”கலைஞர் சிறையில் அடைக்கப்பட்டதை விமர்சிக்கும் வகையில் நான் வைத்த டைட்டில் – ‘நீதிக்கு தண்டனை’ ! அதைக் கேட்டு புன்முறுவல் பூத்த கலைஞர், அந்தக் கதையை கேட்டு, அதற்கேற்ப வசனங்களை எழுதித் தந்தார்.
’தினசரி ஜெயிலுக்குப் போய் வசனங்களை வாங்கி வந்து, படப்பிடிப்பு நடத்தினோம். கலைஞர் ஒவ்வொரு காட்சிக்கும் வசனம் எழுதும்போதும், இடதுபுறம், பாத்திரங்களின் ஆக்ஷன் மற்றும் முகபாவங்களைக் குறிப்பிட்டே எழுதுவார். எனினும் ஒவ்வொரு காட்சியின் முடிவிலும் பின்குறிப்பு என்று குறிப்பிட்டு, ’தேவைப் பட்டால் இயக்குநர் மாற்றிக் கொள்ளலாம்’ என்று தவறாமல் குறிப்பிடுவார்.
“வசனம் எழுதியதோடு நின்று விடாமல், எடிட்டிங்கிற்கு கூட வந்தார் கலைஞர். அந்தப் படத்தில் எஸ்.எஸ்.சந்திரனின் காமெடி டிராக் ஒன்றை, ஆங்காங்கே வருகிற மாதிரி வைத்திருந்தோம். கலைஞர் அதைப் பார்த்து விட்டு, ‘படத்திற்கு இந்த நகைச்சுவைப் பகுதி இடையூறாக அமையும்’ என்று குறிப்பிட்டார். ‘அதை தூக்கிவிட்டால், படம் ரொம்ப சீரியசாகத் தெரியுமே’ என்று நான் தயங்கினேன்.
“ஆனால் கலைஞரோ ‘அது இருந்தாலும் படம் வெற்றி பெரும். நான் மறுக்கவில்லை. ஆனால்,அதை எடுத்து விட்டால், படம் அதை விட பெரிய வெற்றியைப் பெரும்’ என்றார். அவரது கூற்றுப்படியே அந்த காமெடி ட்ராக்கை மொத்தமாக அகற்றி விட்டு, படத்தை வெளியிட்டோம். படமும் அவர் சொன்னபடியே சூப்பர் ஹிட் ஆகியது.
“அந்தப் படத்தில் ஒரு பாடல் காட்சிக்கு,பொருத்தமான பாடல் அமையவில்லை. ராதிகா தனது பெண் குழந்தையை வர்ணித்து பாடுவதாக அந்தப் பாடல் வரும். அதே நேரம் ராதிகாவின் கணவரான நிழல்கள் ரவியும் மகளை வர்ணிக்கிற மாதிரி, மனைவியை வர்ணிப்பதான சிச்சுவேஷனமிருந்து பல பாடல்களை வாங்கியும் எங்களுக்கு திருப்தி தரவில்லை. ஒரு நாள் இதுபற்றி கலைஞரிடம் கூறிக் கொண்டிருந்தபோது , ‘டக்’ கென்று ‘பாரதியாரின் ‘சின்னஞ்சிறு கிளியே’ பாடலை போடு. பொருத்தமாக இருக்கும்’ என்றார்.
“அவர் சொன்னபடியே அந்தப் பாடல் ரொம்ப பொருத்தமாக இருந்தது. எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் அந்தப் பாடல் சூப்பர் ஹிட்டும் ஆனது” என்றார் எஸ்.ஏ.சந்திரசேகர்.
