‘’ நான் ஈ’ படம் சம்பந்தமாக தயாரிப்பாளர்கள் சென்னைக்கு அழைத்த எந்த நிகழ்ச்சியிலுமே கலந்துகொள்ளாமல் தவிர்த்ததற்கு ஒரே காரணம் ‘நான்’ யார் என்பது கூட உங்களுக்கு தெரியாத போது எப்படி சந்திப்பது? என்ற தயக்கம்தான். இப்போது ‘நான் ஈ’ யின் மாபெரும் வெற்றி தமிழ்த்திரப்பட உலகிலும் எனக்கு நல்ல அடையாளத்தைக்கொடுத்திருப்பதில் எனக்கு மிகவும் சந்தோஷம். அந்த மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்துகொள்ளவே சென்னைக்கு ஓடோடி வந்தேன்.’’
ஹோட்டல் கிரீன் பார்க்கில் நேற்று மாலை நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இப்படி உற்சாகமாக தனது உரையை ஆரம்பித்த ‘நான் ஈ’ வில்லன் சுதீப், சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாக சுவாரசியமான, தனது முந்தைய சினிமா அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.
‘’நான் சினிமாவுக்கு வந்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. நான் கதாநாயகனாக 2007-ல் நடித்த படம் சூப்பர் ஃப்ளாப். மூன்று நாட்கள் கூட ஓடவில்லை. அப்படியே உடனே டி.வி.சீரியல்கள் பக்கம் ஓடிவிட்டேன்.
‘சேதுவின்’ கன்னட ரீமேக்கான ‘கிச்சா’தான் என்னை நடிகனாக்கியது என்று சொல்லவேண்டும். அந்தப்படத்தை கன்னடத்தில் ரீ-மேக் பண்ணவேண்டும் என்று வந்தபோது, கதைக்காக மொட்டை அடிக்கவேண்டும் என்பதற்காக எல்லா ஹீரோக்களும் ஒதுங்கினார்கள். நானோ, அந்தப்படத்தில் நடிப்பதற்காக தலைமுடியை அல்ல, எதைவேண்டுமானாலும் தியாகம் செய்ய தயாராக இருந்தேன்.
‘நான் ஈ’ படம் குறித்து பேச ராஜமவுலி என்னை ஹைதராபாத்துக்கு அழைத்தபோது, ‘’ ஹீரோவாக வெற்றிகரமாக இருக்கும்போது நீ ஏன் வில்லனாக நடிக்கவேண்டும் ?’ என்று என் நண்பர்கள் பலரும் கேட்டார்கள். அதுகூட பரவாயில்லை. ராஜமவுலி கதை என்ற பெயரில் என்னிடம் சொன்னது என்ன தெரியுமா? ஒரு பையனும், பொண்ணும் காதலிக்கிறார்கள். அந்தப்பொண்னை உனக்கும் புடிக்கிறது. எனவே அவளை அடைய நீ அவனை கொன்றுவிடுகிறாய். அப்புறம் அந்தப்பையன் ஈயாக பிறந்து வந்து உன்னை டார்ச்சர் பண்ணிக்கொல்லுகிறான்’ கதை என்று என்னிடம் அவர் சொன்னது அவ்வளவுதான்.
எனக்கு கதையைப் பற்றி ராஜமவுலியிடம் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஆனாலும் அவர் படத்தில் வேலை செய்ய விருப்பம் இருந்ததால் அவர் மேல் நம்பிக்கை வைத்து நடிக்க ஒப்புக்கொண்டேன். இன்றைக்கு அந்தப்படத்தால் ‘ஈ’ டீமைச்சேர்ந்த அனைவருமே இந்திய அளவில் புகழ்பெற்றுவிட்டோம் என்றால் அதன் முழு பெருமையும் ராஜமவுலியையே சேரும்.
படம் ரிலீஸாகி ஒரு சில தினங்கள் ஆகியிருந்தன. அப்போது நான் எனது நண்பர் மற்றும் ஒரு தயாரிப்பாளருடன் பேசிக்கொண்டிருந்தேன். திடீரென்று தயாரிப்பாளரின் செல்போன் அடிக்கவே அவர் ஒருசில வார்த்தைகள் பேசிவிட்டு, ‘நீ பேசு’ என்று சைகையில் சொன்னபடி போனை என்னிடம் கொடுத்தார். நானும் சைகையிலேயே எதிர்முனையிலிருப்பது யாரென்று கேட்க, அவர் அதற்கு பதில் சொல்லாமல் ‘நீ பேசு’ என்று என்னை மறுபடியும் வலியுறுத்த , நான் போனில் காதை வைத்தால் எதிர்முனையில் ’அவர்’. எனக்கு மிகவும் பரிச்சயமான குரல். எனது நடிப்பை மனதாரப்பாராட்டுகிறார். ஆஸ்கார் கிடைத்ததுபோல் மகிழவேண்டிய பாராட்டு.
ஆனால் எதிர்முனையில் இருப்பது அவர்தானா? எனது நண்பர்கள் யாராவது அவரைப்போல் மிமிக்ரி பண்ணுகிறார்களா என்று குழப்பம் ஏற்பட்டு ஒருகட்டத்தில் ‘ஆர் யூ மிஸ்டர் ரஜினிகாந்த்?’ என்று கேட்டுவிடலாமா என்றுகூட நினைத்துவிட்டேன். ஆனால், அவர் மேலும் சில நிமிடங்கள் பேச்சைத்தொடர்ந்தவுடன், எனது சந்தேகம் நீங்கி பரவசத்துக்கு ஆளாகிவிட்டேன்’’.
சுதீப் ஒரு இயக்குனரும் கூட என்பதால், தனது அனுபவங்களை திரைக்கதைக்கான சுவாரசியத்துடன் பகிர்ந்துகொண்டார்.