படம் பார்க்கும் சென்சார்போர்டு அதிகாரிகளுக்கு டிபன் வாங்கிக்கொடுத்துவிட்டு, சாவகாசமாக அவர்கள் சாப்பிட்டுமுடிக்கும் வரை வெளியே காத்திருக்கும் , ஒரு கொடுமை காலகாலமாக நீடித்துக்கொண்டிருக்க ,இப்போது தயாரிப்பாளர்களை மேலும் சோதிப்பதற்கென்றே புதிய பெருச்சாளிகள் சில புறப்பட்டிருக்கின்றன.
தற்போதைய ஜெயலலிதா அரசு , திரைப்படங்களுக்கு வரிவிலக்குக் கொடுப்பதற்காக சுமார் 21 பேர் கொண்ட குழுவை
அறிவித்திருக்கிறது அல்லவா? அவர்கள்தான் இந்தப் புதிய பெருச்சாளிகள்.
தணிக்கைக் குழுவில் யு சான்றிதழ் பெற்ற படங்களை இந்தக்குழுவினர் பார்த்து, இந்தப்படத்துக்கு வரிவிலக்குக் கொடுக்கலாம் என்று பரிந்துரை செய்தால்தான் வரிவிலக்கு.ஒரு படத்தை ஏழு பேர் கொண்ட குழு பார்க்கும். அந்த ஏழு பேர் யார்..?யார்..? என்பது கடைசிவரை ரகசியமாகவே இருக்கும்.
துவக்கத்தில் ஓரளவு ஒழுங்காக இருந்த இந்த நடைமுறையில், இடையில் விவரமான சில புரோக்கர்கள் புகுந்து விட்டனராம்.அவர்கள், சம்பந்தப்பட்ட படத்தின் தயாரிப்பாளரைத் தொடர்பு கொண்டு, படம் முடிவதற்குள் அந்த ஏழு பேருக்கும் மட்டன் பிரியாணி பொட்டலங்கள், சிலோன் பரோட்டாக்கள், ஒரு டஜன் மல்கோவா மாம்பழம் ஆகியனவற்றை ஒரு பையில் போட்டு படம் பார்த்துக்கொண்டிருக்கின்ற அந்த ஏழு பேர்களின் கார்களில் வைத்துவிடவேண்டும் என்று நிபந்தனை விதித்து விடுகிறார்களாம்.
அதுமட்டுமின்றி படத்தின் பட்ஜெட்டுக்கேற்ப ஒரு தொகையும் கைமாறுகிறதாம்.படத்தின் பட்ஜெட்டுக்கேற்ப வரிவிலக்கின் மூலம் இவ்வளவு இலாபம் கிடைக்கும் என்று அவர்களே கணக்குப் போட்டுப் பணம் கேட்பதாகவும் சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி வரவர இந்த வரிவிலக்கில் உச்சக்கட்ட அரசியலும் புகுந்து விளையாட ஆரம்பித்துவிட்டது.
இது பற்றி யாரிடமும் புகார் சொல்ல முடியாமல் தயாரிப்பாளர்கள் தவிக்கிறார்களாம்.திரைத்துறை நசிந்து போய்விடக்கூடாது என்கிற நல்லெண்ணத்தில் அரசாங்கம் ஒரு சலுகை காட்டினால் அதற்குள்ளும் புகுந்துகொண்டு அழிச்சாட்டியம் செய்கிறார்களே என்கிற அவலக்குரல் திரையுலகம் எங்கும் கேட்கிறது .
இப்படி மட்டன் பிரியாணிக்கு விலைபோகும் மட்டமானவர்கள் பற்றிய செய்தியை அம்மாவின் காதுகளுக்கு கொண்டுசெல்லப்போவது யாரோ?