ஜித்தன்’ பெருமாள்’ படங்களுக்குப்பிறகு பெருமளவு கேப் விட்டுவிட்டு, இப்போது ‘துள்ளி விளையாட’ வந்திருக்கிறார் இயக்குனர் வின்செண்ட் செல்வா.
யுவராஜ் என்ற இளைஞரும், தீப்தி என்ற இளநியும் புதுமுகங்களாக அறிமுகமாக, படத்தின் பெரும்பாலான காட்சிகளை ராஜஸ்தான் பாலைவனப்பகுதிகளில் எடுத்துவரும் செல்வா காதல் காட்சி ஒன்றுக்காக ஒட்டக சேஸிங் எடுக்கப்போய் கதாநாயகி தீப்தி காலை ஒடித்துக்கொண்ட கதையை சொல்லிச்சொல்லி சிரிக்கிறார்.
’’ ஒட்டகங்கள் சில சமயங்களில் ராட்சஸ வேகத்தில் கூட ஓடும் என்பது நம்மில் பலருக்கு தெரிவதில்லை. நான் குறிப்பிட்ட காட்சியை எடுப்பதற்கு முன்பு ரிகர்சல் பார்த்துவிட்டு, பிறகு ஷூட்டிங் வைத்துக்கொள்ளலாம் என்று நாயகி குப்தாவிடம் சொல்லிப்பார்த்தேன். அவரோ சார் குதிரை சவாரி பண்ணச்சொன்னாலே பயப்பட மாட்டேன். அநியாயமா ஒட்டகத்துக்கெல்லாம் ரிகர்சல்னு சொல்லி என்னை அசிங்கப்படுத்துறீங்களே சார் என்று அசால்டாக சொன்னார். சரி, அனுபவத்தை விட சிறந்த ஆசான் எது என்று நினைத்தபடி காட்சியை எடுக்க ஆரம்பித்தேன்.
தீப்தி ஒட்டகத்தில் ஏற ஆரம்பித்த நேரம், ஏற்கனவே அடித்துக்கொண்டிருந்த சூறைக்காற்று வெறித்தனமாகவே அடிக்க ஆரம்பிக்கவே, ஒட்டகம் கெட்டகமாக மாறி தாறுமாறாக ஓட ஆரம்பித்தது.
ஒட்டகம் ஓட ஆரம்பித்த சிறிது தூரத்திலேயே தூக்கி வீசப்பட்ட தீப்திக்கு வலது காலில் பலத்த அடிபட்டு எலும்பு முறிவும் ஏற்பட்டது.
பெரிய ஜான்ஸிராணி மாதிரி சவால் விட்டுட்டு ஒட்டகத்துல ஏறுனா, இப்ப இப்பிடி கவுந்து கெடக்குறாளே என்று எங்களுக்கெல்லாம் சிரிப்புதான் வந்தது.’’
பின்னர் தீப்தி இருதினங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபிறகு, நன்றாக ரிகர்ஸல் பார்த்துவிட்டு மீதிப்படப்பிடிப்பை முடித்தார்களாம்.
ஒட்டகத்தை கட்டிக்கோ கெட்டியாக ஒட்டிக்கோ, வட்டவட்ட பொட்டுக்காரி என்று அன்றே வைரமுத்து சொன்னதை கடைப்பிடித்திருந்தால், முதல் படத்துலயே அடி வாங்குன பொண்ணு என்ற கெட்டபெயர் இல்லாம வந்திருக்கலாமே தீப்தி?