இன்றைய இளைய இயக்குனர்களிடம் காணப்படுகிற ஒரு நல்ல அம்சம், அவ்வப்போது தங்களது சக இயக்குனர்களுக்கு கைகொடுத்து தூக்கிவிட்டுக்கொள்வதுதான். படம் இயக்க வாய்ப்பு கிடைக்காத இயக்குனர்களுக்கு, தங்கள் படங்களில், நடிக்க வாய்ப்பு கொடுத்து, அவர்களை வேறு ரூட்டில் பயணம் செய்ய ஏற்பாடு செய்து தரும் காரியத்தை ஒரு சில இயக்குனர்கள் தொடர்ந்து செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.
இன்னும் சில சசிக்குமார், சமுத்திரக்கனி போன்றவர்களோ ’ உன்ன ஹீரோவா வச்சி நான் எடுக்குறேன், அடுத்து என்னை ஹீரோவா வச்சி நீ எடு’ என்று தொடர்ந்து ஒரு பிசினஸ் டீலே போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
‘பட் இந்த டீல் எங்களுக்கு ரொம்பப்புடிச்சிருக்கு’ என்றபடி மேற்படி ரூட்டில் பயணிக்க முடிவெடுத்திருக்கிறார்கள் நடிகரும் இயக்குனருமான கரு. பழனியப்பனும், இயக்குனரும் நடிகரும், ஃபெப்ஸி தலைவருமான அமீரும்.
யெஸ் கரு.பழனியப்பன் இயக்கவிருக்கும் ஒரு வில்லேஜ் படத்துக்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறார் அமீர். அமீருடன் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் ராஜ்கிரணும் நடிக்கவிருக்கும் இப்படத்தின் தயாரிப்பாளர் பெயர் அறிவிக்கப்படவில்லை, அல்லது தேடப்பட்டுக்கொண்டிருக்கிறார்.
சில வாரங்களுக்கு முன்பு, கரு.பழனியப்பன் இயக்க, அருள்நிதி ஹீரோவாக நடிக்க, அருளின் சொந்த நிறுவனமே தயாரிக்க இருப்பதாக ‘அசோகமித்திரன்’ என்ற படத்தின் விளம்பரங்கள் அனைத்து பத்திரிகைகளிலும் வந்திருந்தது. என்ன காரணத்தினாலோ அந்தப்படம் டிராப் ஆகிவிட, இப்போது பழனியப்பனுக்கு பெருந்தன்மையுடன் கால்ஷீட் கொடுத்து கைகொடுத்திருக்கிறார் அமீர். சம்பள விசயத்திலும் பழனியப்பனிடம் பெருந்தன்மையாக நடந்துகொண்டு,’’எனக்கு எவ்வளவு குடுக்கலாமுன்னு உங்களுக்கு தோணுதோ அவ்வளவு குடுங்க போதும்’ என்றிருக்கிறாராம் அமீர்.
இதையெல்லாம் விட நல்ல செய்தி, தான் ஜெயம் ரவியை வைத்து பன்னெடுங்காலமாக இயக்கிவரும் ‘ஆதிபகவான்’ முடிந்தவுடன் தானே ஹீரோவாக நடித்து இயக்கவிருந்த ‘ஜிஹாத்’ படத்தை, பழனியப்பனுக்காக காலவரையறையின்றி தள்ளிவைத்துவிட்டார் அமீர்.
இந்தக்கூட்டணியில் ஒரு சின்ன சுவாரசியத்தை கவனியுங்கள். பாரதிராஜாவின்’ அன்னக்கொடியும் கொடிவீரனும்’ படத்தில் முதலில் நடிப்பதாக இருந்தவர் பார்த்திபன். அப்படத்தில் அவர் இல்லையென்று ஆனதும் அமீர் வந்தார். அடுத்து அமீரும் இல்லையென்று ஆனதும் பார்த்திபனின் ஆஸ்தான உதவியாளர் பழனியப்பனும், அமீரும் கூட்டணி அமைக்கிறார்கள். இப்போது கூட்டிக்கழித்துப்பார்த்தால் பாரதிராஜா அவர் படத்தில் உள்ளபடியே இருக்கிறார். அவரை யாரும் நீக்கவில்லை. அவரால் நீக்கப்பட்ட அமீரை ஹீரோவாக வைத்து பழனியப்பன் இயக்குகிறார்.இப்போது அமீருடன் சேர்ந்து, ராஜ்கிரணுக்கு பதில் இப்படத்தில் பார்த்திபனைப்போட்டுவிட்டு படத்துக்கு ‘அன்னக்கொடியும் அரைநாண் கொடியும்’ என்று தலைப்பு வைத்திருந்தால், எல்லா கணக்குகளும் சரியாகியிருக்கும்
.
லைட்டா தலைசுத்துற மாதிரி இருக்குமே?