’நான் படப்பிடிப்புக்கு செல்லும்போது என் கண்ணனின் இரண்டு கண்களை மட்டுமே எடுத்துச்செல்கிறேன்னு பாரதிராஜா சார் சொன்னமாதிரி, நான் படப்பிடிப்புக்கு செல்லும்போது, பிலிம் ரோலை எடுத்துச்செல்கிறேனோ இல்லையோ மறக்காமல் பிரகாஷ்ராஜை அழைத்துச்சென்றுவிடுவேன்’ என்று சிரிக்கிறார் ‘பயணத்துக்குப் பிறகு நீண்ட ஓய்வெடுத்த ராதாமோகன்.
ஓரிரு தினங்கள் முன்பு, மைசூரில் தனது புதிய படமான ’கவுரவ’த்தை தொடங்கிய ராதாமோகன், பெருமளவு புதுமுகங்களே நடிக்கும் தனது புதிய படத்தில் முந்தைய படங்களின் சாயல் துளி கூட இருக்காது என்கிறார்.
‘’இதுவரை நான் இயக்கிய படங்கள் அத்தனையுமே நகரம் சார்ந்த கதைகள் கொண்டவை. ‘கவுரவம்’ நான் இயக்கும் முதல் கிராமியப்படம். நான் நகரவாசிதான் என்றாலும் கூட, ஒரு தத்ரூபமான கிராமியப்படத்தை இயக்கிவிட முடியும் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை எனக்கு இருக்கிறது. எஸ். தமன் இசையமைக்க, ஒரு சிறிய இடைவெளிக்குப்பிறகு எனது ஆஸ்தான எழுத்தாளர் விஜி வசனம் எழுதுகிறார்.
‘பயணம்’ போலவே இதுவும் தமிழ், தெலுங்கு என இருமொழிகளுக்கான கவுரவமாகவே படம் தயாராகிறது.
படத்தின் ஹீரோ, ஹீரோயின் இருவருமே புதுமுகங்கள் தான் என்றாலும், அவர்களுக்கு இணையான, மிக மிக முக்கியமான கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கிறார்’’. என்கிறார் ராதாமோகன்.
’சிவாஜியின் ’கர்ணன்’ படம் மாதிரியே ‘கவுரவம்’ படத்தையும் ரீ-ரிலீஸ் செய்ய முயற்சி நடக்குதே அப்ப இந்த டைட்டிலை நீங்க பயன்படுத்த முடியாதே என்று கேட்டால்,’’ வேற என்ன பண்றது? ’கவுரவம்’ பாக்காம’ கண்ணா நீயும் நானுமா?ங்குற மாதிரி வேற டைட்டில் வச்சுக்க வேண்டியதுதான்’’ என்று சாதாரணமாக பதிலளிக்கிறார் ராதாமோகன்.