இடம் –ஹோட்டல் விஜய் பார்க். நிகழ்ச்சி -மலேசிய தமிழ் வர்த்தக சங்கமும், பிங்ஆட்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்திய மோட்டோ ஷோ 2012 பற்றிய பிரஸ்மீட்.
வருகிற ஜுன் 22, 23, 24 ஆகிய மூன்று தேதிகளில் சென்னை வர்த்தக மையத்தில் கார் மற்றும் இரு சக்கர வாகனங்களின் கண்காட்சி நடைபெற உள்ள நிலையில்,. இது பற்றிய அறிவிப்பையும் சாலை விழிப்புணர்வை பற்றியும் பேச
வந்திருந்தார்கள் நமீதாவும், நடிகர் பரத்தும்.
இருவரும் இணைந்து மேடையை நோக்கி வந்தபோது, ‘யாணையும் பூனையும் வர்ற மாதிரி இருக்குள்ள ‘’ என்று யாரோ ஒரு நிருபர் கமெண்ட் அடிக்க அதை ஆமோதிப்பவர் போல,’ மியாவ்’ என்றபடி மேடையேறினார் பரத்.
சாலை விழிப்புணர்வு குறித்து பேச, சேலை விழிப்புணர்வு எதுவுமின்றி, ஒரு பயங்கரமான கவுனில் மேடையில் அமர்ந்திருந்த நமீதா, நம்ம தமிழ்நாட்டு மச்சான்களுக்கு வெறுமனே அறிவுரை மட்டும் சொல்லிக்கொண்டிராமல், கொடுமையான தமிழில், கடுமையான எச்சரிக்கையும் விடுத்தார்.
‘’என்க்கு ரோட்மேல ஸ்பீடா போறவனை சுத்மா புடிக்காத். எதிர்காலத்துக்கு நாண் அர்சியில் போஸ்டிங்க் வந்தா [ அதாவது அரசியலில் ஏதாவது பதவிக்கு வந்தா], ட்ராஃபிக் ரூல்ஸ் மதிக்காம கார், பைக் ஓட்டுற மச்சான்ஸ் மேல ஃபைவ் தவுஸண்ட்,டென் தவுசண்ட் ஏன் அதுக்க்ம்மேல ஃபிப்டி தவுசண்ட் கூட ஃபைன் போடும்’’
என்று சுமார் பத்து நிமிடத்துக்கும் மேலாக, தமிழ்மேல் வண்டியை ஓட்டி ஆக்ஸிடெண்ட் பண்ணிய நமீதாவுக்கு பைக் ஓட்டுவதென்றால் கொள்ளைப்பிரியமாம். உங்க ஏரியவுல நல்ல ரோடு இருந்தா சொல்லுங்க மச்சான்ஸ் என்கிறார்.