திரையில் டைட்டில் கார்டுகள் ஓடத்துவங்குகின்றன.
நமக்கு முகம் காட்டப்படாத ஒரு குழந்தை தன் தந்தையிடம்,’’அப்பா எனக்கு துக்கமே வரலை. ஒரு கதை சொல்லுங்க’’முரட்டுப்பிடிவாதம்
பிடிக்கிறாள்.
முதலில் மறுக்கும் அப்பா, வழக்கம்போல் ஒரு ராஜா ராணி கதை சொல்ல ஆரம்பிக்கிறார்.
‘அய்யோ அப்பா ராஜா ராணி கதை போரு. ஏழு கடல், ஏழு மலை தாண்டி…ஷ்.. சரியான போருப்பா. அப்பா வேற கதை சொல்லுங்க. அப்பா வேற கதை சொல்லுங்க.அப்பா வேற கதை சொல்லுங்க’’
‘’அய்யோ பாப்பா நிறுத்து. ஈ மாதிரி காதுகிட்ட நொய்ன்னுட்டு’’
சொல்லிக்கொண்டிருக்கும்போதே,’’ ஆங் பாப்பா ஈ’யோட கதை ஒண்ணு சொல்றேன் கேளு’’ என்றபடி, இதுவரை யாரும் கேள்விப்பட்டிராத புதுக்கதை ஒன்றை சொல்ல ஆரம்பிக்கிறார்.
’’ஒரு ஊர்ல சுதீப்புன்னு ஒரு கெட்டவன் இருந்தானாம்…’’என்றவுடன் திரையில் விஷுவல்கள் விரிய ஆரம்பிக்கின்றன.
தனக்கு இரண்டு வருடமாக எந்தவித க்ரீன் சிக்னல்லையும் காட்டாத சமந்தாவை ‘பென்சிலை சீவும் பெண் சிலையே’ என்கிற ரீதியில் லவ்வோ ல லவ்வென்று லவ்வுகிறான் நானி.. அத்தனையும் உள்ளூர ரசித்தபடி, அவனையும் விட அதிகம் காதலித்தபடி சமந்தா நாட்களை நகர்த்திக்கொண்டிருக்க, அவர்கள் வாழ்க்கையில் சுதீப் குறுக்கே வருகிறான்.
கொடிய கோடீஸ்வரனான சுதீப், சமந்தாவை அடையும் ஆசையில் படம் துவங்கிய அரைமணி நேரத்துக்குள் நாயகன் நானியை கொன்றுவிட, உடனே அடுத்த பிறவியாய் ஈ அவதாரம் எடுத்து வந்து, சுதீப்பை கதிகலங்கடித்து பழி வாங்குவதுதான் கதை.
இப்படி மொத்தக்கதையையும் சொல்லிட்டா, பாக்கிறப்ப சுவாரசியம் போயிராதா என்ற சந்தேக கேள்வியெல்லாம் வேண்டாம். கதை மொத்தத்தையும் வரி விடாமல் படித்துவிட்டுப்போனாலும், பரவசத்தோடு பார்க்கும் வகையில் ஒருவித மேஜிக்கல் மேக்கிங் இயக்குனர் எஸ்.எஸ்.சந்திரமவுலிக்கு கைவரப்பெற்றிருக்கிறது.
அதிலும், கருமுட்டையிலிருந்து ஈயாய் வெளியேறி, ஒவ்வொரு மரண கட்டங்களையும் தாண்டி வருவதை சொல்லியிருக்கும் விதத்தில், இந்திய சினிமாவின் ராஜாதான் மவுலி.
படத்தில் டூயட், குத்துப்பாடல்கள் இல்லை. சண்டை காட்சிகள் இல்லை. ஒரெ ஒரு காட்சியில் மட்டும் சந்தானம் எட்டிப்பார்த்துவிட்டு, ’இந்தப்படத்துக்கு ’ஈ’ மட்டும் போதும் நானெல்லாம் தேவையே இல்லைப்பா’ என்று ஓடிப்போகிறார். படம் பார்க்கத்துவங்கும் முன்பே உங்களுக்கு மொத்தக்கதையும் தெரியும் என்கிற போதிலும், இயக்குனரின் சுவாரசியமான திரைமொழி நம்மை அப்படியே கட்டிப்போட்டு விடுகிறது.
கேள்விகள் எதுமின்றி அவரது பரவச கதை சொல்லும் பாணியில், அதைக்காட்சிப்படுத்தியிருக்கும் வித்தையில் அப்படியே கட்டுண்டு கிடக்கிறோம்.
படத்தின் துவக்கத்தில் நாலைந்து காட்சிகளில் மட்டுமே வரும் நாயகன் நானி அப்படியே மனசை அள்ளுகிறார். சமந்தாவும் சமர்த்தான சாய்ஸ். அதிகம் அலட்டிக்கொள்ளாத இயல்பான நடிப்பு.
வில்லன் சுதீப் அப்படியே இளமைக்கால ரகுவரனை ஞாபகப்படுத்துகிறார். புத்திசாலித்தனமாக அவருக்கு டப்பிங் கொடுக்கவும் ரகுவரனை நினைவூட்டும் குரலையே பயன்படுத்தியிருக்கிறார்கள்.
மரகதமணியின் மயக்கும் இசையும், கே.கே. செந்தில்குமாரின் ஒளிப்பதிவும் தங்கள் இருப்பை எங்கும் தனியாக தெரிவிக்காமல் இயல்பாய், ஒளியை ஈ’தல் இசைபட வாழ்தல் என்று வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
படத்தில் குறைகளே இல்லையா என்ன?
ஒரு ஈ ஹெல்மெட் போடுமா? ஒரு ஈ பிரபுதேவாவையும் விட சிறப்பாக டான்ஸ் ஆடுமா?? ஒரு ஈ நாயர் கடையில் டீ குடிக்குமா???
ஈப்படி கேள்விகள் ஏராளம் கேட்கலாம்.
ஆனால் லாஜிக் பார்க்க ஆரம்பித்தால் சில நல்ல விசயங்களை ரசிக்க முடியாது.
முதல்வேலையாக உங்கள் வீட்டு குழந்தைகளை கூட்டிக்கொண்டு ஒரு இரண்டேகால் மணி நேரத்துக்கு நீங்களும் குழந்தைகளோடு குழந்தைகளாக மாறுங்கள்.