1960களில் வந்த மார்வல் காமிக்ஸ் கதைப் புத்தகத்தில் ஒரு ஹீரோ தான் ஸ்பைடர் மேன்.
சிறுவயதிலேயே தந்தையும், தாயும் இறந்துவிட அத்தை, மாமாவின் அரவணைப்பில் வளரும் பீட்டர் பார்க்கரை ஒரு முறை ஒரு வினோதமான சிலந்தி கடித்துவிட அவன் அபூர்வ சக்திகளைப் பெற்று ஸ்பைடர்
மேனாக உருமாறுகிறான். கைகளை நீட்டினால் உறுதியான சிலந்தி வலைகள் வரும் சக்தி பெறுகிறான்.
மார்வல் காமிக்ஸில் மிகப் புகழ் பெற்றது ஸ்பைடர் மேன் கதை. நிறைய ஸ்பைடர் மேன் படங்களும், டி.வி. சீரியல்களும் அவ்வப்போது அந்தந்த காலத்திய சினிமா தொழில்நுட்பத்துடன் வெளிவந்துள்ளன.
2002ல் வெளிவந்த ஸ்பைடர் மேன் நவீன தொழில்நுட்ப படப்பிடிப்பால் ஸ்பைடர் மேன் சாகசங்களை அப்படியே கொண்டு வந்து நிறுத்தியது. உலகெங்கும் பெரும் வரவேற்பைப் பெற்றது. உலகமயமாக்கலின் விளைவாக தமிழிலும் பேசினார் இந்த ஸ்பைடர் மேன்.
கூச்ச சுபாவமுள்ள, தனிமையான ஸ்பைடர் மேனாக டோபி மேக்யர்(Toby Maguire)ம், கிர்ஸ்டன் டன்ஸ்(Kirsten Dunst) அவரது காதலி எம்மா வாட்சனாகவும் நடித்த இந்தப் படம் மூன்று பாகங்கள் வந்து பெரும் வரவேற்பையும், வசூலையும் குவித்தது.
கடைசி பாகமான ஸ்பைடர் மேன் வந்து 5 வருடங்களே ஆன நிலையில் தற்போது வந்திருக்கும் அமேசிங் ஸ்பைடர் மேன் 2012ன் 3D தொழில் நுட்பத்துடன் அதே ஸ்பைடர் மேன் கதையை மீண்டும் வேறு திரைக்கதை மற்றும் நடிகர் நடிகர்களோடு சொல்கிறது.
இப்படத்தில் ஆண்ட்ரூ கார்பீல்டு(Andrew Garfield) ஸ்பைடர் மேனாகவும், எம்மா ஸ்டோன்(Emma Stone) அவரது பள்ளிக் காதலியாகவும் நடித்துள்ளனர்.
கடந்த ஜீன் 29ஆம் தேதி வெளியான இப்படத்திற்கு வரவேற்பும் சலிப்புமாக கலந்த கலவையான ரசிகர்களின் வரவேற்பு தெரிகிறது. காரணம் முந்தைய ஸ்பைடர் மேனைப் போல நிறைய உணர்வுபூர்வமான காட்சிகளும், கதாநாயகனின் உளப் போராட்டங்களும் காட்டப்படவில்லை என்பது. மறுபுறத்தில் இந்த ஸ்பைடர் மேன் யதார்த்தமாக இருப்பதாகவும் ஒரு பேச்சு. புதிய ஸ்பைடர் மேனின் கல்லூரிக் காதல் காட்சிகள் நன்றாக இருப்பதால் படம் நன்றாகப் போகலாம் என்று ஒரு கணிப்பு.
ஸ்பைடர் மேன் போன்ற சூப்பர் ஹீரோக்கள் சராசரி மனிதனின் கனவுலக பிம்பங்களே. நம் போன்ற சராசரி மனிதனின் போராட்டங்களும் அதை எதிர்கொள்ள முடியாமல் போகும் போது ஏற்படும் கையாலாகாத தனமும், ஸ்பைடர் மேனையும் சமூகத்தை ஏதாவது செய்து மாற்றிவிட முயலும் அவனது சக்தியையும் உருவாக்குகின்றன. கற்பனையிலாவது ஸ்பைடர் மேனாக நாம் வெற்றி பெறுகிறோம்.
இப்போது வந்திருக்கும் இந்த 3-D மேன் ஸ்பைடர் மேன் கதாபாத்திரத்தின் பிம்பத்தை காப்பாற்றுவாரா இல்லை கலைப்பாரா ? கல்லா கட்டுவாரா இல்லை தியேட்டரை காலி செய்வாரா?
இன்னும் மூன்று நான்கு வாரங்களில் தெரிந்துவிடும்.