சிவகாசி, திருப்பாச்சி, திருத்தணி, மானாமதுரை, கோபிச்செட்டிபாளையம், கும்மிடிப்பூண்டி போன்ற படங்களில் இயக்குனர் பேரரசு அடித்த பஞ்ச் டயலாக்குகள் கேட்டு பஞ்சராகி, இன்னும் ஒட்டுப்போட முடியாமல் அலைகிற தமிழ்ரசிக சிகாமணிகளுக்கு, சற்றும் எதிர்பாராத ஒரு நற்செய்தி.
கோடம்பாக்கத்தில் தனது கலைப்பயணத்தை தற்காலிகமாக முடித்துக்கொண்ட பேரரசு, தற்போது கேரளாவை நோக்கி படமெடுக்கவிருக்கிறார்.
இடையில் சும்மா இருக்கவேண்டிய நிர்பந்தத்தில், 90 களில் வெளிவந்து சக்கைப்போடுபோட்ட மம்முட்டியின், ’சாம்ராஜ்யம்’ படத்தின் தொடர்ச்சியாக ஒரு கதையை தயார் செய்திருந்தார் பேரரசு. அந்தக்கதையைக் கேட்ட
மம்முட்டி வெரி மச் இம்ப்ரஸ்ஸுடு. அப்புறமென்ன, ‘’வாங்கண்ணே மலையாளத்துல கலக்குங்க’ என்றபடி, ஒரு பெரிய தயாரிப்பாளரையும் அமைத்துக்கொடுத்து, கால்ஷீட் தந்திருக்கிறார். படத்துக்கு ‘சன் ஆஃப் அலெக்ஸாண்டர்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள்.
‘’கடைசியா நான் இயக்குன தமிழ்ப்படத்துக்கு நான் தான் மியூசிக் பண்ணேன். கொஞ்சம் கேக்குறீங்களா?’’ என்று பேரரசு தலையைச்சொறிய ஆரம்பித்தவுடன், செவிகளுக்கு பேராபத்தை விளைவிக்கக்கூடிய அவரது உள்நோக்கத்தை புரிந்துகொண்ட மம்முட்டி, ‘’சாம்ராஜ்யம்’ படத்துக்கு 20 வருஷத்துக்கு முந்தி இளையராஜா சார் போட்ட மியூசிக், இன்னும் கூட என் காதுல ஒலிச்சிக்கிட்டே இருக்கு. இந்தப்படத்துக்கும் அவர்தான் மியூசிக். பேசாம டைரக்ஷன் பண்ற வேலையை மட்டும் பாருங்க’’ என்று கடித்து அனுப்பி வைத்தாராம்.
‘சந்திரமுகி’ ஒளிப்பதிவாளர் சேகர்.வி. ஜோஸப் ஒளிப்பதிவு செய்ய, இசைஞானி இசையமைக்க, கேரளாவிலேயே இதுவரை அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட, ‘உறுமி’ பழசிராஜா’ படங்களையும் விட பெரிய பட்ஜெட்டில் உருவாகப்போகிறது,’ சன் ஆஃப் அலெக்ஸாண்டர்’.
பேரரசு அண்ணே, எப்பிடியாவது ஒரு ஹிட்டு குடுத்து கேரளாவுலயே செட்டிலாகிருங்கண்ணே…