ஹியூகோ போஸ்டர்

2011ஆம் ஆண்டு சினிமா ரசிகர்களுக்கு உண்மையிலேயே சிறப்பான ஆண்டு என்றுதான் கூறவேண்டும். ‘The Help, Tree of Life, Incendies, The Artist ‘என்று திருப்தியான படங்கள் நிறைய. அந்த வரிசையில் ‘ஹீகோ’வும் ஒன்று என்பேன்.

Taxi Driver, Raging Bull, The Last Temptation of Jesus Christ, The Aviator உட்பட்ட சினிமாக்களை எடுத்த மார்டின் ஸ்கார்சிஸ்சின் (Martin Scorsese)

முதல் 3டி படம் ஹீகோ என்கிறார்கள்.

ஹீகோ எனும் சிறுவன் பாரீஸ் நகர ரயில்நிலையத்தின் பிரம்மாண்ட மணிக்கூண்டில் வசிப்பவன். ரயில்நிலைய காவலரின் கண்களில் படாமல் நடமாடி, திருடிச்சாப்பிட்டு தன் நாட்களைக் கழித்து வருபவன். கடிகாரங்கள் செய்பவரான அவனின் தந்தையார் எங்கோ ஓரு அருங்காட்சியகத்தில் கிடைத்த உலோக மனிதனை வைத்துக்கொண்டு, அவனை இயங்கச் செய்வதற்கு பல்வேறு பிரயத்தனங்கள் செய்துவருபவர். அவருக்கு ஜார்ஜியஸ் மிலியஸின் படங்கள் பிடித்தமானவை. மிலியஸின் படங்களுக்குத் தன்னுடன் அவனையும் அழைத்துச்செல்வது வழக்கம். அருங்காட்சியகத் தீ விபத்தில் தந்தை இறந்துவிட நிர்க்கதியான ஹீகோவை அவனுடைய மாமா அழைத்துச்செல்கிறார். மாமாவிற்கு பாரீஸ் நகர ரயில்நிலைய கடிகாரத்தைப் பராமரிக்கும் வேலை. அவருக்கு வீடென்றோ குடும்பமென்றோ எதுவுமில்லை. மணிக்கூண்டிலேயே வாசம்செய்யும் அவருடன் அங்கேயே தங்கவேண்டியதாகிவிடுகிறது ஹியூகோ - 2ஹீகோவுக்கு. இந்தப்பின்புலத்தில்தான் ஹீகோ மணிக்கூண்டில் வசிக்கவேண்டியவனாகிறான்.

மாமாவும் எதிர்பாராமல் ஒருநாள் இறந்துபோகிறார். இப்போது சட்டவிரோதமாக ரயில் நிலையத்தில் தங்கியிருக்கும் ஹீகோ அங்கிருக்கும் காவலருக்குத் தெரியாமல் நடமாடவேண்டியிருக்கிறது. அவனுடைய அப்பாவின் உலோகமனிதனை இயங்க வைக்கத்தேவைப்படும் உதிரி பாகங்களையும் அவனுக்குத்தேவையான் உணவையும் சாமர்த்தியமாகத் திருடிச் சமாளிக்க வேண்டியிருக்கிறது.

அப்படி ரயில்நிலைய கடை ஒன்றில் திருடும் போது கடைக்கார முதியவரிடம் பிடிபட்டு விடுகிறான் ஹீகோ. இயந்திர ஓவியங்களடங்கிய அவனுடைய சிறிய குறிப்பேட்டை பிடுங்கி வைத்துவிட்டு அவனைவிரட்டிவிடுகிறார் பெரியவர். நோட்டுக்காக அவரைப் பின்தொடரும் ஹீகோ அவரின் வளர்ப்பு மகளான இசபெல்லுக்கு நண்பனாகிறான். இசபெல்லின் கழுத்தில் தொங்கும் இதயவடிவிலான சாவிதான் தன் தந்தையின் உலோகமனிதனை இயங்கவைக்கத் தான் தேடிக்கொண்டிருக்கும் கடைசி பாகம் என்பதை உணர்ந்து மகிழ்கிறான். இருவரும் உலோகமனிதனிடம் சாவியைப்பொருத்த அவன் இயங்குகிறான். உலோகமனிதன் வரையும் ஓவியம், தான் தந்தையுடன் பார்த்த Voyage to the Moon என்ற சினிமாவில் வரும் காட்சி என்பதைக் கூறுகிறான். ஓவியத்தின் கீழிருக்கும் கையெழுத்து தன் வளர்ப்புத் தந்தையினுடையது என்கிறாள் இசபெல்.

