’எப்படிப்பட்ட நல்ல கதைகள் அமைந்தாலும், வியாபார நிர்ப்பந்தங்கள் காரணமாகவே இனி நாங்கள் இருவரும் இணைய முடியாது’
‘நீங்கள் இருவரும் மீண்டும் இணைந்து நடிப்பீர்களா?’ என்று கடந்த பல ஆண்டுகளாகவே கேட்கப்படும் கேள்விகளுக்கு ரஜினியும், கமலும் மாறி மாறி அளித்துவரும் பதில் இதுதான்.
ஆனால் பதினாலுகால் பாய்ச்சலில் தறிகெட்டு ஓடிக்கொண்டிருக்கும் தொழில்நுட்பத்தின் முன்னால், யார் இரண்டு பேர் இணைய வேண்டும் என்பதை, இனிமேல் சம்பந்தப்பட்டவர்கள் முடிவெடுக்கமுடியாது போல.
யெஸ். கமலும் ரஜினியும் மீண்டும் இணைகிறார்கள். படத்தின் பெயர் ‘நினைத்தாலே இனிக்கும்’
’எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்’. சங்கதி புரிந்திருக்கும். இனி பில்ட்-அப் எதற்கு?’
1979-ம் ஆண்டு கே.பாலச்சந்தர் டைரக்ஷனில்,எம்.எஸ்.வி.யின் இசையில் சூப்பர் டூப்பர் ஹிட்டாக ஓடிய ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தை ராஜ் டி.வி. நிறுவனம், சிவாஜியின் ‘கர்ணன்’ வெளியிடப்பட்ட பாணியில் டிஜிட்டலைஸ் பண்ணி வெளியிட இருக்கிறது.
இதற்கான அறிவிப்பை, பிரம்மாண்ட பத்திரிகையாளர் சந்திப்பு ஏற்பாடு செய்து வெளியிடுவதற்காக, ராஜ் டி.வி நிறுவனத்தினர் கமல்,ரஜினி இருவரையுமே அணுகியபோது, பயங்கர கடுப்புக்கு ஆளான இருவருமே சுத்தமாக ரெஸ்பான்ஸ் பண்ணவில்லையாம்.
வெறுமனே தொலைக்காட்சி ரைட்ஸை வைத்துக்கொண்டு, இப்படி ஒரு புது பிசினஸில், பழைய படங்களை இறக்க ஆரம்பித்தால், புதுப்படங்களின் கதி என்னாவது என்று யோசித்துப்பார்த்ததில், கமலுக்கும் ,ரஜினிக்கும் ‘நினைத்தாலே கசக்க ஆரம்பித்துவிட்டதோ என்னவோ?’