இப்போதெல்லாம் பத்திரிகையாளர்கள் சந்திப்பு என்றாலே சில ஹீரோக்களுக்கும், இயக்குனர்களுக்கும் அலர்ஜியாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக டி.விடியில் சுட்ட படம் எடுப்பவர்களுக்கு சொல்லவேண்டியதேயில்லை.
‘தெய்வத்திருமகளை’ முந்தா நாள் ஆனந்தவிகடன் பேட்டிவரைக்கும் ’சத்தியமா என் சொந்த சரக்கு’ என்று அழுகுணி ஆட்டம் ஆடிவரும் இயக்குனர் எல். விஜயும், ‘அய்யய்யோ அய்யய்யோ கிடைக்கலையே,.. அவார்டு எனக்கு கிடைக்கலையே’ என்று அழுது வரும் நடிகர் விக்ரமும் ‘தாண்டவம்’ ட்ரெயிலர் வெளியீடு தொடர்பாக நேற்று ஐநாக்ஸ் தியேட்டரில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்கள்.
ஷங்கரின் ‘ஐ’ படத்துக்கு ஏதாவது ஒரு பில்ட்-அப் கொடுத்தாக வேண்டுமே என்ற சம்பிரதாயத்துக்காக தொப்பியால் தனது தலைஹேரை மரைத்துக்கொண்டிருந்தார் விக்ரம்.
சுமார் 3 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்புக்கு, அரைமணி நேரம் முன்னதாகவே வந்துவிட்ட விஜயும், விக்ரமும் பிரஸ்மீட்டில் ஏடாகூட கேள்வி கேட்கும் ஒவ்வொரு பத்திரிகையாளராக தனியாக சந்தித்து, ‘நாங்களே ஏற்கனவே நொந்துபோயிருக்கோம்.[ அட படத்தை பாத்துட்டீங்களா?] அதனால விவகாரமான கேள்விகளை கொஞ்சம் பெரிய மனசு வச்சி அவாய்ட் பண்ணுங்க ப்ளீஸ்’ என்று வேண்டுகோள் வைத்தனர்.
யூ.டி.வி. மோஷன் பிக்ஷர்ஸிலிருந்து, விரைவிலேயே வெளியேற்றப்படவிருக்கிறார் என்று கிசுகிசுக்கப்படுகிற தனஞ்செயன், வரவர மேடைகளில் அநியாயத்துக்கு நேரத்தை எடுத்துக்கொண்டு அறுத்துத் தள்ளுகிறார்.
நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குனர்களுக்கு இப்படி மேடையில் வாசிப்பதில் காட்டும் கவனத்தை வயலின், மிருதங்கம் போன்றவற்றில் காட்டினால் எதிர்காலத்தில் பெரிய சங்கீத மேதையாக வரக்கூடிய வாய்ப்பு இவருக்கு இருக்கிறது என்பதை அவரது மக்கள் தொடர்பாளர்களான தான்சேன் போன்றவர்கள் எடுத்துச்சொல்வது நல்லது.
பிரஸ்மீட் நடந்தவேளைகளில், என்ன காரணம் என்று தெரியாமலேயே தொடர்ந்து மூட் அவுட்டிலேயே இருந்த இயக்குனர் விஜயிடம் ஒரு நிருபர் ‘ தெய்வத்திருமகள்’ டீம் மொத்தமும் அப்பிடியே இருக்கீங்க. ஆனா அமலா பால் மட்டும் மிஸ் ஆகுதே?’ என்று கேட்டபோது, ‘என் தலையெழுத்து உங்களுக்கு நான் பதில் சொல்ற நிலைமையில இருக்குறது’ என்பதுபோலவே ஒரு பரிதாப பார்வை பார்த்தார்.
‘விக்ரம் படம் முழுக்க பார்வையற்றவராக வருகிறாரா? படத்தில் அவருக்கு டபுள் ஆக்டா?? பார்வையற்றவர் பறந்து பறந்து சண்டை போடுவது எப்படி??? போன்ற கேள்விகளுக்கு விஜயும் விக்ரமும் சொன்ன பதில்கள் கேள்விகேட்டவர்களை மேலும் குழப்பவே செய்தன.
பிரஸ்மீட் முடிந்தவுடன், ‘’கண்டிப்பா ஏதோ டி.வி.டி.தான் மச்சி. ரெண்டே நாள்ல கண்டுபுடிச்சிக்காட்டுறேன் பாரு’’ என்கிற ரீதியில் நிருபர்கள் சற்று உரக்கவே பேசிக்கொள்ள, விக்ரம், விஜய், தனஞ்செயன் முகங்களில் ஒருவித பீதி தாண்டவமாட ஆரம்பித்தது.