“நீதிக்கு தண்டனை’ படத்திற்கு பிறகும் ‘சட்டம் ஒரு விளையாட்டு’ ‘இது எங்கள் நீதி’என்று கலைஞர் வசனத்தில் தொடர்ந்து படங்களை இயக்கினார்.எஸ்.ஏ. சந்திரசேகர். அவர் இயக்கிய ‘ நான் சிகப்பு மனிதன்’ படத்தைத் தவிர, பிற படங்களில் பெரிய ஹீரோக்கள் கிடையாது. பெரிய பட்ஜெட் இருக்காது. இப்படி குறைந்த செலவில் பல ஹிட்களை கொடுத்தார் அவர்.
அதே காலகட்டத்தில் இவரைப் போலவே குறைந்த பட்ஜெட்டில், பல சூப்பர் ஹிட் கலெக்ஷன் படங்களை கொடுத்தவர் இராம. நாராயணன். ஒருபுறம் பெரிய பட்ஜெட்களில் படமெடுத்து விட்டு, இது லாபத்தில் முடியுமா, நஷ்டத்தில் முடியுமா என்ற திகிலில் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் இருக்கும் போது மறுபுறம் இராம.நாராயணன் படமா, நஷ்டத்திற்கு வாய்ப்பேயில்லை என்ற முத்திரையோடு மினிமம் கியாரண்டி படங்களை தந்தவர் அவர்.
1980 முதல் 2005 வரை 115 படங்களை இயக்கியுள்ள இராம. நாராயணன், “ எனது ஒரு படம் கூட செலவில் ஒரு கோடியைத் தொட்டதில்லை” என்கிறார். தனது ‘சோறு’ படத்தை வெரும் 17 நாட்களில் 5 லட்ச ரூபாய் செலவில் எடுத்துள்ளார். ஷூட்டிங் என்று புறப்பட்டால், பெரும்பாலும் ஒரே ஷெட்யூல்தான்.20 நாட்கள், 25 நாட்களில் படத்தை முடித்துக் கொண்டு வந்து விடுவார்.
1985 – ஆம் ஆண்டு 11 படங்களையும், 1986 – ஆம் ஆண்டு 12 படங்களையும் இயக்கி சாதனை படைத்தவர் இராம். நாராயணன். ஏறக்குறைய மாதத்திற்கு ஒரு படம். ஒரு பக்கம் ஒரு படத்தின் ஷூட்டிங் பகலில் நடக்கும். மறுபுறம் மாலையில் மற்றொரு படத்தின் எடிட்டிங், டப்பிங், ரீ-ரெக்கார்டிங் நடந்து கொண்டிருக்கும்.
அப்படி துரிதமாக, சிக்கனமாக, படங்களை எடுத்து தயாரிப்பாளர்களை குளிர்வித்தவர் அவர். இன்றைக்கு பூஜைக்கே கோடிக்கணக்கில் செலவு செய்கிறார்கள். இராம. நாராயணனோ, தனது மொத்தப் படச் செலவே இதுவரை ஒரு கோடியை தொட்டதில்லை என்று சொல்வது, உண்மையிலேயே வித்தியாசமான விஷயம் தான்.
”சிறுகக் கட்டி பெருக வாழ் – என்று எங்கள் ஊர்ப்பக்கம் பழமொழி சொல்வார்கள். அதுதான் என் கொள்கையாகி விட்டது. ஒரு டெய்லர் பத்து தடவை அளந்து, ஒரு தடவை கத்திரிக்கணும். அது தான் சரியா இருக்கும். பத்து தடவை வெட்டி விட்டு, ஒரு முறை அளக்கக் கூடாது. ஒரு படத்தை முறையாக திட்டமிட்டு எடுத்தால், நாட்கள் குறையும்; ஃபிலிம் செலவும் குறையும்.
”ஒரு எழுத்தாளரரே எடிட்டர் போல் சிந்திக்க வேண்டும். ஒரு டைரக்டரே எடிட்டர் போல் சிந்திக்க வேண்டும்.எழுதும் போதும், இயக்கும் போதும் தேவையானதை அளந்து, தேவையில்லாத்தை வெட்டி விட்டால் 22 ஆயிரம் அடியில் படத்தை முடித்து விடலாம். இதுதான் எனது ஒளிவுமறைவில்லாத டெக்னிக்” – என்கிறார் இராம. நாரயணன். எஸ்.ஏ. சந்திரசேகரைப் போலவே இராம நாராயணனும் பெரிய நடிகர்களை தேடிப் போனதில்லை.
