மதுபானக் கடை -1

சமீபகாலமாக படங்கள் பார்க்க நேருகிறபோது, படத்தை பார்ப்பதைவிட, அதன் இயக்குனர், ஹீரோ, ஹீரோயின், ஊரிலிருந்து வீறுகொண்டு கிளம்பி வந்த ஃபைனான்சியர் மாமன் மச்சான்ஸ் உட்பட அந்த டீமைச்சேர்ந்தவர்களைப் பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வம் படத்துக்கு படம் அதிகரித்துக்கொண்டே போகிறது.

அந்த சினிமாவின் கதைகளைவிட, அதனால் ஆட்கொல்லப்பட்டு, நாம் எழுதும் விமர்சனங்களைவிட அவர்கள் படம் எடுக்க வந்த, எடுத்த கதை கண்டிப்பாய் பலமடங்கு சுவாரசியமாக இருக்ககூடும் என்று உள்மனசு சதா சொல்கிறது.

அந்த ஆர்வத்தின் உச்சக்கட்டத்துக்கு அழைத்துச்சென்ற படம், நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் பார்த்த ‘ மதுபானக்கடை’ .

‘கோயமுத்தூர் வீதிகளில் குடித்துக்களித்த மலையாள இயக்குனர், ‘கலகக்கலைஞன்’ ஜான் ஆபிரஹாமின் நினைவைப்போற்றியபடியே முதல் ஆஃபை ஆரம்பிக்கும், படத்தின் முதல் கார்டே, நம்மை ராவான ரம் அடித்த அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.

‘இப்படத்தில் கதை என்று எதுவும் இல்லை.அப்படி இருப்பதாக கருதினால் அது உங்கள் கற்பனையே’

‘சரி இவிங்க வேற எதோ ஒரு முடிவோடதான் கிளம்பியிருக்காய்ங்க’ என்று மனதை திடப்படுத்திக்கொண்டுதான், மேற்படி படம் பார்க்க தயாராக வேண்டியிருக்கிறது.

படத்தின் இயக்குனரே, கதை என்ற ஒன்று இல்லை எனும்போது, அப்படி எதுவும் இல்லை என்று கொஞ்சமும் சமூகப்பொறுப்பு இல்லாமல் நாமும் விட்டுவிடமுடியுமா?

தமிழ்சினிமா இதுவரை காணாத புதியகளத்தில், தமிழ்சினிமா இதுவரை உருவாக்காத பாத்திரப்படைப்புகளுடன்,சில முன்னணி இயக்குனர்களின் தலையில் கூட இல்லாத புடைப்புகளுடன், உலக சினிமாக்கள் கூட செய்யத்துணியாத, க்ளைமேக்ஸ் என்ற ஒன்றே இல்லாமல் ஒரு படத்தை இயக்கியிருக்கிறார் கமலக்கண்ணன். [கமலுக்கு அண்ணன் என்று சொன்னால்கூட தப்பில்லை]

மதுபானக்கடை முதலாளி, அவரது மகளைக்காதலிக்கும் ஒருவன் உட்பட்ட மூன்று சப்ளையர்கள், சரக்குகளில் இருப்பதைப்போலவே வெரைட்டியாய் கடைக்கு வரும் குடிகார கஷ்ட’மர்கள் இவர்களைச்சுற்றி சுமார் ரெண்டு மணிநேரம் , டைரக்டர் வந்த ‘ரவுண்டு’ தான் இப்படம் என்று சொன்னால் சுதி சுத்தமாக விளங்கும்.

இந்தக்கதையை எடுக்க நினைத்த நாளிலிருந்து, படம் சம்பந்தப்பட்ட அனைவருமே பெக் போடாமல் எந்த வேலையையுமே செய்திருக்க மாட்டார்களோ? தினமும் ஷூட்டிங் ஸ்பாட்டில் டீ, காபிக்குப் பதில் குவார்ட்டர் கட்டிங் போட்டுவிட்டுத்தான் ‘ஸ்டார்ட்,மதுபானக் கடை - 2 கட்டே சொல்ல ஆரம்பித்திருப்பார்களோ என்று சந்தேகப்படும் உரிமை படம் பார்க்கும் சகலருக்கும் வருவது உறுதி.

