தியேட்டர்களில் படங்களின் வசூல் நிலவரம் வரவர மிக கலவரமாகி வருவதைத் தொடர்ந்து, சமீப காலமாக பெரிய படங்கள் ஒரே தேதிகளில் ரிலீஸாவது குறைந்து வந்தது. கவுன்சில் மூலமாகவோ, அல்லது தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும் தங்களுக்குள் பேசிவைத்துக்
கொண்டோ, ஒன்றிரண்டு வாரங்கள் இடைவெளி விட்டு பெரிய படங்களை ரிலீஸ் செய்து வந்தனர்.
திரையுலகினரின் இந்த ‘நட்புணர்வுக்கு’ வேட்டு வைக்கும் வகையில், அஜீத்தின் ‘பில்லா 2’ ரிலீஸாகவுள்ள அதே ஜூன் 24-ம் தேதியே கார்த்தி நடித்த ‘சகுனி’ படத்தை ரிலீஸ் செய்வதில் பிடிவாதமாக உள்ளார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா.
சில மீடியேட்டர்கள் மூலம் பேசிக்கொண்ட வகையில், ‘சகுனி’ யை ஜூலை 7-ம் தேதிதான் ரிலீஸ் செய்யப்போவதாக அறிந்துகொண்ட பிறகுதான் ‘பில்லா 2’ ரிலீஸ் தேதியை, அதை வாங்கி விநியோகிக்கும் ஆஸ்கார் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரன் முடிவு செய்ததாகவும், இப்போது, வீம்புக்கு ஒரு போட்டி உருவாக்கும் எண்ணத்தோடே ஞானவேல் ராஜா திடீரென அதே தேதியில் ரிலீஸ் செய்வதாகவும், மோதல் என்று வந்த பிறகு பின் வாங்கினால், அது தனக்கும் அஜீத்துக்கும் பெருத்த அவமானமாக இருக்கும் என்று அவர் கருதுவதாகவும் ஆஸ்கார் ரவியின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கார்த்திக்கு தெலுங்கிலும் ஓரளவுக்கு நல்ல மார்க்கெட் இருப்பதால், பிசினஸ் ரீதியாக நல்ல லாபம் பார்த்துள்ள ‘சகுனி’ ஞானவேல்ராஜா, இப்பட துவக்கத்திலிருந்தே, கார்த்தி அஜீத்தை முந்திவிட்டது போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முட்டிமோதி வருகிறார். அதன் க்ளைமேக்ஸாக ‘ வந்தா மல, போனா தல’ என்ற எண்ணத்தில் அவர் எடுக்கும் ரிஸ்க் தான் இந்த மோதல் முடிவு என்கிறார்கள் ஞானவேலின் நண்பர்கள்.
மல’ யா ‘தல’ யா ரெண்டுவாரம் பொருத்திருந்துதான் பார்ப்போமே?