தி ஹெல்ப் 1

எதிர்கால சந்ததியினருக்கு வரலாற்றின் மனசாட்சியாக இருக்கப்போவது சினிமாக்களே என்று தோன்றுகிறது. மிகுந்த வணிக நிர்பந்தங்களுடன் இயங்கும் ஹாலிவுட் சினிமாவிலும் கூட இத்தகைய நேர்மையான பதிவுகள் இருந்து வருவது கவனிக்கத்தக்கது. அந்தவகையில் ‘தி ஹெல்ப்’ (THE HELP) ஒரு வரலாற்று ஆவனம். அமெரிக்காவின் மிஸிசிப்பி மாகானத்தில் 1960களில் நடைபெறுவதான கதை.

கதை என்று சொல்வதைவிட அமெரிக்க வெள்ளையின குடும்பங்களில் ஓர் அங்கமாகத் திகழ்ந்த ஆப்பிரிக்க அமெரிக்க பணிப்பெண்களின் வலிமிகுந்த பதிவுகள் எனலாம்.

நடுத்தர வயதைக்கடந்த ஏபிலீன (Aibileen) ஒரு கறுப்பின பணிப்பெண். வெள்ளையின வீடுகளில் பணிப்பெண்ணாகப் பணியாற்றுவதைத் தவிர பிழைப்பதற்கு வேறு போக்கிடமில்லாத கறுப்பினப் பெண்களில் ஒருத்தி. தற்போது ஒரு வீட்டில் ஒரு பெண்குழந்தையைப் பராமரித்துப் பேணி வருகிறாள். அது அவள் வளர்க்கும் பதினேழாவது வெள்ளைக் குழந்தை. உரிய நேரத்தில் மருத்துவ வசதி கிடைக்காமல் பதின் வயதில் செத்துப்போய் புகைப்படமாய் தொங்கும் தன் மகனை மனதில் நினைத்தபடி அடிமனதின் ஆழமான நினைவுகளோடு வாழ்பவள்.

மின்னி (Minny). இன்னொரு கறுப்பின பணிப்பெண். ஏபிலீனின் தோழி. தன் வாய்த்துடுக்கினால் வேலை இழந்து நகருக்கு புதிதாய் குடியேறிய வெள்ளைத் தம்பதியின் வீட்டில் வேலையிலிருப்பவள்.

22 வயதான ஸ்கீட்டர் (Skeeter) அப்போதுதான் பட்டப்படிப்பை முடித்து நகருக்கு வந்து சேர்கிறாள். எழுத்தாளராகவேண்டுமென்ற கனவோடு வரும் ஸ்கீட்டர் ஒரு வெள்ளையின இளம் யுவதி. ஒரு பத்திரிக்கைக்காக கட்டுரையொன்று எழுத திட்டமிடுகிறாள். தெற்கு மிஸிசிப்பி பகுதியில் எல்லா வெள்ளையர் வீடுகளிலும் குழந்தைப் பராமரிப்பிலும் இன்னபிற பணிகளிலும் நீக்கமற நிறைந்திருக்கும் கறுப்பின பணிப்பெண்களின் கதைகளை, கருத்துக்களைப் பதிவுசெய்வதே அவள் கட்டுரைத்திட்டம். தன் தோழியின் வீட்டுப்பணிப் பெண்ணான ஏபிலீனிடம் உரையாடத் தொடங்குகிறாள். தயக்கத்தோடு தொடங்கும் உரையாடல் முயற்சிகளில் படிப்படியாக ஏபிலீனின் நம்பிக்கையைப் பெறுகிறாள் ஸ்கீட்டர். பின் ஏபிலீனின் தோழியான மின்னியிடம் பேசத்தொடங்குகிறாள். இயல்பிலேயே நல்லியல்புகள் கொண்ட ஸ்கீட்டர், க்றுப்பினப் பெண்களின் பக்கமிருந்து விசயங்களை புரிந்துகொள்ளத் தொடங்குகிறாள்.

வெள்ளையர் வீடுகளில், அவர்களுக்கு உணவு தயாரித்து, அவர்களின் குழந்தைகளைச் சொந்தக் குழந்தைகளாய் வளர்க்கும் அப்பணிப்பெண்கள் அவர்களின் கழிப்பறைகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவதில்லை. மழைபொழியும் ஒரு நாளில்தி ஹெல்ப் 2 தன்சிறுநீரை அடக்கமுடியாமல் தவிக்கும் மின்னி எஜமானியின் கழிப்பறையைப் பயன்படுத்தியதால் வேலையிழக்கிறாள்.

