இன்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் ‘ஆச்சரியங்கள்’ ஷோ முடிந்த சில நிமிடங்களிலேயே, உண்மையில் ஒரு மாபெரும் ஆச்சரியத்தை பத்திரிகையாளர்கள் சந்திக்க நேர்ந்தது.
இதே தியேட்டரில் படம் முடிந்தவுடன் ‘சிவாஜி 3டி’ ட்ரெயிலர் ரிலீஸ் நிகழ்ச்சி இருக்கிறது என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், அந்த நிகழ்ச்சியில்
ரஜினி வந்து கலந்துகொண்டு ஆச்சரியப்படுத்துவார் என்பது, ரஜினி வருவதற்கு சற்றுமுன்னர் வரை ஏ.வி.எம் மற்றும் பிரசாத் நிறுவனத்தினருக்கே தெரியாதாம்.
‘’ஏ அங்க பாருப்பா ரஜினி மாதிரி தெரியிது’
‘’ அட நீ வேற அவராவது வந்துறகிந்துறப்போறாரு’
என்று பின்வரிசையில் சில சந்தேக டயலாக்குகள் ஓடிக்கொண்டிருக்க, திடுதிப்பென முண்டியடித்து அவரை சூழ்ந்துகொண்ட புகைப்படக்காரர்களே அவர் ரஜினிதான் என்பதை உறுதி செய்தனர்.
ரஜினியின் வருகை எதிர்பாராதது என்பதால் ஸ்டேஜ் ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படாத நிலையில், திரைக்கு முன்னால் போடப்பட்ட சாதாரண பிளாஸ்டிக் சேர்களிலேயே ரஜினி, தோட்டாதரணி, ஏ.வி.எம். சரவணன் உள்ளிட்டோர் அமர்ந்துகொள்ள தொடக்க உரையை நிகழ்த்திய எஸ்.பி.முத்துராமன் ரஜினியின் உடல்நிலை குறித்து கிளப்பப்படும் வதந்திகளுக்காக மிகவும் வருந்தினார்.
‘’ வதந்திகள் கிளப்பப்பட்ட இருதினங்களும் ரஜினியுடன் தான் நான் இருந்தேன். அவர் முன்னெப்போதைக்காட்டிலும் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறார். மறுபிறவி எடுத்துவந்த நம் ரஜினிக்கு இனி சாவே இல்லை’’ என்று உணர்ச்சி வசப்பட்டார் எஸ்.பி.எம்.
அடுத்து அனைவருக்கும் 3 டி கண்ணாடிகள் வழங்கப்பட்டு ‘சிவாஜி 3டி’ தமிழ்,தெலுங்கு மற்றும் இந்தி ட்ரெயிலர்களும், பூம்பாவாயாய் ஆம்பல் ஆம்பல்’ பாடலும் திரையிடப்பட்டன.
400 பிரசாத் டெக்னீஷியன்கள், 24 மணிநேர ஷிஃப்ட், ஒரு வருட உழைப்பு என்று சொல்லப்பட்ட 3டி சிவாஜி’ ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமல்ல, பொதுவான சினிமா ரசிகர்களும் பரவசப்படும் ஒரு அனுபவம் தான்.
‘ஆம்பல் ஆம்பல்’ பாடலில் ஆப்பிளைக் கடித்துவிட்டு ரஜினி தூக்கிப்போடுவது அப்படியே நம் கண்ணைப் பதம் பார்த்துவிட்டுச்செல்கிறது.
விரும்பினால் கிள்ளிக்கொள்ளலாம் என்கிற அளவில், ஷ்ரேயாவின் வாளிப்பான இடுப்பு நம் கைக்கெட்டும் தூரத்தில்.
இது எப்படி சாத்தியமானது என்று பிரசாத் டெக்னீஷியன்கள் எளிமையாக விளக்கினார்கள்.
இறுதியில் பத்திரிகையாளர்களின் சில கேள்விகளுக்கு பதில் சொன்ன ரஜினி, ‘’ எனக்கே இந்த’சிவாஜி 3டி’ தொடர்பான தகவல்கள் மூன்று வாரங்களுக்கு முன்புதான் தெரியும்.
‘ என்னிடன் விசயம் என்னவென்று சொல்லாமல் திடீரென தியேட்டருக்கு வரச்சொல்லி வேலை முடிந்திருந்த மூன்று ரீல்களை மட்டும் போட்டுக்காட்டினார்கள். அப்படியே ஆடிப்போய்விட்டேன். ஆம்பல் ஆம்பல் பாடலை மட்டுமே தொடர்ந்து மூன்றுமுறை போடச்சொல்லி பார்த்தேன்.
நான் உடல்நலம் இல்லாமல் இருந்தபோது எனக்காக பிரார்த்தனை செய்த தமிழக மக்களுக்கு எதுவும் செய்யாமல் போய்விடுவோமோ என்ற கவலையை இந்தப்படம் கண்டிப்பாக தீர்க்கும்’’ என்று ரொம்பவே நெகிழ்ந்தார்.
இன்னும் ஒரு மாதவேலைகளே மிச்சமிருக்கும் நிலையில், அக்டோபர் மாதம் ‘தி மொட்டை பாஸ் சிவாஜியை’ இன்னும் கிட்ட நின்று தரிசிக்கலாம்.