”ஒரு இயக்குநர் ஒரு பஸ்ஸை இயக்குபவராக இருக்க வேண்டும். ஏற்கெனவே வேகமாக ஓடுகிற பஸ்ஸை துரத்திப் போய் ஏறக் கூடாது. எந்த நடிகராயிருந்தாலும், ஒரு வாரம் அல்லது இரண்டு வாரம்தான், படம் அவருக்காக ஓடும். அதற்குப் பிறகு நல்ல சுவாரஸ்யமான கதையிருந்தால் மட்டுமே அப்படம் தப்பிக்கும். எனவே, ஒரு படத்தை தூக்கி நிறுத்துவது நடிகரின் கண்ணில் தீட்டப்படும் மை அல்ல; ஒரு எழுத்தாளன் பேனாவிலிருந்து உதிரும் மைதான்.
”நான் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருக்கிறேன். சில தயாரிப்பாளர்கள பெரிய, பெரிய நடிகர்களை தொங்கிக் கொண்டு திரிவது, உண்மையில் வேதனையாக உள்ளது.
’ஆரம்பம் முதலே எனக்கு இதில் உடன்பாடு இல்லாததால்தான், பெரும்பாலும் பெரிய நடிகர்களை வைத்து நான் இயக்கவில்லை. அதற்கு பிறகு ஷாம்லி என்ற குழந்தையை வைத்தும், தேவர் மறைவிற்குப் பிறகு விலங்குகளை வைத்தும் பல படங்களை இயக்கி, அவற்றை வெற்றிப் படங்களாக்கினேன். குழந்தை நட்சத்திரம், விலங்குகள் போன்றவற்றை வைத்து படமெடுப்பதில் ஒரு வசதியுள்ளது. அவர்கள் எல்லாம் என் கன்ட்ரோலில் இருப்பார்கள்.
”சில பேர் ரொம்ப சர்வ சாதாரணமாக ‘அவர் என்ன… வெறும் மிருகங்களை வெச்சு படம் எடுக்கிறவர் தானே’ என்று கூறி விடுவார்கள்.ஆனால், மிருகங்களை வைத்து படமெடுப்பதில் எவ்வளவு சிரமங்கள் உள்ளன தெரியுமா?
”மூன்று வருடத்திற்கு முன்னால் நான் இயக்கிய ‘வேங்கையின் மைந்தன்’ படத்தில் ஒரு சிறுத்தைக்கு முக்கிய ரோல். ஒரு சிறுவன் அந்த சிறுத்தையை நாய் போல் சங்கிலியைப் பிடித்து அழைத்துக் கொண்டு, ஒரு கடை வீதியில் பாட்டுப் பாடியபடி வர வேண்டிய காட்சியை எடுக்கவேண்டும். தமிழகத்தில் அனுமதி தர மறுத்து விட்டனர். எனவே பெங்களூரின் முக்கியமான சாலையான எம்.ஜி.ரோடில் ஷூட்டிங் நடத்தினோம்.
”காலை 7 முதல் 9 மணி வரையே அனுமதி தரப் பட்டிருந்தது. சுமார் 7.30 மணிக்கே ட் ராபிஃக் கொஞ்சம், கொஞ்சமாக அதிகரிக்க ஆரம்பித்தது. அந்த நேரம் பார்த்து அந்தசிறுவன் சிறுத்தையை பிடித்திருந்த சங்கிலியை நழுவ விட்டு விட்டான். சிறுத்தை, விட்டால் போதும் என்று நகர வீதிகளில் பாய்ந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் கண்ணை விட்டும் மறைந்தது.”
[ திருப்பங்கள் தொடரும்…..]