பின் மின்னி தன் சிறப்புத்,தயாரிப்பான பதார்த்தம் ஒன்றோடு, எஜமானியிடம் மன்னிப்புக்கோரி மன்றாடியதால் மீண்டும் வேலைக்குச் சேர்த்துக்கொள்ளப்படுகிறாள். மின்னி கொண்டுவந்த ‘கேக்கை’ ஒரு கை பார்த்துக்கொண்டிருக்கிறாள் எஜமானி. இடையில் உள்ளேவரும் எஜமானியின் தாய் (மின்னியிடம் எப்போதும் அனுசரணையாக இருப்பவள்) ‘கேக்கை’ வேண்டி கை நீட்ட, மின்னி வேண்டாம் என்கிறாள். மின்னி உனக்கென்ன பைத்தியமா? அம்மாவுக்கு ஒரு துண்டு கேக் கொடு.. என்று மிரட்டும் எஜமானியிடம். அவர்களுக்குக் கொடுக்க முடியாது. ஏனென்றால் நீங்கள் தின்பது என்னுடைய மலம் என்கிறாள். மீண்டும் அவள் வேலையிழந்தாள் என்பதைச் சொல்லவேண்டியதில்லை.

இன்னொரு வீட்டின் சாப்பாட்டு மேசையில் வெள்ளையின தம்பதிகளுக்கு உணவு பறிமாறிவிட்டு தயக்கத்துடன் பேச்சைத் தொடங்குகிறாள் ஒரு பணிப்பெண். தன்னுடைய் இரண்டு பையன்களுக்கும் பள்ளிக்கட்டணம் செலுத்துவதில் இருக்கும் சிரமங்களைச் சொல்லி, நீங்கள் கடனாகக் கொடுத்தால் அதைநான் வேலை செய்து அடைத்துவிடுவேன்’ என்று சொல்லிமுடிக்கும் முன்பே ‘ஓ..எனக்கு நேரமாகிவிட்ட்து’ என்று நழுவுகிறான் கணவன். நான் உனக்கு ஒரு அறிவுரை சொல்ல விரும்புகிறேன். உனக்குத் தேவையான பணத்தை நீயேதான் சம்பாதிக்க வேண்டும்’ என்ற பொன்மொழிகளோடு தி ஹெல்ப் 3அப்பிரச்சனையை முடிக்கிறாள் எஜமானி. தொடர்ந்த ஒரு நாளில் வீட்டுக்கூடத்தைச் சுத்தம் செய்து கொண்டிருக்கையில் ஒரு தங்க மோதிரத்தை அப்பணிப்பெண் கண்டெடுக்கிறாள். தன் பணத்தேவையால் அதை அடகுகடையில் விற்று, போலீசில் மாட்டுகிறாள். வேலைமுடிந்து பணிப்பெண்கள் குழுமியிக்கும் பொழுதில், அவள் ஒரு மிகப் பெரிய கிரிமினலைப்போல போலீசாரால் இழுத்துச் செல்லப்படுகிறாள். அச்சம்பவம் பணிப்பெண்களின் மனத்தடையை உடைக்கிறது. ஸ்கீட்டரிடம் அனைவரும்பேசத் துணிகிறார்கள்.

எல்லாக்கதைகளையும் எழுதி முடித்தபின், ஸ்கீட்டர் தன்னுடைய வீட்டிலும் சொல்லப்படாத கதை ஒன்று உண்டு என்பதை உணர்கிறாள். தன்னை வளர்த்து ஆளாக்கிய, தன்னுடைய வீட்டில் 29ஆண்டுகள் பணிசெய்த தன் அன்புக்குரிய தாதி கான்ஸ்டன்டைன்(Constantine) எங்கே என்று அம்மாவைக் கேட்கிறாள். அம்மாவின் தோழிகளும் ஊரின் முக்கியப் பெண்மணிகளும், அவள் வீட்டில் விருந்தில் கூடியிருக்கும் போது, கான்ஸ்டன்டைனின் மகள் ஊரிலிருந்து தாயைப்பார்க்க வருகிறாள். கதவைத்திறக்க மறுக்கும் ஸ்கீட்டரின் தாய், அவளை சமயலறையில் காத்திருக்கச் சொல்கிறாள். என் அம்மாவைப் பார்த்துவிட்டுத்தான் போவேனென்று வலுக்கட்டாயமாக உள்ளே நுழைந்துவிடுகிறாள் காண்ஸ்டன்டைனின் மகள். விருந்தினர்களின் முன் அவமானமுற்றதாகக் கருதும் ஸ்கீட்டரின் தாய், இருவரையும் அப்போதே வீட்டைவிட்டு வெளியேறுமாறு உத்தரவிடுகிறாள். ஊரைவிட்டுப்போன காண்ஸ்டன்டைன் விரைவிலேயே இறந்தும் போகிறாள்.

இப்படி எல்லாக் கதைகளையும் தொகுத்து ‘த ஹெல்ப்’ என்ற பெயரில் புத்தகமாக பதிப்பிக்கிறாள் ஸ்கீட்டர். அதிர்ச்சியோடு அந்தக்கதைகளை, தாங்களும் பாத்திரங்களாகி உலாவும் வரலாற்று ஆவனத்தை தனியாகவும் குழுவாகவும் படிக்கிறார்கள்.

