’பொய் சொல்லப் போறோம்’ பிரிவோம் சந்திப்போம்’ யுத்தம் செய்’ போன்ற படங்களில் அம்மா வேடங்களில் நடித்து, தற்போதைய தமிழ்சினிமாவின் ‘மோஸ்ட் வாண்ட்ட் மம்மி’யாக திகழ்ந்து வருபவர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.
யாரிடமும் உதவி இயக்குனராகக்கூட வேலை செய்யாத லக்ஷ்மி, துணிந்து ஒரு படம் இயக்கத் துவங்கி, 22 நாட்களில், அதுவும் வெறும் 35 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் படத்தை முடித்தும் விட்டார். நீண்ட காலமாக படங்கள்
எதிலும் நடிக்காமல் ஒதுங்கியிருந்த, சரிதாவின் தங்கை விஜியை முக்கிய கதாபாத்திரமாகக்கொண்ட இப்படத்தின் பெயர் ‘ஆரோகணம்’.
பழம்பெரும் இயக்குனர்கள் கே.எஸ்.சேதுமாதவன், கே.பாலச்சந்தர் ஆகியோர் தலைமையில் நேற்று இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது.
விழாவில் பேசிய அனைவருமே தற்செயலாகவே, விஜியின் நடிப்பு அப்படியே ‘அக்னி சாட்சி’ சரிதாவை நினைவூட்டியதாகவே கூறினார்கள்.
அவர்களையெல்லாம் தூக்கிச்சாப்பிட்ட கூலிங் கிளாஸ் மன்னன் மிஷ்கின், ‘’ 25 வருடங்களுக்கு முன்பு என்னை ஒரு க்ளோசப் உலுக்கியது.படம் ‘அக்னி சாட்சி’ [’அக்னி சாட்சி’ வெளிவந்த ஆண்டு 1982] சரிதாவின் க்ளோசப் அப்போது என்னை நீண்ட நேரம் கட்டிப்போட்டது. அதன்பிறகு இத்தனை வருட இடைவெளியில் ‘ஆரோகணத்தில் விஜியின் க்ளோசப்’ தான் என்னை சுண்டி இழுத்தது. இந்த இரண்டு க்ளோசப் களுக்கு மத்தியில் வேறு எந்த க்ளோசப்பும் என்னைக் கவர்ந்ததில்லை’’ என்றார்.
’ஆரோகணம்’ படம் துவங்குவதற்கு சில தினங்கள் முன்பு லக்ஷ்மி தன்னிடம் டைரக்ஷன் எப்படி பண்ணவேண்டும் என்று சந்தேகம் கேட்டதாகவும், அதற்கு, ’’சினிமாவுல ஷாட் வைக்கிறதுக்கு என்ன இலக்கணம்னு இதுவரைக்கும் யாருக்குமே தெரியாது. அதேபோலத்தான் எனக்கும் தெரியாது’’ என்று பதிலளித்ததாகவும் அவையடக்கத்துடன் கூறினார்.
பின்னர் பாலச்சந்தர்,சேதுமாதவன் போன்ற ஜாம்பவான்கள் இருந்த சபையில் அப்படி பேசியிருக்கக்கூடாதோ என்று சுதாரித்தவர், ‘’ஒருவேளை எப்படி ஷாட் வைக்கிறதுன்னு இவங்கள மாதிரி மேதைகளுக்கு கண்டிப்பா தெரிஞ்சிருக்கும்’’ என்று தானும் நெழிந்து மற்றவர்களையும் நெழிய வைத்தார்.