இன்றைய காலை போஸ்டர்களிலும், தினசரிகளிலும் ,’மாவீரன்’ ’நான் ஈ’ இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலியின் இயக்கத்தில்’ இனிதே ஆரம்பம்’ ’ சந்திரமவுலி’ என்ற விளம்பரம் பார்த்து, ‘அவரைப்பாத்தா மாசம் ஒரு படம் ஆரம்பிக்கிறவர் மாதிரி தெரியலையே’ என்று சற்றே துணுக்குற்றவர்களுக்காக மட்டுமே இந்தச்செய்தி.
இதே ‘சந்திரமவுலி’க்காக, இன்னும் ஒரு வாரம் கழித்து வரவிருக்கும் ‘இன்று முதல் பாடல் பதிவுகள்’ அடுத்த இருவாரங்களில் வரவிருக்கும் ‘இறுதிக்கட்ட படப்பிடிப்பில்’ போன்ற
எல்லாவற்றுக்குமான செய்தியும்தான் இது.
மேற்படி விளம்பரிக்கப்பட்டுள்ள ‘சந்திரமவுலி’ படமானது, நம்ம ’நான் ஈ’ ராஜமவுலிகாரு கடந்த 2005 ம் ஆண்டு இயக்கிய ‘சத்ரபதி’ தெலுங்கு படம். 54 செண்டர்களில் 100 நாட்களைத்தாண்டி ஓடிய ‘சத்ரபதி ’மலையாளத்திலும், இந்தியிலும் மேற்படி தலைப்பிலேயே உடனுக்குடன் ரிலீஸாகியிருந்தாலும், தமிழ் டப்பிங்குக்கு இவ்வளவு நாட்களாக கேட்பாரற்று கிடந்தது.
தற்போது ‘ஈ’ யின் பல சாகஸங்களுல் ஒன்றாக ராஜமவுலியின் தமிழ் மார்க்கெட் உயர்ந்து ‘சத்ரபதி’யும் தமிழில் டப்பாக இருக்கிறது.
பிரபாஸ், ஷ்ரேயா, ஜோடியுடன் பானுப்ரியா முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள இந்தப்படத்தின் கதை குடும்ப, காதல், ஆக்ஷன், செண்டிமெண்ட் குருமா கலந்து தயாரிக்கப்பட்டது.
பானுப்ரியாவின் வளர்ப்பு மகனான பிரபாஸ் சின்ன வயதிலேயே பெற்றோரை இழந்து விசாகப்பட்டினத்தின் துறைமுகப்பகுதியோரம் வளர்கிறார். அங்கே தஞ்சம் புகுந்துள்ள அகதிகளுக்கு சில சமூகவிரோதிகளால் தொல்லை ஏற்பட, அவர்களை துவைத்து துறைமுகத்தில் தொங்கப்போடுகிறார் பிரபாஸ்.
இதுதான் அக்டோபர் முதல் வாரத்தில் தமிழ் பேச வரும் மிஸ்டர் ‘சந்திரமவுலி’யின் கதை.
சந்திரமவுலியின் கதை இப்படி இருக்க, கடந்த ஒரு சில தினங்களாக இயக்குனர் ராஜமவுலியின் கதை வெளிநாட்டுத்தமிழர்கள் மத்தியில் கந்தலாகிக்கொண்டு வருகிறது.
‘நான் ஈ’ க்கு கிடைத்த ஓவர் வரவேற்பில், திருட்டு டிவிடி, தயாரிப்பவர்கள், இண்டர்நெட்டில் படங்களை சட்டவிரோதமாக டவுன்லோடு செய்பவர்கள் அனைவருமே வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள்தான் அவர்கள் இந்த திருட்டு தொழிலை விட்டொழிக்கவேண்டும் என்கிற ரீதியில் ராஜமவுலி தனது இணையதளத்தில் கருத்து சொல்லவே, அவர் மீது பெரும்கடுப்பான வெளிநாட்டு இந்தியர்கள், ‘நீ மட்டும் யோக்கியமா ? உன் படத்தின் காட்சிகளை எந்தெந்த ஹாலிவுட் படத்திலிருந்து சுட்டாய் என்று பட்டியல் போடவா என்று கொந்தளிக்கவே, ‘காப்பி அடிப்பது என்பது வேறு. ஒன்றினால் பாதிக்கப்பட்டு அதைத் தழுவி எடுப்பது என்பது வேறு. திருட்டு விசிடி பற்றி நான் கடுமையாகப் பேசியதால், யார் மனதாவது புண்பட்டிருந்தால் என்னை மன்னியுங்கள்’ என்று நைசாக நழுவி விட்டார்.
வெளிநாட்டு இந்தியர்களுக்கும், ராஜமவுலிக்கும் இடையில் நடக்கும் மோதல்தான் இப்போது ஆந்திரா இண்டஸ்ட்ரியின் ஹாட்டஸ்ட் டாபிக்.