காதலில் சொதப்புவது எப்படி? படத்தில் நடித்ததோடு மட்டுமின்றி, முதன் முறையாக படத்தயாரிப்பிலும் இறங்கிய தெலுங்கு நடிகர் சித்தார்த், விரைவில் மீண்டும் தமிழ், தெலுங்கில் ரீ-மேக் செய்யும் எண்ணத்துடன், ஒரு விவகாரமான இந்திப்படத்தின் ரைட்ஸை
விலை கொடுத்து வாங்கியுள்ளார்.
அந்த இந்திப்படத்தின் பெயர் ‘விக்கி டோனர்’.கடந்த இரு வாரங்களுக்கு முன் ரிலீஸான அந்தப்படம் நடிகர் ஜான் ஆபிரகாம் தயாரிப்பில், சூஜித் சிர்க்காரின் இயக்கத்தில் வெளிவந்து மும்பையில் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கிறது. தற்போதைய நிலவரப்படி, சுமார் மூன்று கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இப்படம் சுமார் முப்பது கோடி வரை அள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பெரும் வெற்றிக்கு காரணம் படத்தின் விவகாரமான கதைதான். பால்தேவ் சத்தா என்னும் பிரபல டாக்டர் புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு உதவும் பொருட்டு, ஒரு விந்து வங்கி நடத்துகிறார். அவருக்கு கிடைக்கும் விந்துதாரர்கள் உருப்படியாக இல்லாததால், டாக்டரின் தொழில் படு மந்தமாகவே நடக்கிறது.இதை ஒட்டி ஒரு நல்ல ‘ஆண்மகன்’ கிடைக்காமாட்டானா என்று டாக்டர் ஏங்கிக்கொண்டிருக்கும் வேளையில்,தற்செயலாக, கதையின் நாயகன் ஆயுஸ்மான் குரானாவை சந்திக்கிறார்.அவரைப் பெரும் பாடுபட்டு தனது விந்துதாரர் ஆக்குவதும்,அது பின்னாளில், குரானாவின் காதலிக்கு தெரிந்து, காதல் உடைவதுமாக போகிறது ‘விக்கி டோனரின் கதை.
மும்பை போல்,தமிழ், தெலுங்கில் இந்தக்கதையை ஏற்றுக்கொள்வார்களா என்று சற்றும் யோசிக்காமல் பெரும் விலை கொடுத்து வாங்கியுள்ள சித்தார்த்,விந்துதாரராக தெலுங்கில் மட்டும் தான் நடித்துவிட்டு, தமிழில் ‘பவர் ஃபுல்லான’ வேறு ஹீரோவைப்போடலாமா என்று யோசித்து வருகிறாராம்.