இன்றைய தேதிகளில் ஒரு பாடலையோ, சண்டைக்காட்சியை மட்டுமே 45 நாட்களில் எடுக்கும் இயக்குனர்கள் மத்தியில், இயக்குனராக தனது அரை சதத்தை முடிப்பதற்காக, மீண்டும் அதே 45 நாட்களில், மொத்தப்படத்தையும் முடிக்கும் உத்வேகத்துடன் களம் இறங்குகிறார் இயக்குனர் மணிவண்ணன்.
இடையில் சில மாதங்கள் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த மணிவண்ணன், படங்களில் நடிப்பதைக்கூட சுத்தமாக கைவிட்டிருந்தார். உடல் நலம் தேறி அவர் சற்று தெம்பானதை அறிந்த இயக்குனரும் நடிகருமான சீமான், தன்னை படம் இயக்கச்சொல்லி தேடிவந்த தயாரிப்பாளர் ஒருவரை அழைத்துக்கொண்டு, அதே படத்தை தன்னை ஹீரோவாக வைத்து இயக்கும்படி மணிவண்ணனிடம் கேட்டுக்கொண்டாராம்.
தனது பட இயக்கப்பட்டியல் 49 ஆக ஏன் தொக்கி நிற்கவேண்டும் என யோசித்த மணிவண்ணன் சீமானின் வேண்டுகோளுக்கு சம்மதிக்க, சில தினங்களுக்கு முன்பு டிஸ்கசன் தொடங்கியது.
மணிவண்ணனின் முன்னாள் உதவி இயக்குனர் என்ற அடிப்படையில் கதைவிவாதத்தில் சீமானும் கலந்துகொள்ள, ஒரு வார ஓட்டத்துக்குப் பிறகே, ஏன் அமைதிப்படையின் இரண்டாம் பாகத்தை எடுக்கக்கூடாது என்று யோசித்தார்களாம்.
இந்த யோசனையைச்சொன்ன சீமான், ’அப்படியே படத்தில் வில்லனாக சத்யராஜ் நடித்தால் பெரிய எதிர்பார்ப்பு உண்டாகும். பேசிப்பாருங்களேன்’ என்று மணிவண்ணனை தூண்டிவிட்டாராம்.
‘’ ஏணுங்க சத்யாராஜுங்களா? நான் மணி பேசுறனுங்க’’
‘’ஆஹா மணியண்ணனுங்களா. குரல் தெளிவா இருக்கே. நல்லா தேறீட்டீங்க போலருக்கு. ரெம்ப சந்தோஷம்’’
‘’அப்புறங்க. காலம்போன கடைசியில நம்மளோட 50 வது படத்தையும் இயக்கி முடிச்சிராமுன்னு’’
‘’ஆஹா பேஷாப்பண்ணிடலாம். எப்ப ஷூட்டிங்னு சொல்லுங்க?’’
‘அதுல ஒரு சின்ன மேட்டர். புரடியூசரை சீமான் தம்பி தான் கூப்பிட்டு வந்ததால, படத்துல அவர் ஹீரோவா நடிச்சி, நீங்க வில்லனா நடிக்கனுமுன்னு ஆசைப்படுறாரு’’
‘’ எக்ஸ்கியூஸ்மி நான் யாரோ மணிவண்ணன்னு ஒருத்தர்கிட்ட பேசிக்கிட்டிருக்கதா நெனச்சி, இவ்வளவு நேரமும் பேசிக்கிட்டிருந்துட்டேன். ஸாரி ராங் நம்பர். பை த பை என் பேரு கூட சத்யராஜ் இல்லை.’’