கோடம்பாக்கத்தில் இப்போதெல்லாம் சின்னப்படங்கள் வியாபார சாத்தியம் எதுவுமின்றி சின்னாபின்னமாகிக்கொண்டிருக்க, பெரிய படாதிபதிகள் தங்கள் படத்தின் பட்ஜெட் குறித்து பொய்யும் புரட்டுமாய் சொல்லி திரையுலகையே முடக்கி வருகிறார்கள்.
‘’ இந்த வருடம், ‘தாண்டவம்’ ஷங்கரின் ‘ஐ’ மற்றும் இந்தி ‘டேவிட்’ ஆகிய படங்களின் வாயிலாக, என் தலையில் மட்டுமே 180 கோடி ரூபாய் வியாபாரம் கட்டப்பட்டுள்ளது’ என்று நடிகர் விக்ரம் ஒரு ஆங்கிலப்பத்திரிகையில் பெருமையடித்துக்கொண்டிருக்க, அடுத்து அதையும் விட ஒரு அண்டப்புளுகை தன் படத்துக்கு இணை வஜனம் எழுதும் ஜெயமோகன் மூலம் அவிழ்த்துவிட்டிருக்கிறார் இயக்குனர் மணிரத்னம்.
வெற்றிப் படம் கொடுத்தே பல ஆண்டுகள் ஆன மணிரத்னம் தனது வணிகப்படிப்பு மூளையை முற்றிலுமாக பயன்படுத்தி, தனது படத்துக்கான வியாபார எல்லைகளை விஸ்தரித்து அடுத்தடுத்த படங்களின் வியாபாரத்தை அதிகரித்துக்கொண்டே வருகிறார். அப்படி கடைசியாக மூன்றுமொழிகளில் சுமார் 85 கோடிக்கு விற்கப்பட்ட ‘ராவணன்’ அதில் கால்வாசியைக்கூட கரை சேர்க்கவில்லை.
கடந்த சில வருடங்களாக மணிரத்னத்தின் படங்களை வாங்கிய விநியோகஸ்தர்களில் பலரும் இயக்குனர் பாலாவின் லேட்டஸ்ட் படத்தலைப்பாகவே அலைந்துகொண்டிருக்கிறார்கள் என்பது கோடம்பாக்கம் அறிந்த நிதர்சனம்.
அந்த வரிசையில் தற்போது இயக்கிவரும் ‘கடல்’ படத்தையும் பெரிய வியாபாரம் செய்ய முடிவெடுத்த மணிரத்னம், சுமார் 10கோடி கூட செலவழிக்க வாய்ப்பில்லாத படத்தின் பட்ஜெட் 50 கோடி என்று அறிவிக்க வைத்திருக்கிறார். ’சிவப்பா இருக்கவன் பொய்சொல்ல மாட்டாண்டா’ என்று விநியோகஸ்தர்களை நம்ப வைப்பதற்காகவோ என்னவோ இந்த முறை தனது படத்தின் பட்ஜெட்டை அறிவிக்க அவர் தேர்ந்தெடுத்தது ஜெயமோகனை.
ரிடையர்டான அர்விந்த்சாமி தவிர மற்ற அனைவருமே புதுமுகங்கள் தானே? நல்ல நாளிலேயே மணிரத்னம் கம்பெனியில் சம்பளம் தர மூக்கால் அழுவார்கள்? அப்புறம் எப்படி எப்படி இவ்வளவு பெரிய பட்ஜெட் ஆகிறது என்று கேட்டால், ‘கதையில் எழுதுவதற்கு மணிரத்னம் பெரிய சுதந்திரம் கொடுத்திருக்கிறார்’ என்று அவரையும் மிஞ்சும் ஆகாசப்புளுகை அவிழ்த்துவிடுகிறார் பொயமோகன்.
அப்படியானால் படத்துக்கு செலவான பத்து கோடி தவிர மீதி 40 கோடியை தனது வஜனத்துக்கு சம்பளமாக வாங்கினாரா?
’படத்துக்கு வஜனம் எழுதுனமா, துட்டை வாங்குனமான்னு இல்லாம, ஏன் இந்த ஆளு விநியோகஸ்தர்களோட வயித்தெரிச்சலை கொட்டிக்க வர்றாரு?’ என்று புரடக்ஷன் பொன்னுச்சாமி கேட்கும் கேள்விக்கு என்ன பதில் சொல்லப்போகிறார் பொயமோகன்?’