நீண்டநாட்களுக்குப் பின் ஒரு உணர்ச்சிகரமான காவியத் தன்மையுடைய கதையுலகிற்குள் பயணித்த அற்புதமான உணர்வைக் கொடுத்த ஒரு திரைப்படம். கேத்ரைன் ஸ்டாகெட்(Kathryn Stockett) எனும் அமெரிக்க நாவலாசிரியை 2009ல் எழுதிய நாவலான ‘தி ஹெல்ப்’பின் திரைவடிவமே இப்படம். 33நாடுகளில் மூன்று மொழிகளில் பிரசுரிக்கப்பட்ட இந்நாவல், கறுப்பினப் பெண்களின் நோக்குநிலையில் வெள்ளையினப் பெண்களைப் பற்றியதாக இருந்ததால் சர்ச்சைக்குரியதாக பிரபலமானதாகத் தெரிகிறது.

பாத்திரங்களின் குணாதிசயங்களும், அதற்கான நடிகர்களும் மிக அற்புதமாகப் இப்படத்தில் பொருந்தியிருந்தார்கள். சின்னச்சின்னச் சம்பவங்களின் மூலமே துலக்கமான வேறுபாடுகளுடன், தனித்தன்மைகளுடன் பாத்திரங்கள் மிளிர்வதை கவனிக்காமல்லிருக்க முடியாது. குறிப்பாக ஏபிலீனாக நடித்த வயோலா டேவிஸ் (Viola Davis) வும், மின்னியாக நடித்த ஆக்டாவியா ஸ்பென்சர் (Octavia Spencer) ம் பண்பட்ட நடிப்பால் நம்மை கட்டிப்போட்டு விடுகிறார்கள். ஏபிலீன் அந்த வெள்ளைக் குழந்தையை பேணுகிற அழகும்,

‘You is kind, you is smart, you is important’

என்று சொல்லிகொடுக்கும் பாங்கும் அதை அக்குழந்தை திரும்பச் சொல்லும் அழகும் ‘ஏபிலீன் யு ஆர் மை ரியல் மதர்’ என்று மழலையில் சொல்வதும் கவித்துவமான தருணங்கள்.

மிஸிசிப்பியின் நிலக்காட்சிகளும், பரந்த பண்ணை வெளிகளும், அறுபதுகளின் தெருக்களும் வீடுகளுமாய் விரியும் பிம்பங்கள் உன்னதமான காட்சி அனுபவத்தைத்தருவன.
ஸ்கீட்டராக வலம்வந்த எம்மா ஸ்டோனும் (Emma Stone) சீலியாவாக வந்த ஜெஸிக்கா செஸ்டைனும்(Jessica Chastain) ஏன் ஒவ்வொருவரின் நடிப்பும் கச்சிதம். பாத்திரவார்ப்புக்காகவும், மிகச்சிறந்த நடிப்பிற்காகவுமே பார்க்கவேண்டிய படமென்பேன்.

நடிப்பிற்காக சர்வதேசவிருதுகளை ஜெஸிக்காசெஸ்டைனும், வயோலா டேவிஸும், ஆக்டோவியா ஸ்பென்சரும் அள்ளிக்குவித்திருக்கிறார்கள். சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதை ஆக்டோவியா ஸ்பென்சர் பெற்றார். சிறந்த நடிகைக்காக வயோலா டேவிஸ் பரிந்துரைக்கப்பட்டார்.

இப்படத்தின் இயக்குநர் டேட் டைலர் (Tate Taylor)ஒரு இயக்குநர் மட்டுமல்லாமல் நடிகரும் திரைக்கதையாசிரியருமாவார். நாவலாசிரியையின் இளம் பருவத்தோழராதலால், நாவல் வெளிவருவதற்கு முன்பே 2008லேயே இதைப்படமாக்குவதற்கான உரிமையைப் பெற்றிருந்தாராம். தொழில்நுட்ப மிரட்டல்கள் எதுவுமின்றி முழு நிறைவைத்தந்த திரைப்படம் ‘தி ஹெல்ப்’

(தேவையற்ற ஒரு பின் குறிப்பு: கறுப்பினத்தவரை மனச்சாய்வுடன் சித்தரிக்கும் ஹாலிவுட் திரைப்படங்கள் இருக்கவே செய்கின்றன என்றாலும், கறுப்பின மக்களின் வலிகளை, விழுங்க இயலாத கசப்புகளை தொடர்ந்து நேர்மையாகச் சித்தரிக்க முயலும் வெள்ளையின இயக்குநர்கள் இருந்துவருவது ஆச்சரியமளிக்கும் உண்மை. சொந்தசாதிப் பெருமைகளையே இன்னும் பேசித்தீர்க்காத நம் இயக்குநர்கள் தங்கள் மூதாதைகளால் புறம்தள்ளப்பட்ட மக்களை, தங்களுக்குச் சேவை சாதிகளாய் காலகாலமாய் சுரண்டப்பட்ட சலவைத்தொழிலாளர்களின் , நாவிதர்களின், தலித்துக்களின் சொல்லப்படாத கதைகளை என்றைக்குப்படம் எடுக்கப்போகிறார்கள்?)

இரா.பிரபாகர்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.