மற்ற அனைவரோடு சேர்ந்து, பவர்ஸ்டாரை சந்தானமும் கலாய்க்கிறார் என்று கருதப்பட்ட ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா?’ படப்பிடிப்பு தொடங்கியதும் அதிர்ந்த பலர், அதன் தயாரிப்பில் ராமநாராயணன் பங்கெடுத்தவுடன் அப்படியே கப்சிப்.
ஆனால் அதற்காக, பவர் ஸ்டார் நடித்துக்கொண்டிருக்கும் ஒரு பவர்ஃபுல்லான படத்தைப் பற்றி வேறு செய்திகள் எழுதாமல் விட்டுவிட முடியுமா என்று நினைத்தோ என்னவோ, ‘க.ல.தி. ஆசையா’ படத்தைப் பற்றி புதிய யூகங்கள் கிளம்ப ஆரம்பித்திருக்கின்றன.
விசாகப்பட்டினத்திலிருந்து லவட்டிக்கொண்டு வரப்பட்ட [?] விசாகா என்ற ஒரே ஹீரோயின் நடிக்க அவருக்கு ஜோடியாக சந்தானம், பவர்ஸ்டார் மற்றும் ‘விண்ணைத்தாண்டி வருவாயா கணேஷ் ஆகிய மூன்று ஹீரொக்கள் நடிப்பதால், இது அப்படியே பாக்யராஜின் சில்வர் ஜூப்ளி படமான ‘இன்று போய் நாளை வா’ வின் அப்பட்டமான காப்பி என்பதுதான் விஷமிகளின் வதந்தி.
மேற்படி ‘விஷ’யத்தை முற்றிலும் மறுக்கும் ராமநாராயணன்,’’ மூன்று ஹீரோக்கள் இருந்தாலே அது இன்று போய் நாளை வா’ வின் காப்பி என்பது வடிகட்டிய முட்டாள்தனம். பவர்ஸ்டார் எவ்வளவு சின்ன வயசுப்பொண்ணையும் லவ் பண்ணினாலும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் கொண்ட தமிழர்கள், வி.டி.வி. கணேஷ் போன்ற சித்தப்பாக்களும் கதாநாயகியை லவ் பண்ணுவதை எப்படி ஏற்றுக்கொள்வார்கள். உண்மையில் அவர் அந்தப்படத்தில் இந்தி டியூஷன் எடுத்த ஜான் அமிர்தராஜின் ‘’ஏக் காவ் மே ஏக் கிஷான் ரகுத்தாத்தா’ போன்ற கேரக்டர்களில் நடிக்கவே பொருத்தமாக இருப்பார். சரி வெட்டிப்பேச்சு எதற்கு?’ இது சந்தானம் மற்றும் பவர்ஸ்டாரை மனதில் இறுத்தி, தன்னை வருத்தி, இயக்குனர் மணிகண்டன் பண்ணிய சொந்த ஸ்கிரிப்ட். நேற்று ,இன்று என்றும் வராத புதுக்கதை இது’’ இப்போதைக்கு அவ்வளவுதான் சொல்லமுடியும்’’ என்று முடித்துக்கொண்ட ராமநாராயணன், வதந்திகள் நடமாட ஆரம்பித்தபிறகு ஏதொண்ணுக்கும் இருக்கட்டுமே என்று ‘இன்று போய் நாளை வா’ வின் ரீமேக் உரிமைகளை வாங்கிவைத்துவிட்டாராம்.
ஒரு பணிவான ஐடியா. அதுல பாக்யராஜ் கேரக்டரை பவர் ஸ்டாருக்கு குடுத்து, ராதிகா கேரக்டர்ல நயன் தாராவ இறக்கிவிட்டுப்பாருங்க சார். ‘அருந்ததி’ மாதிரி பத்து மடங்கு கலெக்ஷன் பாப்பீங்க.