இசபெல் எனும் அப்புதிய சிநேகிதி அவனை ஒரு புத்தகக் கடைக்கு அழைத்துச்செல்கிறாள். அங்கு இருவரும் சினிமாவின் வரலாறு எனும் புத்தகத்தைப் படித்துப் பார்க்கையில் சினிமா முன்னோடிகளில் ஒருவரான மிலியஸ், முதல் உலகப்போரில் இறந்துவிட்டதாக எழுதப்பட்டுள்ளமையைக் கண்டு வருத்தமடைகிறார்கள். அந்நூலாசிரியரும் பேராசிரியருமான டபார்டிடம் (Tabard) விசயத்தைச் சொல்கிறார்கள். மிலியஸின் ரசிகரான டபார்டு இருவருடனும் மிலியஸைச் சந்திக்க வருகிறார். மிலியஸின் மனைவி அவர் சினிமா நினைவுகளிலிருந்து ஒதுங்கி இருப்பதைக்கூறுகிறாள். மிலியஸின் மனைவி, அவரின் படங்களில் நடித்திருப்பதை பேராசிரியர் நினைவுகூற, அவள் கடந்தகால நினைவுகளில் நனைகிறாள். கையோடு கொண்டுவந்திருக்கும் Voyage to the Moon படத்தை திரையிடலாமா? எனக்கேட்கும்போது அவளால் மறுக்கமுடியவில்லை.ஹியூகோ 3 படத்தை நால்வரும் பார்த்து முடிக்கும்போது, பின்னால் மிலியஸ் நின்றுகொண்டிருக்கிறார்.

முதலுலகப்போர் தொடங்கியபோது அன்றாட ஜீவனத்திற்காக தன் படங்களை வந்த விலைக்கு விற்க நேர்ந்ததையும், தான் உருவாக்கிய உலோகமனிதன் காணாமல் போனதையும் தன் திரைப்பட நினைவுகளோடு பகிர்ந்துகொள்கிறார்.

பேராசிரியர் மிலியஸுக்கு ஒரு பாராட்டுவிழாவை ஏற்பாடுசெய்கிறார் பேராசிரியர். திரைக்கலையின் முன்னோடியான ஜார்ஜியஸின் 80க்கும் மேற்பட்ட படங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டுள்ளன என்ற செய்தியை அறிவித்து அப் படங்களைத் திரையிட்டு மிலியஸை மேடைக்கு அழைக்கிறார். மிலியஸ் மேடையில் “My friends, I address you all tonight as you truly are: wizards, mermaids, travelers, adventurers… magicians. Come and dream with me.” என்று கனவு காண அழைத்துவிட்டு மேடையின் திரைச்சீலைக்குள் மறைந்துவிடுகிறார்.

ஜார்ஜியஸ் ழீன் மிலியஸ்(Georges Jean Méliès) 1861ல் பாரீஸில் பிறந்து கலை ஆர்வத்தில் திரிந்து மேடை வடிவமைப்பு மற்றும் பொம்மலாட்டத்தில் சிறப்புத்தேர்ச்சி பெற்றிருந்தார். லண்டனில் படித்துவிட்டுத் திரும்பி, தந்தையின் காலனித் தொழிற்சாலையை நிர்வகிக்கத் தொடங்கினார். ஆனால் அவருக்குள் ஒளிந்திருந்த கூத்தாடி சும்மா இருப்பானா என்ன? நாடகங்களில் மந்திரக் காட்சிகளை ஒத்த ஜாலக் காட்சிகளை உருவாக்கிப் புகழ்பெற்றார்.

1895ல் லூமியர் சகோதரர்கள் உலகின் முதல் சலனப் படக்காட்சியைத் திரையிட்டபோது குழுமியிருந்த பார்வையாளர்களில் ஒருவராக அமர்ந்திருந்த மிலியஸ் காட்சி முடிந்தவுடன் அவர்களை அணுகி அவர்களின் சாதனங்களை வாங்க ஆவலாயிருப்பதைத் தெரிவித்தார். அடுத்த ஆண்டே 1896ல் அவர் தன்னுடைய சொந்தப் படத்தைத் திரையிட்டுக் காட்டினார்.

சினிமா வரலாற்றில் ஜார்ஜியஸ் மிலியஸ் எனும் பெயர் மிகமுக்கியமானது. நாடகக் கலையின் அரங்க நுணுக்கங்களை சினிமாவிற்குள் இணைத்துப்பார்த்தார். சினிமாவில் முதன்முதலாக double exposure, split screen, dissolve ஆகிய உத்திகளை பரிசோதித்து வெற்றிகண்டார்.

தொடக்ககால சினிமாவை ஒரு கலையாக மட்டுமல்லாமல் தொழிலாகவும் பாவித்து அதை இயக்குநர் என்ற ஒரு நபரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தவர் மிலியஸ். இன்றளவும் பல்துறை ஆளுமை உடையவர்களே சினிமாவைக் கையாள்வதில் முதன்மையானவர்களாய் இருக்கிறார்கள். மிலியஸ் ஒரு பல்துறை வல்லுநர். செவ்வகப்படச் சட்டகத்திற்குள் பல்வேறு சாத்தியங்களைப் பரிசோதித்தவர், ஒவ்வொரு ப்ரேமாக வண்ணம் தீட்டியது உட்பட. ஆனால் காலம் யாரை விட்டுவைத்தது?

