இன்றைக்கு சினிமாவின் சகலதுறைகளிலும் வாரிசுகள் நிரம்பி வழிகிறார்கள். அதிலும் நடிகர்களில் சொல்லவே வேண்டாம். நாலு ஃபிளாப் கொடுத்தாலும், தொடர்ந்து நடிக்கவைத்து நாம் ஏற்றுக்கொள்ளும்வரை டார்ச்சர் தொடர்கிறது.
அந்த வகையில் சினிமா பின்னணி எதுவும் இன்றி, சுமார் பத்து வருட போராட்டத்துக்கு அப்புறம் ‘அட்டக்கத்தி’ மூலம் ஹீரோ ஆகியிருக்கிறார் வடசென்னையைச் சேர்ந்த தினேஷ்.
‘ எனக்கு எந்தவிதமான சினிமா பின்னணியும் கிடையாது. எனது பதினெட்டாவது வயதில் நடிப்பு ஆசையுடன், சினிமா வாய்ப்பு தேடி அலைய ஆரம்பித்துவிட்டேன். ஆனால் நடிப்பு சான்ஸ் கேட்டால் நக்கல் அடிப்பார்களோ என்று பயந்து பாலுமகேந்திரா சாரிடம் கேமரா உதவியாளராக சேர ஆசைப்பட்டேன். வாய்ப்பு கிடைக்கவில்லை.
பின்னர் நாடகங்களில் ஏற்பட்ட ஈடுபாட்டால், முதலில் லைட்டிங் மேனாக வேலைசெய்ய ஆரம்பித்து, மெல்ல என்னை நாடக நடிகனாக வளர்த்துக்கொண்டேன்.
இந்த சமயத்தில் இயக்குனர் வெற்றிமாறனின் அறிமுகம் கிடைத்து அவரது ‘ஆடுகளம்’ படத்தில் ஒரு சிறிய கேரக்டர் கிடைத்தது. இதன் தொடர்ச்சியாகவே இயக்குனர் ரஞ்சித் என்னை அழைத்து போட்டோ ஷூட் நடத்தினார். அந்த ஷூட் நடக்கும்போது, அது ஹீரோ கேரக்டருக்காக நடக்கிறது என்பது சத்தியமாக எனக்குத்தெரியாது.
சும்மா ஒரு பத்து வரிகளில் சொல்லிவிட்டேனே, இது பத்துவருட வலிகளுடன் நடந்த போராட்டம்.
சினிமா வாய்ப்பு தேடி அலைந்த வேலைகளில், கொஞ்சமாவது காசு சம்பாதித்து வண்ணாரப்பேட்டையிலுள்ள எனது பெற்றோர்களுக்கு மணி ஆர்டர் பண்ணவேண்டும் என்று விரும்புவேன். ஆனால் அப்படி ஒருபோதும் அனுப்ப முடிந்ததே இல்லை. ஆனாலும் என் வீட்டில் தொடர்ந்து நம்பிக்கை வைத்து என்னை ஆதரித்துக்கொண்டே இருந்தார்கள்’’ என்று நெகிழ்கிறார் தினேஷ்.
முக்கிய நகரங்கள் தவிர்த்து, மற்ற நகரங்களில் படம் சுத்தமாக ஊத்திக்கொண்டாலும், தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்துள்ள தினேஷ்,’ திவ்யாவா த்ரிஷாவா என்று அலைபாயாமல், கவனத்தை அடுத்தடுத்த கதைகளைத்தேர்வு செய்து நடிப்பதில் மட்டும் செலுத்தினால், தமிழ் சினிமாவில் ஒரு அரை ரவுண்டு வருவதற்கான வாய்ப்புகள் தெரிகிறது.