இன்று காலை சத்யம் தியேட்டரில் நடந்த ‘கும்கி’ படவிழாவில் ரஜினியும் கமலும் ஒருசேர கலந்துகொண்டதே ஒரு பெரும் பரபரப்பான செய்தியாக இருக்க, ரஜினியின் உருக்கமான பேச்சு ரசிகர்களை அப்படியே கட்டிப்போட்டது என்று சொன்னால் மிகையில்லை.
‘’நான் சிங்கப்பூரில் உடல் நலமின்றி மருத்துவமனையில் இருந்தபோது, கமல் என்னை சந்திக்க விரும்பி நேராய் அங்கு வந்துவிட்டார். ஆனால் நான், காரணம் ஏதும் சொல்லாமல்
அவரை சந்திக்க விரும்பாமல் திருப்பி அனுப்பி விட்டேன். பின்னர் அவரை தொடர்பு கொண்டு, நான் டிஸ்சார்ஜ் ஆகி சென்னை வந்ததும் நாம் கண்டிப்பாக சந்திக்கலாம் என்று சொன்னவுடன் என்னை புரிந்துகொண்டு நீங்கள் பூரண குணமடைந்தாலே போதும். நாம் எப்போது வேண்டுமானாலும் மெதுவாக சந்தித்துக்கொள்ளலாம் என்று கூறினார்.
என் உடல் நலம் குணமடைந்ததைப் பொறுத்தவரை, நான் தமிழக மக்கள் அனைவருக்குமே ஒரு கடன்காரனே. கடன் வாங்கியவன் எப்படி கடன் கொடுத்தவனைப் பார்த்து பயபக்தியுடன் ஒதுங்கிச் செல்கிறானோ அப்படித்தான் உங்களிடம் நான் நடந்துகொள்கிறேன். கமலை சந்திக்காமல் ஒதுங்கியிருந்ததும் அப்படித்தான். ஏனென்றால் நான் மறுபிறவி எடுத்து வந்ததென்பது நீங்கள், உங்கள் வலிமையான பிரார்த்தனையினால் எனக்குக் கொடுத்திருக்கும் கடன்.
இந்தப்படத்தின் நாயகன் விக்ரம் பிரபு நன்றாக வருவார். அவரது வெற்றி குறித்து அவர் கவலைப்படத்தேவையில்லை. ஆனால் நெஞ்சில் எப்போதும் ஒரு பயம் இருக்க வேண்டும். ‘படையப்பா’வில் நான் சிவாஜியுடன் நடித்தபோது, ‘ நீ நல்ல திறமைசாலி. ஆனா ரொம்ப விவரமா எப்பவுமே காலரை தூக்கிவிட்டுக்காம இருக்க. ஏன்னா காலரைத் தூக்கிவிட ஆரம்பிச்சோம்னா என்னைக்காவது ஒரு நாள் சட்டை பட்டன் பிஞ்சி போகும்னு உனக்கு தெரிஞ்சிருக்கு’ என்று சொன்னார்’’.
இந்தப்பரபரப்பான பேச்சுக்கு நடுவே, வளர்ந்து வரும் இளம் நடிகர்களுக்கு ஒரு அருமையான டிப்ஸும் கொடுத்தார் ரஜினி,’’ புதுமுகங்கள் கூடுமானவரை ஒரே நேரத்தில் இரண்டு அல்லது மூன்று படங்களில் நடிக்க முயலுங்கள். அப்படி நடிக்கும்போது, ஒரே படத்தில் நடித்து அது ஓடாவிட்டால் என்ன செய்வது என்ற பதட்டம் குறையும். டென்சன் இல்லாமலும் நடிக்கலாம் என்றார் ரஜினி.