சில பெண்களைப்போலவே சில படத்தலைப்புகளும், முதல்முறை பார்க்கும்போதே, நம்மை வசீகரித்துவிடுகின்றன.
என்னப்பொறுத்தவரை ‘கிருஷ்ணவேணி பஞ்சாலை’யும் கூட அப்படியொரு வசீகரமான தலைப்புதான். அதுமட்டுமின்றி சில போஸ்களில் நாயகி நந்தனாவும்,’ அத்தான் எப்ப என்னப்பாக்க வர்றீங்க? என்று அழைப்பது போலவே இருந்தது.
தமிழ்சினிமா வரலாற்றில் முதல்முறையாக casting director என்று அடிக்கடி பத்திரிகைகள்
மூலமாக சிலாகித்தார்கள்.
கதை 1957-ல் கருப்பு வெள்ளையில் துவங்குகிறது. தனக்கு துரோகம் செய்த உறவினன் ஒருவனை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொள்கிறார் கிருஷ்ணவேணி பஞ்சாலையின் முதலாளி.
இதைத்தொடர்ந்து வெள்நாட்டிலிருந்து திரும்பும் அவரது மகன் நிர்வாகத்தை ஏற்றுக்கொள்ள, பஞ்சாலை சிறப்பாகவே நடக்கிறது. 25 சதவிகிதம் போனஸ் கேட்டபோது 45 சதவிகிதம் தந்த அவரது நல்ல மனசை நெருக்கடியான ஒரு நேரத்தில் தொழிலாளர்கள் புரிந்துகொள்ள மறுக்கிறபோது ஸ்ட்ரைக் வருகிறது.
அந்த ஸ்ட்ரைக் வருடக்கணக்கில் நீடிக்க பஞ்சாலைத்தொழிலாளர்கள் பஞ்சத்தொழிலாளர்களாக மாறி நிற்க, யாரும் எதிர்பாராத ஒரு நாளில், அவர்கள் அனைவரையும் அழைத்து செட்டில்மெண்ட் தருகிறார் முதலாளி.
என்னங்க கதை டாகுமெண்டரி மாதிரி போகுதே?
இப்படி ஒர் கேள்வி வந்துவிடக்கூடாதே என்பதற்காக, அந்த பஞ்சாலையில் நாயகனும் நாயகியும், மில் வேலை எதுவும் பார்க்காமல், எப்பப்பாத்தாலும் காதலித்துக்கொண்டே இருக்கிறார்கள். மில்லின் சூப்பர்வைசரும், படத்தின் கேஸ்டிங் டைரக்டருமான சண்முகராஜா, ஒரு நாலணா சாக்லேட்டை கையில் வைத்துக்கொண்டு, மில்லில் வேலை செய்கிற அத்தனை பொண்ணுகளிடமும் ஜொள்ளு விடுகிறார். பாலாசிங் மைனராக வந்து மஜா பண்ணுகிறார். எம்.எஸ்.பாஸ்கர் பைல்ஸ் கம்ப்ளெய்ண்டில் காமடி கதகளி ஆடுகிறார். தென்னவன் சாதி வெறியோடு அலைகிறார். அவரது அக்கா ரேணுகாவோ, நாயகியின் அக்கா வேறு சாதிப்பையனை கண்ணாலம் கட்டிக்கிட்ட ஒரே காரணத்துக்காக, நல்ல மசாலா மணக்க குழம்பு வைத்து, அதில் விஷம் கலந்து கொல்லுகிறார்.
படத்தை தயாரிச்சதே சக்தி மசாலா நிறுவனம்ங்கிறப்ப, கதையில இவ்வளவு மசாலா இருக்கிறப்ப,இப்ப நீங்க கேக்க முடியுமா என்னங்க படம் டாகுமெண்டரி மாதிரி இருக்கேன்னு?
ஆனால் இவ்வளவு இருந்தும், படம் முழுக்க டாகுமெண்டரி வாசனை இருந்ததை, பழக்க தோஷத்தினாலோ என்னவோ இயக்குனரால் தவிர்க்க முடியவில்லை.
ஹீரோ ஹேமச்சந்திரன், ஹீரோயின் நந்திதா இருவருமே நடிப்பு கிலோ என்ன விலை என்று கேட்கிறார்கள்.
படத்தில் தென்னவன், எம்.எஸ்.பாஸ்கர், ரேணுகா, பாலாசிங், சண்முகராஜா என்று ஏகப்பட்ட குணச்சித்திர நடிகர்கள் இருக்கிறார்கள். பஞ்சாலையில் நுழைந்த்தால் ஏற்பட்ட டஸ்ட் அலர்ஜியாலோ என்னவோ எல்லோருமே சற்று நட்டு கழண்டவர்கள், அதாவது ‘குணா’ சித்திரத்தில் கமல் போலவே வருகிறார்கள்.
படத்தின் துவக்கத்தில் 1957, 67, 77 என்று வருடங்களைப் போட்டுவந்த இயக்குனர் திடீரென்று மெயின் கதை வரும்போது, அது எப்போது நடக்கிறது என்பதை சொல்லத்தவறி விட்டார்.
சம்பளமும், போனஸும் தரமுடியாமல் போன நிலையிலும் முதலாளியிடம் விசுவாசமாக இருந்த ஒரு சில ஊழியர்களைப்போல், ஒளிப்பதிவாளர் சுரேஷ் பார்கவும், இசையமைப்பாளர் ரகு நந்தனும் ஓரளவுக்கு உழைத்திருக்கிறார்கள்.
படம் முடியும் தறுவாயில், பஞ்சாலையில் வேலை செய்த மாரியம்மா என்ற பெண்ணைக்காணோமே என்று யாரோ தேட,’ ’’அவ கதை உனக்குத்தெரியாதா’’ என்று வேறு யாரோ பதில் சொல்ல, டைரக்டர் ஒரு விஷுவல் காட்டுகிறார்.
உருக்குலைந்துபோன பஞ்சாலையின் வாசலில், காற்றின் திசைகள் தேடி கூந்தல் அலைய, கிழிந்த உடைகளுடன், மனநிலை முற்றிய நிலையில் அந்த மாரியம்மா,’’ நான் லேட்டா வந்ததால என்னை மில்லுக்கு வெளிய நிறுத்திட்டாங்க. நான் லேட்டா வந்ததால என்னை மில்லுக்கு வெளிய நிறுத்திட்டாங்க’’ என்று தொடர்ந்து அரற்றிக்கொண்டிருக்க படம் முடிகிறது.
எப்படியெல்லாமோ தியேட்டருக்குள் வந்த நாமோ,பஞ்சாலையில் நடந்த குழப்ப கூத்துக்களால் பஞ்சராகி, மாரியம்மாக்களாக, மாரியப்பன்களாக வெளியேறிக்கொண்டிருக்கிறோம்.