’கார்ல வந்து ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பிக் அப் பண்றாங்க. நல்ல சாப்பாடு போடுறாங்க ரெண்டு அல்லது மூனு வரியிலதான் டயலாகே தர்றாங்க. எல்லாமே ரொம்ப சிம்பிளா இருக்கு. நடிக்கிறது இவ்வளவு ஈஸியான வேலைன்னு தெரிஞ்சிருந்தா முந்தியே நடிகனாயிருப்பேன்.’’ என்கிறார் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி.
சத்யம் சினிமாவில், தனது முதல் தயாரிப்பும் ஹீரோ முயற்சியுமான, ‘நான்’ பட ஆடியோ ரிலீஸை முடித்துவிட்டு, நேற்று செவ்வாயன்று மாலை பத்திரிகையாளர்களை சந்தித்த விஜய் ஆண்டனி, படத்தயாரிப்பாளராகவும் மாறியதற்கான களைப்புகள் எதுவுமின்றி சற்று உற்சாகமாகவே இருந்தார்.
‘’நான்’ என்னோட இசையமைப்புல 25 வது படம். நடிக்கிற ஆசை எனக்குள்ள ரொம்ப நாளா இருந்தாலும், எனக்கான ஒரு சரியான கதை அமையிறவரைக்கும், நடிப்புல இறங்கக்கூடாதுன்னு உறுதியா இருந்தேன். நான் மியூசிக் டைரக்டர்ங்கிறதுனாலேயே, ‘தில்லானா மோகனாம்பாள்’ டைப் கதைகள்ல ஆரம்பிச்சி நிறைய மியூசிக்கல் கதைகள் சொன்னாங்க. அதெல்லாம் எனக்கு செட்டாகாதுன்னு சைலண்டா இருந்துட்டேன். அப்பதான் என்னோட விஸ்காம் க்ளாஸ்மேட் ஜீவா சங்கரை தற்செயலா சந்திச்சி, ‘நான்’ கதையை கேட்டேன். இதுதான் எனக்கான சரியான கதைன்னு தோணிச்சி.
இப்ப படத்தை ரீ-ரெகார்டிங்கும் முடிஞ்சி பாக்குறப்பதான் ‘நான்’ எடுத்த முடிவு எவ்வளவு சரின்னு தெரிஞ்சிச்சி. என் நண்பன்ங்கிறதுனால சொல்லல. ‘நான்’ ரிலீஸுக்கு அப்புறம் ஜீவா சங்கர் தமிழ்சினிமாவுல முக்கியமான டைரக்டரா பேசப்படுவார்’’ என்ற விஜய் ஆண்டனிக்கு படத்தில் மூன்று ஹீரோயின்கள் இருந்தும் யாருடனும் டூயட் பாடமுடியவில்லை என்பதில் பெரும் வருத்தமாம்.
’அதிலயும் அந்த ரூபாவுக்கு என் மேல என்ன கோபமோ தெரியலை. ஷூட்டிங்ல சந்திச்ச முதல் நாள்லருந்து இன்னைக்கி வரைக்கும் என்னை அண்ணான்னே கூப்பிடுது’ என்று மைக்கிலேயே ஒரு அழைப்பு கொடுத்தார்.
அடுத்து பேசிய இயக்குனர் ஜீவா சங்கர், விஜய் ஆண்டனியை ஹீரோவாக வைத்து, அவரது இசையில் படம் இயக்கியிருந்தாலும் அவர் ஒரு தீவிர இளையராஜா ரசிகர் என்பது அவரது வெளிப்படையான பேச்சில் தெரிந்தது.
‘’ நான் விஜய் ஆண்டனிக்கு கதை சொல்லி படத்தை துவக்கிய சமயத்திலிருந்தே, வசனங்கள் குறைவான, வலுவான விஷுவல்கள் கொண்ட, இந்தப்படத்தின் பின்னணி இசைக்கு என்ன செய்வது என்பது குறித்து பெரிய கவலை ஒன்று இருந்துகொண்டே இருந்தது. ஏனென்றால் விஜய் ஆண்டனியைப் பொறுத்தவரை பாடல்கள் சிறப்பாக தந்துவிடுவார்.ஆனால் அவரது பின்னணி இசையைப்பற்றி எனக்கு எப்போதும் நல்ல அபிப்ராயம் இருந்தில்லை. எனவே அதை அவரிடம் ஓப்பனாக சொல்லிவிட்டு, எனக்கு இளையராஜா இசையமைத்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு பின்னணி இசைவேண்டும் என்று கூறிவிட்டு, மேற்படி நம்பிக்கை இல்லாமல் விட்டுவிட்டேன்.
ஆனால் பின்னணி இசையமைப்பு வேலை முடிந்து அவர் எனக்கு படத்தை போட்டு காட்டியவுடன் , வருத்தப்பட்டாலும் பரவாயில்லை என்று நினைத்துக்கொண்டு விஜய் ஆண்டனியிடம் நான் சொன்னது ‘ஏற்கனவே இசையமைத்த 24 பட இயக்குனர்களை பின்னணி இசை என்ற பெயரில் ஏமாற்றிவிட்டு, இப்போதுதான் முதல்முறையாக பின்னணி இசையமைத்திருக்கிறாய்’’
அப்ப அந்த 24 பட டைரக்டர்களும் இவர்கிட்ட ரீ-ரெகார்டிங்குக்கு ஆன செலவை ரீ ஃபண்ட் கேட்டு வரச்சொல்லலாமா?