1923ல் அவர் ஆசையாய் வாங்கிப் பராமரித்துவந்த நாடக் அரங்கம் தரைமட்டமானது. அவர் திவாலானவராக 1920களின் இறுதிவரை முகவரியற்றுப் போகிறார். முதல் உலகப்போரைத் தொடர்ந்து ஏற்பட்ட பல்வேறு சூழல்கள் காரணமாக சினிமாவிலிருந்து விலகி பிழைப்பிற்காக ஒருபுத்தகக் கடை வைத்து 1938ல் மறைந்தார் என்பார்கள். ஆனால் அவர் முதலீடு செய்த, தயாரித்த, நடித்த, ஒளிப்பதிவு செய்த, இயக்கிய படங்களாக 500க்கும் மேற்பட்ட படங்களை சினிமா வரலாறு அவர் கணக்கில் பதிவுசெய்துள்ளது.

2007ல் பிரைன் செல்ஸ்நிக் (Brian Selznick) எனும் அமெரிக்க எழுத்தாளரால் அவர் வரைந்த சித்திரங்களுடன் வெளியிடப்பட்ட The Invention of Hugo Cabret எனும் நாவல்தான் ஹீகோவாக உருமாறியிருக்கிறது. ஜார்ஜியஸ் மிலியஸின் வாழ்க்கைச் சம்பங்களை ஹீகோ என்ற சிறுவனின் கதையான ஒரு புனைவுக்குள் பிணைப்பதன் மூலம் ஒரு சுவாரஸ்யமான சினிமாவை கற்பனை செய்திருக்கிறார் ஸ்கார்சிஸ்.

கதையைப் பொறுத்தளவில் சிலாகித்துச் சொல்வதற்கான அம்சங்கள் குறைவுதான் என்றாலும் இந்தக்கதை நிகழும் இடம் இப்படத்தை மிகுந்த சவாலானதாக மாற்றியிருக்கிறது. கதையின் பெரும்பகுதி பாரிஸ் நகரின் 1930களின் ஹியூகோ 4ரயில்நிலையம். அங்கே நடமாடும் நூற்றுக்கணக்கான பயணிகள். கடைக்காரர்கள். நீராவிப் புகை உமிழும் அந்தக்கால ரயில்வண்டிகள். அதன் ராட்சத மணிக்கூண்டு. அதன் பிரம்மாண்டமான சக்கரங்கள்.

பனிபொழியும் பாரிஸ் நகர தூரக்காட்சியிலிருந்து ரயில் நிலையத்திற்குள் நுழைந்து புகைவிட்டுக்கொண்டிருக்கும் இரண்டு ரயில்களுக்கு ஊடாகப் பயணம்செய்து செல்லும் போதும், கடிகாரச் சக்கரங்களினூடாக ஓடித்திரியும் ஹீகோவைப் பின்தொடரும் போதும் காமராவின் அசைவுகள், அதிலும் இடைவெட்டுக்கள் எதுவுமின்றி நீளூம் காட்சிகளின் நேர்த்தி, மாயாஜாலமாத் தோன்றும்.. உங்களை வாயைப்பிளக்க வைத்துவிடும். அதேபோல் ரயில்நிலையத்தில் ஹீகோவை காவலர் துரத்தும் காட்சியும்.

மிலியஸாக நடித்திருப்பவர் பென்கிங்ஸ்லி என்பதை என்னால் உடனடியாகக் கண்டு கொள்ளமுடியவில்லை. தோற்றம் முழுமையாக மாறி புது அவதாரமாகியிந்தார். மிலியஸின் மறு உருவாக்கம் செய்யப்பட்ட தொடக்ககால சினிமா படப்பிடிப்புக் காட்சிகள் சுவாரஸ்யம்.

2011ஆம் ஆண்டில் உலக அளவில் அதிக விருதுகளைக்குவித்த படம் இதுவாகத்தான் இருக்கும். 11பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு, கலைஇயக்கம்(Art Direction), ஒளிப்பதிவு(Cinematography), ஒலித்தொகுப்பு(Sound Editing), ஒலிக்கலவை(Sound Mixing), விஷுவல் எபக்ட்ஸ்(Visual Effects) ஆகிய 5பிரிவுகளில் ஆஸ்கர் விருதைப் பெற்றிருப்பதை படத்தில் தரிசிக்க முடியும்.

ஒரு முழுமையான சினிமா அனுபவம். திரைக்கலை முன்னோடிக்கு அஞ்சலி.

இரா. பிரபாகர் (http://prabahar1964.blogspot.in/)

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.