மாடு இளைத்தாலும் கொம்பு இளைக்காது ‘ என்று சொல்வார்களே அதற்கு இன்றைக்கு சரியான சாட்சி இயக்குனர் பாலுமகேந்திரா.
தனது தள்ளாத வயதிலும், தனக்கு தெரிந்த சினிமாவை, அடுத்த தலைமுறைக்கு கற்றுக்கொடுக்கும் ஆர்வத்தில் அவர் ஒரு மூத்த மாணவராகவே செயல்படுகிறார் என்றே சொல்லலாம்.
நேற்று பிரசாத் லேப் தியேட்டரில் நடந்த ‘முதல் தகவல் அறிக்கை’ படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டு விழாவின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பாலுமகேந்திரா,நல்ல சினிமா, கெட்ட சினிமா எது என்பது
பற்றி, மிக யதார்த்தமான கருத்தைச்சொல்லி வந்திருந்த அனைவரையும் பரவசப்படுத்தினார்.
‘’ இந்தப்படக்குழுவினர் யாரையுமே எனக்கு நேரடியாகத்தெரியாது. தெரிந்தவர்களை மட்டும்தான் வாழ்த்த வேண்டுமா என்ன? இந்தப்படம் தரமான,அதே சமயம் வியாபார ரீதியாகவும் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.
ஏன் இரண்டு விதமாகவும் வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்றால், வெறுமனே நல்ல படம் என்று பெயர் வாங்கி வசூல் ரீதியாக ஜெயிக்காவிட்டால், பணம் போட்ட தயாரிப்பாளரின் நிலை என்னாவது? பணம் போட்டவருக்கு அசலாவது வரவேண்டாமா?
எனக்குத்தெரிந்து சினிமாவில் வணிக நோக்கம் இல்லாத சினிமா என்று உலகின் எந்தமூலையிலும் இல்லை. அப்படி இருக்கிறது என்று சொன்னால் அது முற்றிலும் பொய்.
சினிமா என்பது பால் வியாபாரம் மாதிரி. எப்போது கன்றுக்குட்டி மட்டுமே குடிக்கவேண்டிய பாலை கறந்து விற்கவேண்டும் என்று நாம் முடிவு செய்கிறோமோ அங்கேயே வியாபாரம் துவங்கிவிட்டது.
ஆனாலும், இதில் பாலில் தண்ணியே கலக்காமல் விற்க விரும்புபவர்கள், லிட்டருக்கு கால் லிட்டர் தண்ணீர் கலக்க விரும்புபவர்கள், பாதிக்குப்பாதி கலப்பவர்கள், தண்ணீரில் பாலைக்கலப்பவர்கள் என்று பலதரப்பட்ட வியாபரிகள் இருக்கிறார்கள்.
இதில் நீங்கள் எந்தவகையான பால் வியாபாரி என்று முடிவு செய்துகொண்டு,கொஞ்சமாய் பாலில் சமரசத்தண்ணீர் கலந்து இரண்டு விதமான வெற்றிகளையும் பெற வாழ்த்துகிறேன்’’ என்றார் பாலுமகேந்திரா.
நம்ம தமிழ்சினிமாவுல, நூத்துக்கு தொன்னூரு பேரு, பதினாலு ரீலு கார்ப்பரேசன் தண்ணியில அரை லிட்டரு பாலுகூட கலக்காம, வவுத்தால போற மாதிரியே படம் தர்றாங்களே பாலுமகேந்திரா சார், அவிங்கள எல்லாம் கொஞ்ச நாளைக்கு மாடு மேய்க்க அனுப்பக்கூடாதா?