோட டைட்டிலுக்கு கீழ ’100 பர்சண்ட் தில்லுமுல்லு’ன்னு போட்டுருக்காரு.