பழைய சினிமா வியாபாரம், பல்வேறு ரூட்டுகளில் சூடுபிடிக்கத்துவங்கியுள்ள நிலையில், 2013ல் வெளியான திரைப்படங்களின் பட்டியலை திரு. பிலிம் நியூஸ் ஆனந்தன் வெளியிடும்போது, அதில் ’நேரடி படங்கள் -35, மொழிமாற்றுப் படங்கள் -45, டிஜிடலைஸ் பண்ணி, 3-டி பண்ணி, ரீ-மேக் பண்ணி, மற்றும் இன்னும் என்னென்னவோ பண்ணி வெளியிடப்பட்ட பழைய படங்கள்-65’ என்று வந்தாலும் யாரும் ஆச்சரியப்படத்தேவையில்லை. அந்த அளவுக்கு ஆளுக்கொரு மூலையில் பழைய படங்களை தூசு தட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
இதில் லேட்டஸ்டாக சிவாஜி ரசிகர்களுக்கு ‘கர்ணனை’ விட சுவாரசியமான செய்தி’ 80-களின் இறுதியில் ‘விஸ்வநாதக நாயகுடு’ என்ற சிவாஜியின் படம் மிகவிரைவில் தமிழில் ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது.
பிரபல தெலுங்குப்பட இயக்குனர் தாசரி நாராயணராவ் இயக்கத்தில், தெலுங்கில் பெரும் வெற்றிபெற்ற, நாகம நாயக்கர் என்ற பாத்திரத்தில் சிவாஜி நடித்த இப்படம் என்ன காரணத்தாலோ,அப்போது தமிழில் ரிலீஸ் செய்யப்படவில்லை. இத்தனைக்கும் அப்படத்தின் தமிழ் டப்பிங்கை சிம்மக்குரலோன் படம் முடிந்த உடனேயே பேசி முடித்திருந்தார்.
இப்படத்தின் தயாரிப்பாளர் பிரசாத், இது குறித்து கூறும்போது,’ கர்ணன்’ படத்துக்கு கிடைத்த வரவேற்புதான் இத்தகைய முடிவை எடுக்க காரணமாயிருந்தது. அப்படத்தின் வசூல் நிலவரம் கேட்டவுடனேயே, ‘விஸ்வநாதக நாயுடு’ படத்தை டிஜிடலைஸ் பண்ணி, கலர் கரெக்ஷன் செய்வது போன்ற வேலைகளில் இறங்கி விட்டோம். சிவாஜியே அவரது சொந்தக்குரலில் டப்பிங் பேசியிருப்பது எங்களுக்கு கூடுதல் உற்சாகம் தரும் செய்தி. மிகவிரைவில் சிவாஜி ரசிகர்கள் இதுவரை காணாத விருந்தை அவர்களுக்கு படைப்போம்’’ என்கிறார்.
இதுமாதிரி போஜ்பூரி, மலாய், மொழிகள்ல தலைவர் நடிச்ச படம் இருந்தாலும் சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்கப்பா பண்ணுங்க.