பாலா சென்னை திரும்பிவிட்டார் –செய்தி.
பாலா படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பிவிட்டார்- அடடே ஒரு ஆச்சரியக்குறியுடன் கூடிய செய்தி.
பாலா மொத்தப்படப்பிடிப்பையும் முடித்து, பூசணிக்காய் உடைத்து சென்னை திரும்பிவிட்டார்- ஆச்சரியக்குறியுடன்
கேள்விக்குறியையும், இன்னபிற சில குறிகளையும் சேர்த்தே எதிர்கொள்ளவேண்டிய செய்தி.
ஆனால் தயாரிப்பாளர் தரப்பும், அதர்வாவின் தரப்பும் இதை உறுதி செய்வதால் ஏற்றுக்கொள்ளவேண்டிய செய்திதான்.
வழக்கமாக முன்னூறு நாள், முன்னூறு ரோல் ஃபார்முலாவில் இயங்கும் பாலா இந்தமுறை , ஆஃப்டர் ஆல் ஒரு ’பரதேசி’க்கு இதுபோதும் என்று நினைத்தோ என்னவோ, வெறும் 180 ஏ நாட்களில் படத்தை முடித்திருக்கிறார்.
ஆனால் இப்போதுள்ள சூழ்நிலையில் 180 நாட்கள் ஷூட் பண்ணியதாக வெளியே சொல்வது கூட தனக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி தரக்கூடும் என்பதால் ‘சென்னையில இறங்குனதும் பாலா 80 நாட்கள்ல மொத்தப்படப்பிடிப்பையும் முடிச்சிட்டார்னு எல்லார்க்கும் போன் போட்டு சொல்லுங்க’ என்றாராம் மேனேஜர்களிடம்.
கடைசி ஷெட்யூல் மட்டுமே நான்ஸ்டாப்பா 90 நாள். இதுல மொத்தப்படமும் 80 நாள்ல முடிஞ்சதுன்னு சொன்னா எவங்க நம்புவான்? என்று பாவம் அவர்களால் பாலாவிடம் கேட்க முடியவில்லை.
அடுத்ததாக ஹீரோயின் வேதிகாவிடம்,’’ கதை பத்தியும், ஷூட்டிங் ஸ்பாட்ல நடந்த எதை பத்தியும் வாயைத்தொறக்க கூடாது’ என்று எச்சரித்து அனுப்பிவிட்டு கடைசியாக கதாநாயகன் அதர்வாவை அழைத்தாராம்.
மேற்படி வேதிகாவுக்கு இட்ட இரு கட்டளைகளின் தொடர்ச்சியாக மேலும் எட்டுவித கட்டளைகளை அதர்வாவுக்கு இட்டு அனுப்பிய பாலா, இறுதியாக, ‘’நான் சொல்ற வரைக்கும், இப்ப இருக்க தாடி முதல் பாடி வரை அப்பிடியே மெயிண்டைன் பண்ணனும். படத்தை எடிட் பண்ணிப்பாத்துட்டு ரீ-ஷூட் வச்சாலும் வப்பேன். அப்பிடியே புதுசா வேற படமே எடுத்தாலும் எடுப்பேன். புரிஞ்சதா ?’’ என்றவுடன் ‘ ’ஆஹா படபடப்புக்கு ஒரு எண்ட் கார்டு போடுவாருன்னு பாத்தா மறுபடியும் முதல்ல இருந்தா?’ என்று மயக்கம் வராத குறையாக வீடு திரும்பினாராம்.