ஏனெனில் படம், ஒரு மதுபானக்கடையின் ஒருநாள் தள்ளாட்டத்தை,ஒரு குடிகாரனுக்குரிய மனோபாவத்தோடே, எவ்வித விமர்சனமுமின்றி பதிவு செய்திருக்கிறது.

‘’நாம இன்னைக்கு நேத்தா குடிக்க ஆரம்பிச்சோம். சங்க காலத்திலிருந்தே குடிச்சிக்கிட்டிருக்கோம்’’

’அவ்வையாரும், அதியமானும் ஒண்ணா சேர்ந்து குடிச்சிருக்காங்க தெரியுமில்ல?

[ அட பக்கிங்களா, சரக்கடிச்சிட்டுத்தான் ‘ஆத்திச்சூடி’ எழுதுனீங்களா? சுட்ட பழம் வேணுமா சுடாத பழம் வேணுமான்னு கேட்டது சைடிஷ்ஷுக்குத்தானா?]

‘குடிகாரனை தனி ஆள்ன்னு நெனச்சிடாதீங்க. அவன் ஒரு சமூகம்’

‘’பத்து ரூபாய்க்கு தயாராகுற சரக்கை 100 ரூபாய்க்கு நம்ம தலையில கட்டி, நாம தள்ளாடுறதுனாலதான் கவர்மெண்டே ஸ்டெடியா போய்க்கிட்டிருக்கு’

இப்படி பொறி கலங்க வைத்து, வெறி ஏற்றும் வசனங்கள் படம் முழுக்க தறிகெட்டு அலைகின்றன.

பக்தர்களிடம் வசூலுக்கு கிளம்பும் ஸ்ரீராமரும், அவரது அள்ளக்கை அனுமனும் பாரில் ஷேம் கெட்டப்பில், சரக்கடித்து மூளை வறுவல், முட்டைப்பொடிமாஸ் கேட்டு திகைக்க வைக்கிறார்கள்.

இந்து அறநிலையத்தில் கோடிக்கணக்கில் பணம் குவிந்துகிடக்க, பாவம் போயும் போயும் பார் பையனிடம் ஒரு கட்டிங்’ கடன் கேட்கிறார் ராமர்.

‘காட்டை வித்து கள்ளு குடிச்சாலும் …ன் …ன் தான்’ என்று பெருமை பேசும் பிரபல சாதிக்காரர் ஒருவரை, சரக்கடிக்க வைத்து உடுக்கடித்து பேய் ஓட்டுகிறார்கள்.

பாரில் வேலை செய்யும் சிறுவனை வைத்து, குழந்தைத்தொழிலாளர் பிரச்சினையையும் அங்கங்கே சைடுடிஷ்ஷாக தொட்டுக்கொள்ள தவறவில்லை.

‘மனுஷன் கழிவை மனுஷன் அள்ளுற கொடுமைக்கு முடிவு கட்டுறவரைக்கும்.. என்று திடீரென்று தலித் அரசியல் பேசுகிறார்கள்.

இதே சீன்கள் ஏதாவது ரெகுலர் சினிமாக்காரர்களின் படத்தில் இருந்திருந்தால் இந்நேரம் குறைந்தது ஒரு டஜன் பஞ்சாயத்துகளாவது கிளம்பியிருக்கும் என்று சொல்லும் அளவில் பல விவ’காரமான காட்சிகள் படம் முழுக்க விரவிக்கிடக்கின்றன.

டிஜிட்டல் கேமராவில், ஏழ்மையான சினிமாவாகத் தயாரிக்கப்பட்டிருப்பதால் டெக்னிக்கலாக எதையும் எடைபோட்டுப்பார்க்கவேண்டிய அவசியம் இந்தப்படத்திற்கு ஏற்படவில்லை.

ஆனால், ’குடிகாரன் பேச்சு விடிஞ்சாலே போச்சி’ மாதிரி ஒரு கருத்தும் சொல்லாத இந்தப்படத்தின் நோக்கம்தான் என்ன?

இவர்கள் பாணியிலேயே சொல்வதானால் இது ஒரு நல்ல படமுமில்லை. கெட்ட படமுமில்லை.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.