‘மெரினா’வின் எதிர்பாராத சுமார் வெற்றியால்,அதை தயாரித்து இயக்கிய பாண்டே ராஜை விட அதிக லாபம் அடைந்திருப்பவர் இயக்குனர் எஸ்.எழில்.
‘மெரினா’ ஷூட்டிங்கிலிருந்து சிவகார்த்திகேயனை அப்படியே லவட்டிக்கொண்டு போன எழில், சுமார் 45 நாட்களில்,’மனம் கொத்திப்பறவை’யை முடித்துவிட்டு, சாடில்லைட்டும்,ஏரியாவுமாக இரண்டு மடங்கு பணம்கொத்தி விற்றுவிட்டதாக,’கேட்டு வயிறெரிந்த வட்டாரங்களிலிருந்து தகவல்.
மேற்படி தகவலை ஊர்ஜிதம் செய்யும் விதமாக, ஹோட்டல் ராதா பார்க் இன்னில், பிரமாண்டமான பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார் எழில்.
‘’நடுவுல ரெண்டு மூனு சுமாரான படங்களை குடுத்துட்டு,அடுத்து என்ன செய்யிறது, யாரைப்போய் பாக்குறதுன்னு தெரியாம முழிச்சிக்கிட்டு இருக்கிறப்பதான், என்னோட இளவயது நண்பர்கள் கைகொடுக்க முன்வந்தாங்க..
இந்த நண்பர்கள் இல்லைன்னா நான் இன்னொரு படம் எடுத்திருக்க முடியாமலே போயிருப்பனோன்னு யோசிக்கிற அளவுக்கு இன்னைக்கு இண்டஸ்ட்ரியோட நிலைமை இருக்கு. ரெகுலர் புரடியூசர்கள்னு இப்ப யாருமே இல்லை. பொதுவா சினிமாவோட நிலைமை ரொம்ப மோசமா இருக்கு.
ஒரு சிம்பிளான கிராமிய காதல் கதையை எடுத்துக்கிட்டு மிக சிக்கனமா படத்தை முடிச்சிட்டு வந்துட்டேன். சிவகார்த்திகேயனோட , ரவிமரியா, சிங்கம்புலி, புரோட்டா சூரி, சாம்ஸ்ன்னு ஒரு நாலைஞ்சி காமெடியன்களை தூக்கிப்போட்டுக்கிட்டு, என் சொந்த ஊருக்குப்பக்கத்துல ஷூட்டிங் ஆரம்பிச்சி, இதோ ஒரே ஷெட்யூல்ல படத்தை முடிச்சி, ஃபர்ஸ்ட் காப்பி ரெடியாகி பிஸினஸும் முடிச்சிட்டேன்.
காலைல ஷூட்டிங் ஆரம்பிப்போம். நான் எட்டு மணிக்கு வாங்கன்னா ஒன்பது மணிக்கு வருவாங்க.நோ டென்சன். சீன் பேப்பரை குடுத்த உடனே சிவகார்த்திகேயன் தலைமையைல அவங்கவங்க சொந்த டயலாக்க எடுத்து விட ஆரம்பிப்பாங்க.அடுத்த ஒரு மணி நேரத்துல நான் எழுதாத ஃப்ரெஷ் டயலாக்ஸோட ஷாட்டுக்கு எல்லாரும் ரெடியா வந்து நிப்பாங்க.அடுத்து ஒரே ஷாட்ல ஓகே ஆகி அடுத்த சீனை நோக்கி நகர ஆரம்பிச்சிடுவோம்.
நான் கூட ஆரம்பத்துல என்னடா சீன் டயலாக் எல்லாமே நம்ம முடிவைத்தாண்டி போகுதேன்னு யோசிச்சேன்.ஆனா ஒவ்வொரு முறையும் ரிசல்ட் பெட்டரா இருந்ததால அவங்க போக்குலயே விட்டுட்டேன்’’
என்ற எழிலைத்தொடர்ந்து, ஒளிப்பதிவாளர், நடிகர் ரவிமரியா,மற்றும் நாயகன் சிவகார்த்திகேயன் உட்பட பலர் பேசினார்கள்.
யார் மனதை யார் கொத்திக்கொண்டார்களோ தெரியவில்லை, நிகழ்ச்சிக்கு வராதது மட்டுமின்றி,’தினமும் கேமராமேன் காலைத்தொட்டு கும்பிட்டுட்டுதான் ஷாட்டுக்கே வருவாங்க’ என்று சிவகார்த்திகேயன் அடித்த ஒரு கமெண்ட் தாண்டி, இயக்குனர் எழில் உட்பட யாருமே படத்தின் ஹீரோயின் ஆத்மியா பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.அவ்வளவு ஏன் ? அவர் ஏன் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை எனபது குறித்து ஒரு சிறு விளக்கம் கூட கொடுக்கவில்லை. எனிதிங் ராங்?