’ஆபரேஷன் சக்சஸ் ஆனா நோயாளிதான் அவுட்’ மாதிரி ‘தமிழ்ப்படம்’ ஹிட் ஆனாலும் அதன் நாயகி திஷா பாண்டே திக்கு தெரியாமல் தான் போனார்.
தமிழ்கூறும் நல்லுலகம் தனக்கு ரெண்டாவதாக ஒரு வாய்ப்பு தராமலேயே ரிடையர்மெண்ட் தந்துவிடுமோ என்று பயந்துகொண்டிருந்த வேளையில், திஷாவுக்கு நல்லதொரு திசையைக்காட்ட வந்த படம் தான் ‘மயங்கினேன் தயங்கினேன்’.
வேந்தன் என்ற புதியவரின் இயக்கத்தில், நிடின் சத்யாவுடன் திஷா ஜோடி சேர்ந்த அந்தப்படத்திற்கு இப்போது சென்சாரின் தயவில் புதுவித பப்ளிசிடி கிடைத்துள்ளது.
திஷாவும் நிடின் சத்யாவும் அள்ளி அள்ளி வழங்கிக்கொண்ட முத்தக்காட்சிகள் உட்பட 100 கட்களையும், 15 சவுண்ட் மியூட்களையும் சென்சார் அதிகாரிகள் வழங்கியுள்ளார்களாம். இது சமீபத்தில் வேறு எந்தப்படமும் சந்திக்காத ரெகார்ட் கத்தரிப்பு என்பதால் திஷா பாண்டே படு உற்சாகமாக இருக்கிறாராம்.
ஆனால் இயக்குனர் வேந்தனோ கவலையோடு இருப்பதாக ஃபிலிம் காட்டுகிறார். ‘’மக்கள் அனைவரும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் படம் எடுக்கிறோம்.ஆனால் என் படத்தைப்பார்த்த சென்சார் அதிகாரிகள் மேற்படி 100 கட்களை ஏற்காவிட்டால் ‘ஏ’ சர்டிபிகேட்தான் தருவோம் என்பதில் பிடிவாதமாக இருந்தனர். வேறு வழியின்றி 100 கட்களுக்கு வேதனையோடு ஒத்துக்கொண்டேன். ஆனால் இந்த கட்களால் என் கதையோட்டம் எந்த வகையிலும் பாதிக்கப்படாது’’
என்கிறார் நல்ல கிளாமர் படமாக்க்கொண்டுவந்துவிடவேண்டுமென்று மயங்கி, பின்னர் சென்சார் கட்களுக்கு தயங்கி வழிவிட்ட இயக்குனர் வேந்தன்.